2.இந்துக் கடவுள்களை இனம் காணுவது எப்படி?- பகுதி 2

IMG_6803

Compiled by London swaminathan

Post No.2235

Date: 11  October 2015

Time uploaded in London: 17-47

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளிடப்பட்டது

d82cc-brahma-stamp

பிரம்மா

நான்கு தலைகள்; ஆனால் பெரும்பாலும் மூன்று தலைகள் மட்டுமே தெரியும். கையில் ஜப மாலை, வேதப் புத்தகம் இருக்கும். சில உருவங்களில் அன்னப் பட்சியும் அருகில் நிற்கும் அல்லது தாமரை மேலமர்ந்தவராகக் காட்சி தருவார். குறிப்பாகப் பாற்கடலில் பள்ளி கொண்ட விஷ்ணுவின் வயிற்றிலிருந்து வருவது போலக் காட்டுகையில் தாமரை மேல் இருப்பார்.

விஷ்ணு

மும்மூர்த்திகளில் மிகவும் எளிதில் அடையாளம் காணக்கூடிய கடவுள்; கைகளில் சங்கு சக்கரம் தாங்கியிருப்பார். நான்கு கைகளில் ஒரு கையில் கதை இருக்கும். தென் கிழக்காசிய நாடுகளில் கூட, தலை மட்டும் காட்டப்பட்டாலும், சங்கு சக்கரம் பொறிக்கப்பட்டு ள்ளதால் எளிதில் கண்டு பிடித்துவிடலாம். சில இடங்களில் கருட வாகனம் இருக்கும்; பாற்கடலில் ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது பள்ளி கொண்ட கோலத்தில் படுத்த நிலையில் இருப்பார். தென் இந்தியக் கோவில்களில் நின்ற, அமர்ந்த, பள்ளிகொண்ட  என்ற மூன்று கோலங்களில் பெரிய சிலைகளாக காட்டப்பட்டுள்ளார்.

df0e0-trimurti_ellora

சிவன் (நடராஜர்)

சிவன் உருவங்களில் நடராஜரை அடையாளம் காண்பது எளிது ஒற்றைக் காலைத் தூக்கிய நிலையில் கைகளில் உடுக்கை, தீ இவற்றுடன் கட்சி தருவார். காலடியில் ஒரு அசுரன் இருப்பான். லிங்க உருவமும் சிவன் ஒருவருக்கே உரித்தாகையால் எளிதில் உணரலாம்.ஆனால் மஹேஸ்வரனாகக் காட்டுகையில் சில இடங்களில் நெற்றிக் கண் இருக்கும். சடை முடியில் சந்திரப் பிறையும், கழுத்தில் பாம்பும் இருக்கும். கைகளில் திரி சூலம் இருக்கும். மான், மழு என்னும் ஆயுதம், டமருகம் என்னும் உடுக்கை கைகளில் இருக்கும்.ரிஷப (காளை/விடை) வாஹனம் மேலும் இருப்பார்.

கணபதி

வெளிநாட்டினரும் எளிதில் நினைவு வைத்துக் கொள்ளக் கூடிய கடவுள் யானை முகம் கொண்ட கணபதி ஆவார். வட நாட்டில் சித்தி, புத்தி என்னும் தேவியருடன் காட்சி தருகிறார்.அருகில் மூஷிகம் என்னும் மூஞ்சூறு அல்லது எலி இருக்கும். கைகளில் மோதகம் என்னும் கொழுக்கட்டை இருக்கும் அல்லது அருகில் தட்டில் படைக்கப்பட்டிருக்கும்.

முருகன்

மயில் வாகனத்துடனும் கையில் வேலுடனும் காட்சி தருகிறார் முருகன். ஆனால் தென் கிழக்காசிய நாடுகளில் இவரை அடையாளம் காண்பது எளிதல்ல. தமிழ் நாட்டில் சில இடங்களில் வள்ளி, தெய்வானை ஆகிய இரு மனைவியருடன் காணலாம். தமிழ்நாட்டில் படங்களில் 12 கைகள், ஆறுமுகங்களுடன் காட்டப்படுகிறார்.

துர்கா

உமா, அல்லது பார்வதியின் மற்றொரு தோற்றம் துர்கா. வடநாடு முழுதும் பல்வேறு பெயர்களில் வழிபடப்படும் தெய்வமான துர்கா புலி அல்லது சிங்கத்தின் மேல் இருக்கிறார். கையில் வாள் இருக்கும். தென்னிந்தியக் கோவில்களில் சங்கு சக்கரத்துடன் (நாராயணி) காட்சி தருகிறார். கையில் வில், அம்பு, திரிசூலம், வஜ்ராயுதம் ஆகியனவும் இருக்கும். எட்டு அல்லது பத்து கைகளுடன் தோன்றுவாள். காளியாக காட்சி தருகையில் கபால (மண்டை ஓட்டு) மாலையும் இருக்கும். மஹிஷன் என்னும் எருமைத் தலை அரக்கனை அழிக்கும் காட்சி மாமல்லபுர குகைக் கோவில் முதல் வடநாட்டுக் கோவில்கள் வரை எல்லா இடங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது, இந்த மஹிஷாசுரமர்த்தனி கோலம் மிகவும் சிறப்புடைத்து.

lakshmi

லெட்சுமி

செந்தாமரை மலர் மீது வீற்றிருக்கும் லெட்சுமியின் கைகளில் தாமரை மலர் இருக்கும். கஜ லெட்சுமி உருவம் மிகவும் பிரபலமானது. லெட்சுமியின் இருபுறமும் இரண்டு யானைகள் நின்று நீரால் அபிஷேகம் செய்யும். இது நிறைய செல்வத்தையும் மங்களத்தையும் கொடுக்கும். செட்டி நாட்டார் வீட்டுக் கதவுகள் முதல் பல அரண்மனை வாயில்களிலும் டென்மார்க் நாட்டு சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அண்டாவிலும், நாணயங்களிலும் கஜலெட்சுமி உருவம் இருக்கிறது. சில இடங்களில் ஆந்தை வாகனமும் இருக்கும்.

சரஸ்வதி

சரஸ்வதி சிலை அன்னப் பறவையுடனோ, மயிலுடனோ இருக்கும். கைகளில் ஜபமாலையும், புத்தகமும் இடம்பெறும். வீணை வாசிக்கும் கோலத்திலும், வெண்தாமரை மலர் மீது அமர்ந்தும் காட்சி தருகிறார்.

saraswati

காயத்ரி

ஐந்து முகங்கள், பத்து கைகளுடன் தோன்றும் காயத்ரி தேவியின் கைகளில் சங்கு, சக்கரம், சாட்டை, தாமரை, அமுத கலசம், மழு, கதை, அபய ஹஸ்த முத்திரை முதலியனவற்றைக் காணலாம்.

அனுமன்

குரங்கு முகத்துடன் தோன்றும் அனுமனை, ஆஞ்சநேயரைக் குழந்தைகளும் அடையாளம் கண்டுவிடுவர். படங்களில் கதை அல்லது, சஞ்சீவி மலையைத் தூக்கும் நிலையில் இருப்பார்.

hanuman raman

சோமாஸ்கந்தர்

தென்னிந்தியக் கோவில்களில் பிரபலமான சோமாஸ்கந்தர் விக்ரஹத்தில் உமையுடனும், சிவனுடனும் ஸ்கந்தன் எனும் முருகன்/கார்த்திகேயன் குழந்தை வடிவத்தில் காட்சி தருவார்.

(சஹ + உமா+ ஸ்கந்த= சோமாஸ்கந்த = சிவன் உமையுடனும் கந்தனுடனும்)

இந்திரன், அக்னி, வாயு, யமன், குபேரன், நிருதி

வேதகாலக் கடவுளரான இந்திரன் ஐராவதம் என்னும் யானையின் மீது வஜ்ராயுத்துடன் தோன்றுவார். யானைக்கு ஒரு முகமோ, பல முகங்களோ இருக்கும். அக்னி ஆட்டு வாகனத்திலும், வாயு மான் வாகனத்திலும், யமன் எருமை வாகனத்திலும் இருப்பார்கள். அக்னியின் தலை(முடி) தீச்சுவாலை வடிவிலும், யமன் கைகளில் பாசக் கயிறும் இருக்கும். நிருதி என்பவர் ஒட்டகம் அல்லது கழுதை வாகனத்தில் இருப்பார். சில இடங்களில் பிரேத வாகனம் இருக்கும். குபேரன் குட்டையாக தொந்தியும் தொப்பையுமாக தங்கக் கலசத்துடன் மனித வாகனத்தில் காட்சி தருவார்.

358bc-vishnu

தசாவதாரம் (கிருஷ்ணன்,ராமன்)

தசாவதாரம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்கள். இந்த மூர்த்தங்களை அடையாளம் காண்பது எளிது:

மச்சாவதாரம்: அடிப்பகுதி மீன் போல இருக்கும்

கூர்மாவதாரம்: அடிப்பகுதி ஆமை போல இருக்கும்

வராஹாவதாரம்: மூக்கு, பன்றி போல இருக்கும்; அதன் மூக்கில் பூமி இருக்கும்

வாமனாவதாரம்: குள்ளமான பிராமணச் சிறுவன்; குடையுடன் காணப்படுவான்

நரசிம்மாவதாரம்: முகம், சிங்கம் போல இருக்கும். ஆக்ரோஷமாக ஹிரண்யகசிபுவை வதம் செய்வதைக் காணலாம்.

பரசுராமாவதாரம்: கையில் அல்லது தோளில் பரசு/கோடரி இருக்கும்.

ராமாவதாரம்: கையில் அம்புடன் நெடிய உருவம்; பொதுவாக லெட்சுமணன், சீதை ஆகியோருடனும் பாதம் இருக்கும் இடத்தில் அனுமனுடனும் காணப்படுவார்.

பலராமாவதாரம்: தோளில் உழும் கலப்பை இருக்கும்; வண்ணப் படங்களில் மஞ்சள் ஆடையுடன் இருப்பார்.

கிருஷ்ணாவதாரம்: தலையில் கிரீடம்; அதில் மயில் தொகை; அருகில் பசு மாடு; வாயில் புல்லாங்குழல்; அருகில் ராதா; வண்ணப் படங்களில் நீலாம்பரதாரியாகக் காட்சி அளிப்பார்.

கல்கி அவதாரம்: வெண்குதிரையில் கைகளில் வாளுடன் வருவார். சில இடங்களில் முகமே குதிரை போலக் காட்டப்பட்டிருக்கிறது.

IMG_6819

நவக்கிரகங்கள்

நவக்கிரகங்களில் ராகு சந்திரனுடனும் கேது – பாம்புடனும் இருப்பர். சூரியன் பின்பக்கம் சூர்யப் பிரபையுடனும் 7 குதிரை, ஒற்றைச் சக்கர ரதத்தில் பவனி வருவார்.சந்திரன் சந்திரப் பிரபையுடன் இருப்பார். ஏனைய கிரகங்களை வாகனம் இல்லாவிடில் அடையாஅள்ம் காண்பது கடினம்.

இந்துக்களின் எண்ணற்ற கடவுள் மூர்த்தங்களை விளக்குவது சாத்தியமல்ல. மேற்கூறிய பட்டியலை வைத்து ஓரளவு சைவ, வைஷ்ணவ திருவுருவங்களை அடையாளம் காணலாம்.

-சுபம்–

b03a6-42bwives2bof2bvishnu