
Written by S Nagarajan
Date: 22 JANUARY 2019
GMT Time uploaded in London – 5-11 am
Post No. 5971
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு நாற்பத்தி ஆறாம்) கட்டுரை – அத்தியாயம் 410
ஒவ்வொருவருக்கும் இரு உடல்கள் உண்டா?
ச.நாகராஜன்

ஒவ்வொரு மனிதருக்கும் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி பௌதிக அல்லது ஸ்தூல சரீரம் – அதாவது – வாழ்ந்து கொண்டு செயல் புரியும் உடல் ஒன்றும் கண்ணுக்குத் தெரியாமல் சூக்ஷ்ம சரீரம் என்று ஒன்றும் உண்டா?
ஹிந்து மத அறநூல்கள் இரு உடல்களைப் பற்றியும் மனித உடலைச் சூழ்ந்திருக்கும் ஒளி வட்டம் பற்றியும் கூறுகின்றன.
இந்த இரு உடல்களையும் காண வல்ல ஏராளமானோரை மனித வரலாறு குறிப்பிடுகிறது.
மனித உடம்பில் உள்ள சக்கரங்கள் மர்மமாக செயல்படுகின்றன. இந்த சக்கரங்களை அறிந்து முயற்சி செய்து மேல் நிலையை அடைந்து விட்டால் போதும், சர்வ சித்திகளும் உண்டாகும் என்பது ஹிந்து யோகா சொல்லும் நெறிமுறை.
மனித உடலின் அளப்பரிய ஆற்றலை வைத்து ‘ப்ராணிக் ஹீலிங்’ என்னும் சிகிச்சை முறையை வெற்றிகரமாக உலகில் பலரும் அளித்து வருகின்றனர்.
இவர்களுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராகத் திகழ்ந்தார் ஓல்கா வோரல் என்னும் அமெரிக்கப் பெண்மணி. (Olga Worrall – 1906-1985) இவரது கணவர் அம்ப்ரோஸ் வோரலும் (Ambrose Worrall) ஒரு ஹீலர்(healer) தான்; அவர் ஒரு விஞ்ஞானியும் கூட. ஆகவே தனக்கு எப்படி இந்த சக்தி ஏற்படுகிறது, எப்படி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது என்பதையெல்லாம் அறிவியல் பூர்வமாக தன்னை ஆராய அவர் விஞ்ஞானிகளுடன் ஒத்துழைத்தார். தனக்கு மீறிய ஒரு சக்தி தன்னிடம் செயல்படுகிறது என்பதைத் தான் அவரால் சொல்ல முடிந்தது.
டாக்டர் டேனியல் பெனார் (Dr Daniel Benor) என்பவர் பிரிட்டிஷ் அரசுக்கு மாற்று மருத்துவம் பற்றிச் சொல்லும் ஆலோசகர். அவர் இப்படிப்பட்ட சிகிச்சையாளர்களை ஆராய்ந்து, சிகிச்சையாளரின் எண்ண சக்தியே அடுத்தவரை நோயிலிருந்து விடுபடச் செய்கிறது என்றார்.
சூக்ஷ்மமாக உடலில் இருக்கும் பல ஆதாரங்களைத் தூண்டி இப்படிச் செயல் பட முடிகிறதா என டாக்டர் வில்லியம் டில்லர் (Dr William Tiller) ஆராய்ந்தார்.

அவர் ஒவ்வொருவர் உடலிலிருந்து வெளிப்படும் கதிரியக்கக் களமானது மிக நுண்மையானது. இது உலகின் அனைத்து எலக்ட்ரோ மாக்னடிக் துகள்கள் மற்றும் அலைகளுடன் தொடர்பு கொண்டு விரிவுபடுத்திக் கொள்கிறது. தனது தகுதிக்கேற்ப எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் அது செயல்படுகிறது என்கிறார்.
உடல் ஆற்றலைப் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட மேலும் மூன்று பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் பர்,(Burr), பெக்கர் (Becker), மற்றும் ஷெல்ட் ரேக் (Sheldrake) ஆவர். தங்கள் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இவர்கள் பொதுவாக ஒத்துக் கொள்ளும் ஒரு உண்மை – ‘மனித ஆற்றல் களங்கள் உண்மையிலேயே உள்ளன; அவை வளர்ச்சிக்கும் தம்மைக் குணப்படுத்திக் கொள்ளவும் தகவல்களைக் கொண்டு செல்ல வல்லவை;இப்படி தகவல்களை ஏந்திச் செல்வதால் அவை மனித நடத்தையில் ஒரு மாறுதலையும் ஏற்படுத்தக் கூடியவை’ என்பது தான்.
ஆக ஸ்தூல உடல் நோய்வாய்ப்பட்டால் அதை சூக்ஷ்ம உடலின் மூலமாக சரி செய்யலாம் என்பது உண்மையாகிறது.
இதை அடுத்த மட்ட ஆராய்ச்சிக் கொண்டு சென்றவர் டாக்டர் லாரி டோஸி.(Dr Larry Dossey 1940இல் பிறந்தவர்;இப்போது வயது 78).இவர் வியட்நாம் போரில் சர்ஜனாகப் பணியாற்றியவர்.

ஒரு இடத்திலிருந்து ஒருவரால் செய்யப்படும் பிரார்த்தனை இன்னொருவரை அவர் எத்தனை மைல்கள் தள்ளி இருந்தாலும் கூட குணப்படுத்தும் என்கிறார் அவர். இவரது இந்தக் கூற்றை ஆராய முன் வந்த வில்லியம் ப்ராட் மற்றும் மரிலின் ஷில்ட்ஸ் (William Braud and Marilyn Schlitz) ஆகிய ஆய்வாளர்கள் 13 சோதனைகளை மேற்கொண்டனர்; 62 பேர்கள் இதில் கலந்து கொண்டனர்; இவர்கள் 271 பேர்களை தங்களின் ஆற்றல் வட்டத்துக்குள் கொண்டுவர முயன்றனர்.
இதன் மூலம், ‘தீவிர நோக்கத்துடன் செய்யப்படும் பிரார்த்தனை பலன் அளிக்க வல்லது’, என்று தான் முடிவைக் கண்டதாக லாரி டோஸி கூறுகிறார். அவரது ‘ஹீலிங் வோர்ட்ஸ்: தி பவர் ஆஃப் ப்ரேயர்’, ‘ப்ரேயர் இஸ் குட் மெடிசின், ‘ஒன் மைண்ட் : ஹௌ அவர் இண்டிவிஜுவல் இஸ் பார்ட் ஆஃப் எ க்ரேடர் கான்ஷியஸ்னெஸ் அண்ட் ஒய் இட் மேட்டர்ஸ்’(Healing Words: The power of prayer, Prayer is good medicine, One Mind: How Our individual is Part of a Greater Consciousness and Why it Matters) உள்ளிட்ட புத்தகங்கள் உலகெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன.
இரு உடல்களைப் பற்றி விஞ்ஞான உலகம் ஆய்ந்து என்ன முடிவைத் தருகிறது என்பதை உலகினர் அனைவரும் பெரிதும் எதிர்பார்ப்பதால் இந்த அறிவியல் சோதனைகள் இன்றைய வேக யுகத்தில் மனித வாழ்க்கைக்கு முக்கியமானதாக அமைகின்றன. நூற்றுக்கும் மேலான புத்தகங்கள் அறிவியல் சோதனைகளைப் பற்றிக் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன! சூக்ஷ்ம உடலை சரிப்படுத்தி நடைமுறை உடலைச் சரியாக்கும் சிகிச்சை முறை உலகில் பிரபலமாகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
ஆண்டனி வான் லீவென்ஹோக் (Antonie Van Leeuwenhoek 24-10-1632-1723) டச் குடியரசில் டெல்ஃப்ட் (Delft) என்ற ஒரு சிறிய நகரில் பிறந்தவர். மைக்ரோஸ்கோப்பை முதலில் கண்டு பிடித்ததோடு பாக்டீரியாவையும் அவரே முதலில் கண்டுபிடித்தார். ஆகவே மைக்ரோ பயாலஜியின் தந்தை என்று அவர் அழைக்கப்படுகிறார்.
துணி வியாபாரத்தில் அவர் கொடி கட்டிப் பறந்தார். நெசவு நூல்களின் தரத்தை லென்ஸ் மூலம் ஆராய்ந்து பார்த்து வாங்குவது அந்தக் காலப் பழக்கமாதலால் அவர் லென்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். மிக நுண்மையான லென்ஸ்களை அவரே தயாரிக்க ஆரம்பித்தார். ஒரு மிலிமீட்டர் குறுக்களவு உள்ள பொருளை முன்னூறு மடங்கு பெரிதாக்கிப் பார்த்தார்.நாற்பது மடங்கு கூட பெரிதாக்க முடியாத அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட லென்ஸின் தயாரிப்பு ஒரு அசாதாரணமான வியப்பூட்டும் காரியம்!
1672ஆம் ஆண்டு ஒரு நாள் தண்ணீரில் இந்த லென்ஸை வைத்துப் பார்த்த போது தான் அவரால் பாக்டீரியாக்களைக் கண்டு பிடிக்க முடிந்தது.இப்படி பத்தாயிரம் பாக்டீரியாக்களைச் சேர்த்தால் தான் ஒரு மணல் துகள் அளவு ஆகும் என்பதை அறிந்த போது அவருக்கே வியப்பு மேலிட்டது. ஒரே ஒரு செல்லை உடைய தாவர, விலங்கினத்தை இதன் மூலம் பார்க்க முடிந்தது. இரத்தச் சிவப்பணுக்களைப் பெரிது படுத்திப் பார்க்கவும் இது உதவியது.
ஒருவர் அவரிடம் வந்து லென்ஸ் தயாரிக்கும் முறையைக் கேட்டார்.” அதுவா, கண்ணாடியை நன்றாக அரைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நல்ல லென்ஸ் உருவாகிவிடும்” என்றார். ஆனால் உண்மையில் அந்த ரகசியத்தை அவர் யாருக்கும் இறக்கும் வரையில் வெளியிடவே இல்லை.
இப்படி 600 மைக்ரோஸ்கோப்புகளைத் தன் வாழ்நாளில் அவர் தயாரித்தார்.
இப்படி ஒரு மைக்ரோஸ்கோப்பை இன்னொரு விஞ்ஞானி தயாரிக்க இவருக்குப் பின்னால் நூறு ஆண்டுகள் ஆயிற்று.அறிவியல் லென்ஸை வைத்து இவர் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் ஏராளமான சுவையான தகவல்கள் தெரிய வரும்!!
****
