இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 2 (Post No.5185)

Written by S NAGARAJAN

 

Date: 6 JULY 2018

 

Time uploaded in London –   5-09 AM (British Summer Time)

 

Post No. 5185

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

பாக்யா 6-7-18 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியா எட்டாம் ஆண்டு பதினெட்டாம் கட்டுரை

இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 2

.நாகராஜன்

 

இகிகை கொள்கையைக் கடைப்பிடித்து ஏராளமானோர் தங்கள் வாழ்வின் அர்த்தத்தைக் கண்டுபிடித்து வளமாக வாழ்ந்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக ஜப்பானைச் சேர்ந்த  விளையாட்டு வீரரான தடை ஓட்ட சாம்பியன் டாய் தமேசுவைக் (Dai Tamesue) கூறலாம்.  1978இல் ஹிரோஷிமாவில் பிறந்த அவர் வோர்ல்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 2001,2005ஆம் ஆண்டுகளில் வெங்கல மெடலைப் பெற்றார். தொடர்ந்து சிட்னி, ஏதன்ஸ், பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஜப்பானின் சார்பாகக் கலந்து கொண்டார். 2012இல் அவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இப்போது என்ன செய்வது என்ற கேள்வி அவரை திகைக்க வைத்தது. அப்போது தான் அவருக்கு இகிகை ஞாபகத்திற்கு வந்தது.

 

 

தான் சிறந்து விளங்கும் விளையாட்டுத் துறையில் ஈடுபட நினைத்த அவர் விளையாட்டுத் துறை சம்பந்தமான அனைத்து சங்கங்களிலும் ஈடுபட்டு சமுதாயத்தில் விளையாட்டுத் துறையின் மதிப்பை அதிகரிக்கத் தன்னால் ஆனதைச் செய்ய முன்வந்து தன் வாழ்க்கைக்கான அர்த்தத்தைக் கண்டு பிடித்தார். இப்போது அவருக்கும் மன நிம்மதி.சமுதாயத்திற்கும் பலன்!

“விளையாட்டு பற்றிய மக்களின் பார்வையை நேராக்குவது தான் என் நோக்கம். அதற்கு இகிகை உதவுகிறது” என்கிறார் அவர்.

 

பணி ஓய்வுபெறும் அனைவருக்கும் இகிகை ஒரு பெரிய உதவும் சாதனம்.

 

சரி, பணியில் இருப்பவர்களுக்கு? அவர்களுக்கும் இகிகை பெரிய அளவில் உதவுகிறது. வேலையில் ஈடுபட்டு கடினமாகவும் நீண்ட நேரமும் உழைக்க வேண்டும் என்று இகிகை கூறுவதில்லை.

மாறாக, பணியில் நீங்கள் எந்த உணர்வை உணர்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிக்கச் செய்வதே இகிகை.

ஜப்பானில் மாதத்திற்கு சுமார் 80 மணி நேரம் ஓவர் டைம் பார்த்து உழைப்பவர்களில் கரோஷியால் பாதிக்கப்படுகின்றனர்.

கரோஷி என்றால் அதிக நேரம் வேலை செய்வதால் மரணத்தை அடைவது என்று பொருள்.இப்படி ஓவர் டைம் பார்த்து உழைத்து உழைத்து  வருடத்திற்கு ஜப்பானில் 2000 பேர் இறக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.

மிச்சிகன் பல்கலைக் கழகம் ஒரு சோதனையைச் செய்தது. அதன் படி போனில் பேசி ஸ்காலர்ஷிப்பிற்காக நிதி திரட்ட உதவ முயற்சித்தவர்களை விட,  மாணவர்களுக்கு உதவ இருப்பவரை நேரில் சந்திப்பதன் மூலம் 171 சதவிகிதம் அதிக நிதியைத் திரட்டினர்.

 

வாழ்க்கையில் எல்லா அம்சங்களிலும் இகிகை உதவும். பெரிதாகத் திட்டம் போட வேண்டாம்; உலகத்தின் பசியைத் தீர்க்க முனைவதற்குப் பதிலாக உங்கள் பகுதியில் பசியோடு வாடுவோரின் பசியைத் தீர்க்க உதவலாம் என்கிறது இகிகை.

 

உங்களின் இகிகை பற்றி நீங்கள் அறிந்து விட்டால் மட்டும் போதாது; உடனே செயலில் இறங்க வேண்டும்.

92 வயதான பெண்மணியான டோமி மேனகாவிற்கு KBG84 டான்ஸ் குழுவில் பாடி ஆடுவது  தான்  இகிகை.

யோகோ டகாடோ என்ற பெண்மணி பெரிய தலைமை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பவர். அவர் தனது அனுபவத்தால் கூறுவது இது தான்: “மிக அதிகமான தகுதி படைத்த உயர் அதிகாரிகளுக்கு உள்ள பொதுவான ஒரு அம்சம் பணியை இகிகையாகக் கருதுகின்றனர். அவர்களுக்கு வேலை செய்வதில் அதிக உந்துதல் இருக்கிறது; உடனடியாக எதிலும் அவர்கள் செயலில் இறங்குவர்.”

 

 

 

மேலை நாடுகளில் இப்போது இகிகை பற்றிய ஆர்வம் மிகவும் பெருகி இருப்பதால் அது பற்றிய புத்தகங்கள் ஏராளம் வெளி வந்துள்ளன. நேரடியாகப் பார்ப்பதற்காக எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் ஜப்பானிலுள்ள ஒகினாவா நோக்கிச் செல்கின்றனர்.

அங்கு அவர்கள் பார்ப்பது அவர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது. ஒகினாவாவில் (Okinawa) 102 வயதான கராத்தே மாஸ்டர் தனது இகிகையினால் கராத்தே பயிற்சியை தனது மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார். 100 வயதான மீனவர் ஒருவர் கடலில் சென்று மீன்களைப்பிடித்து வந்து தனது குடும்பத்திற்கு அவற்றைச் சந்தோஷமாக வழங்குகிறார்.

 

 

ஒகினாவாவில் வாழ்பவர்களுக்கு சராசரி வயது: ஆண்களுக்கு 81; பெண்களுக்கு 87. இதைத் தாண்டி விட்டால் அவர்கள் நூறு வயது வாழ்வது நிச்சயம்.ஜப்பானில் உள்ள நூறு வயது தாண்டியோரை எடுத்துக் கொண்டால் அந்த எண்ணிக்கையைப் போல ஐந்து மடங்கு அதிகம் பேர் ஒகினாவாவில் வாழ்கின்றனர். கான்ஸர், மாரடைப்பு, மனச்சோர்வு, இதர பயங்கர வியாதிகள் எதுவும் ஒகினாவா மக்களுக்கு ஏற்படுவதில்லை.

காரணம் – இகிகை.

 

 

பரபரப்பான வாழ்க்கை இல்லாமல் நிதானமாக வாழ்க்கையை அணு அணுவாக – சூடான இட்லியை விண்டு விண்டு சட்னி சாம்பாருடன் மெதுவாகச் சுவைத்துச் சாப்பிட்டு பசியைத் தணிப்பது போல – அவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் ஜிம் போன்ற உடற்பயிற்சி கழகங்களுக்குச் செல்வதில்லை.மாறாக தங்கள் தோட்டத்தில் தோட்ட வேலையில் ஈடுபடுகின்றனர்.தாய் -சி பயிற்சிகளைச் செய்கின்றனர்; சைக்கிள் ஓட்டுகின்றனர்.

அளவோடு சாப்பிடுகின்றனர்.

ஆக இந்த ஜப்பானிய உத்தியைக் கையாண்டு நாமும் வாழலாம் – நூறு ஆண்டுகள்.

இகிகை – இயற்கை மனிதர்கள் நூறாண்டு வாழ ‘உதவும் கை’!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானியான பால் டிராக் (Paul Dirac) ஒரு முறை  அவரது நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அவரது மனைவி அன்யா (Anya) அப்போது பின்னல் வேலையில் (kinitting) ஈடுபட்டிருந்தார். அவரது கைகள் லாவகமாகவும் வேகமாகவும் சுழன்று பின்னுவதைப் பார்த்த பால் டிராக் அசந்து போனார்.

அவர் கிளம்பிச் சென்ற சில மணி நேரங்களில் மீண்டும் நண்பர் வீட்டிற்கு வந்தார்.

 

 

அவரது நண்பரின் மனைவியைப் பார்த்து, “இதை இன்னொரு விதமாகவும் செய்யலா

﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽ppy Life)  – The Long and Happy Life)ho’ம்” என்று கூறித் தான் ‘கண்டுபிடித்த’ தனது புது முறையை அவர் அன்யாவுக்குச் செய்து காண்பித்தார்.

மௌனமாக அவர் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த அன்யா கடைசியில் அவர் நிறுத்தியவுடன், “இது பல நூற்றாண்டுகளாக பெண்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதே! இதன் பெயர் பர்லிங் (purling) – பின்னல் வேலையில் நேர் மாறாகச் செய்யும் முறை – என்றார்.

பால் டிராக்கிற்கு நிட்டிங்கும் புதுமையாக இருந்தது; பர்லிங்கும் புதுமையாக இருந்தது!

***