கம்பன் தரும் சித்திரம்: இந்திரஜித்தின் வீடு (Post No.4011)

Ramleela festival in Delhi, where demons are burnt

Written by S NAGARAJAN

 

Date: 18 June 2017

 

Time uploaded in London:-  6-40  am

 

 

Post No.4011

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

கம்பனின் கவிதை

கம்பன் தரும் சித்திரம்: இந்திரஜித்தின் வீட்டைக் காவல் காத்த லட்சணம்!

 

ச.நாகராஜன்

 

கவிச் சக்கரவர்த்தி கம்பன் தன் மேதா விலாசத்தைச் சுந்தர காண்டம் முழுவதும் அள்ளித் தெளித்துக் கொண்டே போகிறான்,

எந்த ஒரு செய்யுளை எடுத்துக் கொண்டாலும் சரி, அதை முழுவதுமாக இரசித்து லயித்து அதன் அருமை பெருமைகளை மனதில் ஏற்றிக் கொண்ட பின்னரே அடுத்த செய்யுளுக்குப் போக முடிகிறது.

 

 

ஆகவே தான் பாரதி கவிதையில் எல்லையொன்றின்மை அல்லது இன்ஃபினிடிக்கு உதாரணம் காண வேண்டுமென்றால் கமப்னின் கவிதையில் அவன் மேதா விலாசத்தின் மூலம் காணலாம் என்று புக்ழந்துரைத்தான்.

 

 

ஒரே ஒரு பாடலை மட்டும் இங்கு பார்ப்போம்.

இலங்கையின் பெருமையைச் சொல்ல வந்த கம்பன் இந்திரஜித்தின் மாளிகை பற்றிய காவலைச் சொல்கிறான்.

அந்த வீரர்கள் காவல் காத்த லட்சணத்தை அவன் சொல்லும் போது நகைச்சுவையும் தவழ்கிறது; இலங்கையின் அளப்பற்ற வீர பராக்ரம காவலும் புரிகிறது.

 

ஏதியேந்திய தடக்கையர் பிறை யெயிறிலங்க

மூதுரைப் பெருங்கதைகளும் பிதிர்களு மொழிவார்

ஓதி லாயிர மாயிர முணர்விலி யரக்கர்

காது வெஞ்சினக் களியினர் காவலைக் கடந்தான்

 

ஊர்தேடு படலம் பாடல் எண் 139 வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் பதிப்பு

– பாடல் எண் 234, சுந்தரகாண்டம் உ.வே.சா பதிப்பு

 

Ravana lifting Kailash

ஏதி ஏந்திய தட கையர் – வாள் முதலிய ஆயுதங்களைக் கொண்ட பெரிய கைகளை உடையவர்கள்

 

பிறை எயிறு இலங்க – பிறைச் சந்திரன் போன்ற வக்கிரமான பற்கள் வெளியே விளங்க இருப்பவர்கள் அதாவது சிரித்தவாறு புன்முகத்துடன் இருப்பவர்கள்

முது உரை பெருங்கதைகளும் பிதிர்களும் மொழிவார் – பழமொழிகளுடன் பெரிய சரித்திரங்களையும் விடுகதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்

 

காது வெம் சினம் களிறினர் – பகைவரைக் கொல்ல வல்ல பெரிய கோபத்தினாலாகிற போரில் பெரிய மகிழ்ச்சியை அடைபவர்கள்

 

ஓதில் ஆயிரம் ஆயிரம் உணர்வு இலி அரக்கர் – அளவு சொல்ல முனையும் போது ஆயிரத்தை ஆயிரத்தால் பெருக்கி வரும் தொகையை உடைய அறிவற்ற ராக்ஷஸர்களின் காவலை

கடந்தான் – அனுமன் அந்த இந்திரஜித்தின் வீட்டு வாயிலைக் கடந்து அதன் உள்ளே சென்றனன்.

 

இந்திரஜித்தின் வீட்டைக் காவலர்கள் காவல் காத்த லட்சணம் இது தான்.

 

அவர்கள் இரவு நேரப் ப்ணியாளர்கள். விழித்திருந்து காவல் காக்க வேண்டும்.

 

எதிரிகளே இல்லாத நாடு இலங்கை. எத்தனையோ வருடங்கள் ஆயிற்று போர் நடந்து. அப்போது என்ன தான் செய்வது- இரவு கண் முழிப்பிற்கு?

 

விடுகதைகளும் புதிர்களும் பெருங்கதைகளும் பேசி மகிழ்ந்து நேரத்தைப் போக்கினர் (வெட்டி அரட்டை அவர்களை மகிழ்வித்து கண் தூங்காமல் விழிக்க வைத்திருந்தது)

 

மூதுரை அல்லது முதுமொஈ என்பதற்கு தொல்காப்பியர் நல்ல விளககத்தை அளித்துள்ளார்: “ நுண்மையும் சுருக்கமும் ஒளியுடமையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக், குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழியான் “ என்கிறார் தொல்காப்பியர்.

பெருங்கதை என்றால் தேவாசுர யுத்தம், பாற்கடல் கடைந்தது, பழைய கால ராக்ஷ்ஸர் வரலாறு போன்றவை.

 

பிதிர் என்பது புதிர்.

 

இதற்கு வை.மு,கோ பதிப்பில் ஒரு எடுத்துக்காட்டு தரப்படுகிறது.

ஒரு சமயம் கம்பர் ஔவையாரை நோக்கி ‘ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடி’ என்று சொல்லி இதன் பொருள் என்ன என்று வினவினார்.

 

அதற்கு ஔவையார் அதே மரியாதையுடன், ‘ஆரையடா சொன்னாயடா’ என்று பதிலிறுத்தார்.

ஆரைக்கீரையின் காம்புகள் நான்கு பிளவுபட்ட இலைகளை உடையவனாய் இருக்கும்.

 

அதை டி போட்டு கம்பர் கேட்க ஔவையார் டா போட்டு பதில் சொன்னார்.

 

எதிரிகளே இல்லாத நாடு இலங்கை. அதன் வீரர்கள் காவல் காக்க கஷ்டப்பட்டு விழிக்க புதிர்களைப் போட்டு அதை விடுவித்து மகிழ்ந்து பொழுது போக்கினர். ‘டைம் பாஸ்’!

கம்பன் புதிர் போடுதலை எந்த இடத்தில் பொருத்தி இருக்கிறான் என்பதை நினைக்கும் போது வியப்பு மேலிடுகிறது.

இப்படி பொருத்தம்  பார்த்து அவனைப் போலச் சேய்யுளை அமைக்கும் கவிஞன் உலக அளவில் தேடினாலும் இன்னொருவர் கிடைக்க மாட்டான்.

 

உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை இது!

***