
Research Article Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 December 2018
GMT Time uploaded in London – 7-25 am
Post No. 5835
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ஒருவனைக் குற்றவாளியா இல்லையா என்பதைத் தீர்மானிக்க, ஆதிகாலத்தில் பல விநோத முறைகள் கையாளப்பட்டன. இதே போல எது உண்மை என்பததைத் தீர்மானிக்கவும் தண்ணீர் அல்லது தீ (அக்னி) பயன்படுத்தப்பட்டது. இது தொடர்பாக மநு என்ன சொல்கிறார் என்பதை முதலில் காண்போம். மநுவுக்குப் பின்னர் வந்த பாபிலோனிய மன்னன் ஹமுராபி, தமிழ் நாட்டு சமணர்கள் (ஞான சம்பந்தரின் அனல் வாதம் , புனல்வாதம்), மஹாபரத அஷ்டவக்ரர்- பண்டி மோதல் ஆகியவற்றைக் கண்போம்.
மநு தர்ம நூலில் ஸரஸ்வதி நதி
மநு தர்ம சாஸ்திரத்தில், ஸரஸ்வதி நதி பற்றி குறைந்தது மூன்று இடங்களில் பேசுகிறார்.
இரண்டாம் அத்தியாயத்தில் வேத பூமியின் எல்லைகளை வரையறுக்கையில் புண்ய நதிகளான ஸரஸ்வதி- த்ருஷத்வதி ஆகியவற்றுக்கு இடையேயான பிரதேசமே பிரம்மாவர்த்தம் (வேத பூமி என்பார்).மனு-217
பதினோராவது அத்தியாயத்தில் பிராமணனைக் கொன்றவர் செய்யும் பரிகாரங்களை சொல்லுகையில் ஒருவன் யாகத்துக்கான உணவுகளை மட்டும் உட்கொண்டு சரஸ்வதி நதி ஓடும் தூரம் முழுவதையும் கடக்கலாம்; எப்படியென்றால் நீரோட்டத்துக்கு எதிராக நடந்து சென்று கடக்க வேண்டும் – மனு 11-78
அதாவது நடக்க முடியாத தூரம் அல்லது மிகக்கஷ்டமான காரியத்தைச் செய்தல்– இதிலிருந்து ஸரஸ்வதி நதி பிரவாஹம் எடுத்துச் சென்றதை அறியலாம், அமெரிக்க நாஸா புகைப்படங்களும் இந்திய அணுசக்தி ஆராய்ச்சிகளும் ஸரஸ்வதி நதி ஓடிய காலம் கி.மு.2000க்கு முன்னரே; அதன் பின்னர் வற்றிவிட்டது என்பதால் ஹமுராபிக்கும் முன்னர் மநு வாழ்ந்தது புலனாகிறது.அது மட்டுமல்ல அந்தக் காலத்திலேயே ஒருவன் நீர் சோதனை மூலம் தனது அப்பாவித்தனத்தை நிரூபிக்கலாம் அல்லது பரிகாரம் செய்யலாம் என்பதை அறிய முடிகிறது. அது மட்டுமல்ல முந்திய ஸ்லாகங்களில் ஒருவன் மூன்று முறை தலை கீழாகத் தீயில் பாய்ந்தும் பாவத்தைப் போக்கலாம் என்று சொல்லுகிறார். உண்மையில் ஒருவன் குற்றம் இழைக்காவிடிலோ அல்லது அவர் கொலை செய்த சூழ்நிலை தற்காப்பின் பொருட்டோ என்று இருக்குமானால் அக்னியும் தண்ணீருமே அவரை ஒன்றும் செய்யாது என்பது தாத்பர்யம்.

ஹமுராபியின் சட்டம்
ஹமுராபி சட்டவிதி எண்.2
“ஒருவன் மாய மந்திர பேய் பிசாசு,பில்லி, சூனியம் செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டால்,
ஆனாலதைநிரூபிக்கப் போதுமான சான்றுகளில்லாமலிருந்தால்,
குற்றஞ்சாட்டப்பட்டவன் ஒரு நதியில் குதித்து தான், நிரபராதி என்று நிரூபிக்கலாம்.
அவனை வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் நதி மூழ்கடித்துவிட்டால், குற்றம் சாட்டியவனே சரி; அவன் குற்றவாளியின் வீட்டை எடுத்துக் கொள்ளலாம்.
குற்றவாளி, நதியிலிருந்து மீண்டு வந்துவிட்டால், அவன் நிரபராதி. யார் பில்லி சூனியப் புகாரைச் சொன்னானோ அவனைக் கொன்று விடுக .நதியில் குதித்து உயிர் தப்பியவன் அவனுடைய வீட்டை மீண்டும் பெறுக”.
(ஹமுராபியின் சட்டத்தில் மரண தண்டனை என்பது தண்ணீர் பட்டபாடு. அவர் எதற்கெடுத்தாலும் ‘கொல், கொல், கொல்’ என்று குறைக்கிறார்!)

அனல் வாதமும், புனல் வாதமும்
தண்ணீரும் தீயும் உண்மையனவர்களை ஒன்றும் செய்யாது என்பது வேத கால நம்பிக்கை.ஜைமினீய பிராஹ்மணம் முதலிய நூல்களிலேயே ‘தீ மிதி’ சோதனைகள் பேசப்படுகின்றன. ராமாயணத்தில் சீதையும் அக்னிப் பரீக்ஷையில் தேறி வந்ததைக் காண்கிறோம்.
பிராமணச் சிறுவன் ஞான சமபந்தர் மதுரையில் தங்கி இருந்த மடத்துக்கு சமணர்கள், தீ வைத்தும் அவரைக்கொலை செய்ய முடியவில்லை என்றவுடன் அனல் வாதம் (தீ), புனல் வாதத்துக்கு (நீர்) வருகின்றனர். அதில் சம்பந்தர் எழுதிய ஐந்தெழுத்து மந்திரச் சுவடி தீயில் போட்டாலும் எரியவில்லை; வைகை நதியில் விட்டாலும் எதிர் நீச்சல் அடித்து மதுரைக்குப் பக்கத்தில் உள்ள திரு ஏடகத்தில் ஏடு கரை ஏறியது. ஆக மநு,ஹமுராபி, முதலியோர் சொல்லும் ‘நதி சோதனை’ (River Ordeal) சம்பந்தர் காலத்தில் — 1400 ஆண்டுகளுக்கு முன்னர்- பின்பற்றப்பட்டதையும் அறிகிறோம்.

மஹாபாரதத்தில் புனல் வாதம்
கீழ்கண்ட கதை மஹாபாரதத்தில் தர்மபுத்ரனுக்கு உரைக்கப்பட்டது
மஹாபாரதத்துக்கு முன்னர், வேத காலத்தில் நடந்த நிகச்ச்சி இது. அதாவது கி.மு 3102-க்கு முன்னர்- கலியுகம் துவங்கு முன்னர் –நடந்தது. ஜனகரின் அவையில் பண்டி என்ற புலவர்- அறிஞர் இருந்தார். எல்லோரையும் வாதத்துக்கு அழைப்பார்; தோற்றுப் போனவர்களை நதியில் தூக்கி எறிவார். அவரிடம் கஹோதர் என்னும் முனிவர் தோற்றுப் போய் நதியில் எறியப்பட்டு உயிர் இழந்தார். அவருடைய மகன் அஷ்டாவக்ரன், 12 வயதில் எல்லா சாஸ்திரங்களையும் கற்று பண்டியுடன் மோதினார். பண்டி தோற்றுப் போனவுடன் நதியில் எறியப்பட்டார். ஆனால் வருண பகவானின் தயவுடன் அவர் உயிர் தப்பி பின்னர் இறந்தார் என்று கதை முடிகிறது. அது மட்டுமல்ல. கஹோதர் மீன்ன்டும் உயிர்பெற்றார். அஷ்டா வக்ரர் என்றால் ‘எட்டு கோணல்’ என்று பொருள்; வேத ஒலிக்கு அபார சக்தி உண்டு. கஹோதர் தவறாக வேதத்தை உச்சரித்தபோது எல்லாம், சுஜாதாவின் கர்ப்பத்தில் இருந்த அஷ்டாவக்ரர் உடல் நெளிந்து, நெளிந்து எட்டு கோணல் ஏற்பட்டது. அவரும் நதியில் குளித்தவுடன் கூன் முதுகு நிமிர்ந்தது. பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறனுடன் ஒப்பிடலாம். இங்கும் தண்ணீரின், நதியின் சிறப்பைக் காணலாம். யார் உண்மையானவரோ அவருக்கு அனலும் புனலும் உதவும் என்பதே கருத்து.
tags–
மநு தர்ம நூல், ஸரஸ்வதி நதி,ஹமுராபி சட்டம், ஆற்றில் தள்ளிவிட்டு தீர்ப்பு
–subham–