மதுரை மீனாட்சி கோவில் கோபுரத்திலுள்ள சிற்பத்தின் வரைபடம்
Research article by London swaminathan
Post No.2232
Date: 10 October 2015
Time uploaded in London: 15-01
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
பாரதியார் பாடினார்:
“கணிதம் பன்னிரெண்டாண்டு பயில்வர், பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்”
— 12 ஆண்டு கணிதம் பயின்ற பின்னர், ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரம், கோள் முதலியவற்றின் நிலை என்ன என்று தெரிவதில்லையே என்று வருத்தப்படுகிறார்.
அந்தக் காலத்தில் கிராமப்புற மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும், வானத்திலுள்ள கிரகங்கள் நட்சத்திரங்களின் பெயர்களையும் நிலையையும் அறிந்து வைத்திருந்தனர். தங்களைச் சுற்றியுள்ள மரம், செடி, கொடி, பறவைகள், மூலிகைகள் ஆகியவற்றை அடையாளம் காணவும் அறிந்திருந்தனர். ஏட்டுக் கல்வி வந்த பின்னர், கையில் ‘டிகிரி’ வாங்கிய பின்னரும் கூட அடிப்படை அறிவு இருப்பதில்லை. இதுதான் பாரதியாரிம் வருத்தத்துக்குக் காரணம். சுற்றியுள்ள மரம் செடி, கொடிகளின் பெயர்களும் தெரியாது; வானத்திலுள்ள நட்சத்திரங்கள் என்ன என்றும் சொல்லத் தெரியாது! இதே நிலையில்தான், கோவில் சிலைகள் பற்றிய அறிவும் உளது.
சங்க இலக்கிய நூலான பரிபாடலில் (19ம் பாடல்) ஒரு காட்சி வருகிறது: கணவன், மனைவி ஆகிய இருவர் திருப்பறங்குன்றத் தில் உள்ள ஓவியங்களைக் காணும் போது, ஒரு பூனை ஓவியத்தைப் பார்த்து மனைவி வியக்கிறாள். கணவனிடம் கேட்கவே, உடனே கணவன், “இது உனக்குத் தெரியாதா? இதோ இந்திரன், அகலிகையை மானபங்கப்படுத்திய பின்னர், பூனை வடிவில் பயந்து ஓடுகிறான்” என்று பதில் தருகிறான். மக்களுக்கு ஓவியத்தில் வரும் புராணக் காட்சிகள் எல்லாம் அத்துபடியாக இருந்தன, இது 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலை.
இன்றோ நமது குழந்தைகள், ஒரு கோவில் சிலையைக் காட்டி இது யாருடைய உருவம்? கைகளில் என்ன , என்ன இருக்கிறது? என்று கேட்டால் நமக்குச் சொல்லத் தெரியுமா என்பது சந்தேகமே!
இந்தியாவிலாவது பல கடவுள் திரு உருவங்களை அடையாளம் கண்டு விடலாம். தென்கிழக்காசிய நாடுகளின் சிலைகளில் விஷ்ணுவைத் தவிர வேறு எவரையும் அடையாளம் காணமுடியாது. விஷ்ணுவின் தோள்களில் அல்லது கைகளில் சங்கு சக்ரம் இருப்பதால் இது எளிதாகிறது.
மியூசியங்களுக்குப் போனால் இதைவிடப் பெரிய குழப்பம் காத்திருக்கும். புத்தமத, சமணமத கடவுளர் சிலைகளையும் ஒரே காட்சிக்கூடத்தில் வைத்திருப்பர். இந்துக் கடவுள் போலத் தோன்றும். ஆனால் வேறு பெயர்கள் எழுதப்பட்டிருக்கும்.
முன்காலத்தில் சிலைகளையும், விக்ரஹங்களையும் வடித்தவர்கள் சம்ஸ்கிருத நூல்களில் ஸ்லோகங்களாக எழுதப்பட்ட மூர்த்திகளின் வடிவங்களை மனதிற்கொண்டு அவைகளைச் செய்தனர். அவைகளைக் ‘காப்பி’ அடித்த புத்த, சமண மதச் சிற்பிகள் அவரவர்களுடைய கற்பனைக்கேற்ப கொஞ்சம் மாற்றி வடிவமைத்தனர். ஆனால் கூர்ந்து கவனிப்போர் எது, என்ன என்று சொல்லிவிடுவர்.
இந்துக் கடவுளரின் பட்டியல் மிக நீண்டது. ஒவ்வொரு ஊரிலும் ஒரு நிகழ்ச்சி நடந்து இருப்பதாலும், பல அசுரர்களைக் கொல்ல பல உருவம் எடுத்ததாலும் சிற்சில வேறுபாடுகள் இருக்கும். இதைத்தவிர உள்ளூர், பிராந்திய கடவுளரும் உண்டு. வடக்கே இருப்பவர்க்கு அய்யனார், சாஸ்தா பற்றித் தெரிய வாய்ப்பு இல்லை. தெற்கே இருப்பவர்க்கு சந்தோஷி மாதா முதலிய உருவங்கள் தெரியாது. ஓரிடத்தில் அனுமார் பிரம்மச்சாரி, இன்னொரு இடத்தில் பிள்ளையார் பிரம்மச்சாரி. ஆகையாலெங்கு மனைவியருடன் தெய்வங்கள் உளதோ அதன் தத்துவ விளக்கங்களையும் கடவுளரின் கையிலுள்ள பொருள்களின் விளக்கங்களையும் அறிந்து வைக்கவேண்டும்.
பிள்ளையாரின் இரண்டு மனைவியரின் பெயர் சித்தி, புத்தி என்று சொன்னால், பிள்ளையாரைக் கும்பிடுவோருக்கு காரிய ‘சித்தி’யும் (வெற்றி), அதை அடைய நல்ல ‘புத்தி’யையும் (அறிவு) கொடுப்பார் என்று பொருள். சூரியனின் மனைவி பெயர் ‘சாயா’ (நிழல்) என்றால் வெளிச்சம் இருக்கும் இடத்தில் பொருள்களின் நிழலும் அதைத் தொடரும் என்பதே பொருள். சம்ஸ்கிருத அறிவு இருந்தால் ஓரளவு பொருளை உணர்ந்து நாமே மற்றவர்க்கும் விளக்கலாம். எல்லாவற்றையும் கதைகள் மூலமும், உவமைகள் மூலமும், அடையாளச் சின்னங்கள் மூலமும் விளக்குவது நம் முன்னோர் இயல்பு. ஆனால் காலப் போக்கில், உணர்த்தவந்த தத்துவத்தை மறந்துவிட்டு, கதைகளை மட்டுமே பரப்பியதால் அவைகள் புராணங்களாகிவிட்டன.
கடவுளரின் வாஹனங்கள், அவர்களின் அடையாளச் சின்னங்கள் என்ன, என்ன வென்று தெரிந்து கொண்டால் வெறும் தலை அல்லது தோள் மட்டும் தெரிந்தால் கூட அது யாருடையது என்று சொல்லிவிடலாம். கட்டுரையின் இரண்டாவது பகுதியில் ஒரு பட்டியலைத் தருகிறேன். அது முக்கியக் கடவுள் திருமேனிகளை அடையாளம் காண ஓரளவுக்கு உதவும்.
–தொடரும்…………………………



You must be logged in to post a comment.