
WRITTEN BY S NAGARAJAN
Post No.7960
Date uploaded in London – – – 12 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இடைஞானியார் வரலாறு!
ச.நாகராஜன்
கொங்கு மண்டலத்தில் ஆம்பிரா நதி தீரமான தென்கரை நாட்டுக் கொற்றவனூரில் இடையர் தலைவர் ஒருவர் வசித்து வந்தார். அவரது சிறு வயது மகன் ஒரு நாள் ஆடுகளை மேய்க்க ஊதியூர் மலைப் பகுதியில் ஏறிச் சென்றான்.
தந்தையோ, ‘அந்த மலையில் கொடிய விலங்குகள் உள்ளன; ஆகவே அங்கு செல்லாதே’ என்று எச்சரித்து அறிவுறுத்தினார்.
மாலை நேரமானது. ஆடுகள் சென்ற வழியில் சிறுவன் பின் தொடர்ந்து சென்றான். இருள் சூழ்ந்து விடவே வழி தெரியாது அவன் காட்டிலேயே தங்கினான்.
பொழுது விடிந்தது.

அங்கிருந்த கல் ஒன்றின் மீது தான் எடுத்த விதைகளை வைத்து இன்னொரு கல்லால் தட்டினான் அவன். அடிக்கல்லிலிருந்து ரத்தம் பெருகிற்று.
அடிக்கல்லாக இருந்தது ஒரு சிவலிங்கம். என்ன செய்வதென்று தெரியாமல் கண் இரண்டும் இருண்டு போக சிவலிங்கத்தைப் பிடித்தவாறே திகைத்து நின்றான் அவன்.
முதல் நாள் சென்ற பிள்ளை வரவில்லையே என்று பயந்த இடையர் தலைவர் மலைப் பகுதியில் வந்து தேடலானார்.
சிறுவனைக் கண்டு அவன் இருந்த நிலையைக் கண்டு வருந்தினார்.
நம்மை ஆட்கொள்ளும் ஆண்டவன் செயல் என்று எண்ணிய அவர் அந்தச் சிவலிங்கம் மீது வெயில் மழை படாது பந்தல் அமைத்தார். அதைக் கோயிலாக்கி பால், தயிர் ஆகியவற்றைக் கொண்டு வந்து குடம் குடமாக அபிஷேகம் செய்தார்.
பூக்களைக் கொண்டு சிவலிங்கத்தை அலங்கரித்தார்.
நைவேத்யம் செய்து அதை அர்ப்பணித்து தந்தையும் பிள்ளையும் தவறாமல் வணங்கலாயினர்.
நாட்கள் சென்றன.தந்தை சிவபதம் அடைந்தார்.
சிறுவனோ விபூதி, ருத்ராக்ஷம் அணிந்து பஞ்சாக்ஷரம் ஓதி இறைவனைத் தொழுது பணிவிடை செய்து வரலானான்.
சிவபிரான் அவன் மீது அருள் கூர்ந்தார்; அவனுக்கு சிவ ஞானம் புகட்டி அவனைக் கணநாதனாக்கினார்.
அவர் இடைஞானியானார்!

இன்று வரை இடைஞானியாரின் சந்ததியார் அக்கோவிலில் நவராத்திரி காலத்தில் அம்பு போடுதல் போன்ற மரியாதையை அடைந்து வருகின்றனர்.
கொற்றவனூர் சிவாலயத்தில் இந்த இடைஞானியாரின் விக்கிரகம் இருக்கிறது; அதற்கு பூஜையும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த இடைஞானியாரின் வரலாற்றை கொங்கு மண்டல சதகம் தனது 38 வது பாடலில் எடுத்துரைக்கிறது இப்படி :-
ஒருவிதை யைத்தட்டு மாயர் மதலை யுவமையிலா
அரியஞா னங்கொளச் சென்னியிற் செந்நீ ரருவியெனச்
சொரியநின் றன்னான் றனையாண்ட முக்குட் சுயம்புவென்று
மருவி வளர்தென் கரைநாடு சூழ்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் :-
ஒரு விதையை வைத்துச் சிறு கல்லால் தட்டிய இடைச் சிறுவன், மெய்ஞானத்தைப் பெறுமாறு அடிக்கல்லாக நின்ற தமது திருமுடியிலிருந்து இரத்தம் வடியக் காட்டி, அருள் புரிந்த அப்பிரமேயர் வீற்றிருக்கும் தென்கரை நாடு அமைந்திருப்பது கொங்கு மண்டலத்திலேயாம்!

tags — இடைஞானியார், கொங்கு மண்டலம் ,சிவலிங்கம்.