
லெட்சுமணன் படித்த ‘ஸ்கூல்’ பற்றி கம்பன் தகவல் (Post No.4916)
WRITTEN by London Swaminathan
Date: 15 April 2018
Time uploaded in London – 14-27 (British Summer Time)
Post No. 4916
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
நான் வாழும் லண்டனில் வேலைவாய்ப்பு பேட்டிகளில் எந்தப் பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் படித்தான் என்பதற்கும் மார்க் (mark) உண்டு. நேருஜி படித்த ஈடன் (Eton) பள்ளி, மற்றும் அரசியல் பேர்வழிகளின் பிள்ளைகள் படித்த கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு (Cambridge, Oxford) பல்கலைக் கழகங்கள், பிரைவேட் ஸ்கூல் (மாதத்துக்கு 2000, 3000 பவுண்டு பீஸ்/fees) ஆகியவற்றுக்கு தனி மதிப்பு. அதிலிருந்தே அவர்களின் குணநலனும், அந்தஸ்தும், அறிவும் புலப்படும் என்ற ஒரு அசட்டு நம்பிக்கை.
ராமனின் தம்பி லெட்சுமணன் படித்த ஸ்கூலில் தியரி (theory) கிடையாதாம்; அதிகம் பிராக்டிகல் (practical) பாடங்கள்தானாம்! இதைக் கம்பனே இலக்குவன் வாய்மூலம் இயம்புகிறான். அதைப் படித்து கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், கம்பன் எவ்வளவு நுணுக்கமாகப் பார்க்கிறான் என்பது புலப்படும்,
“நீ ராமன் தம்பி, நான் ராவணன் தம்பி, வா, கொஞ்சம் வீர வசனம் பேசுவோம்; அதில் யார் வெல்கிறார்கள் என்று முதலில் பார்ப்போம் என்கிறான்” கும்பகர்ணன்.
அதற்கு இலக்குவன் பதில் சொல்கிறான். “அப்பனே நான் படித்த பள்ளிக்கூடத்தில் எங்க வாத்தியார் சொல்லிக் கொடுத்த பாடம் வேறு; நீங்கள் சொல்லினால் பேசுவீர்கள்; நாங்கள் வில்லினால்தான் பேசுவோம்; அதுதான் நான் கற்ற பாடம்”.
முதலில் போர்க்களத்தில் வாக்குவாதம் நடத்துவது என்பதே இந்திய வழக்கு; பகவத் கீதை இதற்குச் சான்று. யுத்த காண்டத்தில் பல எதிர் எதிர் தரப்பு வீரர்கள் சொற் கணைகளைப் பெய்த பின்னரே விற்கணைகளைத் தொடுப்பர் என்பதைக் கம்பனும் காட்டுவான் .

இலக்குவன் மட்டும் எங்கள் ஸ்கூல் சிலபஸ் School syllabus வேறு என்று சொல்வதை கம்பன் கவி வழி சுவைப்போம்:
இராமன் தம்பி நீ இராவணன் தம்பி நான் இருவேம்
பொரநின்றேம் இது காணிய வந்தனர் புலவோர்
பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து
விராவு நல் அமர் விளைக்குதும் யாம் என விளம்பா
யுத்த காண்டம், கும்ப கர்ணன் வதைப் படலம், கம்ப ராமாயணம்
பொருள்
நீ ராமனுக்குத் தம்பி; நான், ராவணனுக்குத் தம்பி. இருவரும் இப்போது போரிட நிற்கிறோம். இப்போரினைப் பார்க்க தேவர்களும் வந்தனர். புகழத் தக்க பழமையான போர் முறையில், நம் பலத்துக்கேற்ற வகையில் முதலில் கொஞ்சம் கதைப்போம்; பின்னர் கை கலப்போம் – என்று கும்ப கர்ணன் செப்பினான்.
இலக்குவன் பதில்
அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர்
மல்லினால் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்பால்
வில்லினால் சொல்லின் அல்லது வெந்திறல் வெள்கச்
சொல்லினால் சொலக் கற்றிலம் யாம் எனச் சொன்னான்–

பொருள்
இருளையே உருக்கி வார்த்து செய்தாற் போல இருந்த கும்ப கர்ணன் சொல்லினைக் கேட்ட (மல்யுத்தம் செய்ததால் உரம் ஏறிப்போன தோள் கொண்ட) இலக்குவன் உரைத்தான்— “உனக்கு பதில் சொல்வது வில்லினால் மட்டுமே இயலும். வீரத்துக்கு இழுக்கு உண்டாக்கும் வகையில் சொல்லினால் சொல்ல யாம் கற்கவில்லை”.
என் வில்தான் பேசும்; சொல் வேண்டாம்; இதுதான் நான் கற்றது.
நல்ல அருமையான பதில்
சில கம்பன் பாட்டில் சொல் நயம் இருக்கும்; சில கம்பன் பாட்டில் பொருள் நயம் இருக்கும்; இன்னும் சில பாடல்களில் இரு நயமும் இருக்கும்.
படித்துச் சுவையுங்கள்.
-சுபம்–