கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1348; தேதி அக்டோபர் 15, 2014.
தமிழ் மொழி ஒரு விந்தையான மொழி. ஆயினும் பெரும்பாலும் இது சம்ஸ்கிருதம் போன்றது. இந்திய மொழிகள் அனைத்தும் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்களை வரிசைப் படுத்துவதிலும், வேற்றுமை உருபுகள் (எட்டு வேற்றுமைகள்), சந்தி இலக்கணத்திலும் பல ஒற்றுமைகளை உடையன. இவைகளில் வினைச் சொல் கடைசியாக வரும்— நான் வீட்டுக்குப் போனேன்— என்பதில் போனேன் என்பது கடைசியாக இருப்பது போல எல்லா இந்திய மொழிகளிலும் இருக்கும். கவிதைகளில் மட்டும் இது மாறும். ஆனால் உலகில் இந்த வரிசையைப் பின் பற்றாத நிறைய மொழிகள் உண்டு. இந்திய மொழிகளை எஸ். ஓ. வி சப்ஜெக்ட் – ஆப்ஜெக்ட் – வெர்ப் என்ற வகையில் சேர்ப்பர்.
சிறப்பு எழுத்துகள் (Special Letters)
தமிழில் மூன்று புள்ளி உடைய – ஃ — மற்றும் – ழ — ஆகிய இரண்டும் சிறப்பானவை. ஆய்த எழுத்து எனப்படும் ‘ ஃ ’ அக்கன்னா பற்றி நிறைய ஆராய்ச்சி செய்யலாம். இப்போதும், எப்போதும் அதிகம் பயன்படுத்தாத இந்த எழுத்து ஏன் வந்தது? இதன் பயன் என்ன? எப்போது வந்தது? என்பது தனி ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உரிய விஷயம். ஆய்த எழுத்தா, ஆயுத எழுத்தா,ஆயத்த எழுத்தா?
தமிழில் ங, ஞ, ஔ ஆகியன அதிகம் பயன்படுவதில்லை. இது பற்றி தனி கட்டுரை எழுதிவிட்டேன். அரிச் சுவடியில் இரண்டு மூன்று வரிகளை வெட்டி விடலாம்!!!
நாம் மிகவும் கஷ்டப்பட்டு இந்திய இலங்கை பிரயோகங்களைச் சேகரித்து வந்தேன் ( கதைத்தல், மணக்குது, இருங்கள்/உட்காருங்கள் நிற்கிறேன்/ இருக்கிறேன், கதிரை, குசினி அறை முதலியன ) பிறகு சென்னையி லிருந்து வெளியாகும் ‘’கிரியா’’ தமிழ் அகராதியில் அவைகளை இலங்கை வழக்கு என்று ஆங்காங்கே கொடுத்திருப்பதைப் பார்த்தவுடன் என் முயற்சியை விட்டுவிட்டேன். ஆனால் கிரியா அகராதியில் இல்லாத தமிழ் சொற்களை அவ்வப்போது குறித்து வைக்கிறேன்.

கிரியா (creA)அகராதியில் 1700 இலங்கைத் தமிழ் சொற்கள் உள்ளன(மொத்தச் சொற்கள் 21,000, இலங்கை வழக்கு மட்டும் 1700 சொற்கள்)
இலங்கையர்கள் கிரிக்கெட் என்பதை கிரிக்கெற் என்றும் லண்டனில் உள்ள பிரெண்ட் கவுன்சில் பெயரை பிரென்ற் என்றும் எழுதுவர். ‘ட்’ என்னும் ஒலியை ‘ற்’ என்று எழுதினாலும் உச்சரிப்பது சரியாகத்தான் இருக்கும் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
வேத மந்திரத்தில் தவறு
இது பற்றி லண்டன் வாழ் தமிழ் சம்ஸ்கிருத/அறிஞர் திருச்சி கல்யாண சுந்தர குருக்களுடன் விவாதிப்பேன். அவர்களுக்கு இருதரப்பு அன்பர்களும் நண்பர்கள். அவர் இதைவிட பெரிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார். வேத ஒலிகள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மாறவில்லை என்பது அவற்றின் தனிச் சிறப்பு. ஆனால் பஞ்சாபிலிருந்து வரும் பிராமணர்கள் வேதத்தில் ‘’ஷ’’ என்று வரும் இடங்களை அவர்கள் ‘’க’’ என்று மாற்றி உச்சரிக்கிறார்கள்! சஹஸ்ர சீர்ஷா ‘’புருஷ:’’ என்ற புருஷ சூக்த மந்திரத்தை அவர்கள் சஹஸ்ர சீர்ஷா ‘’புருக:’’ என்பர். இதை அவர் கூறியவுடன் எனக்கு வியப்பு மேலிட்டது. இந்து பஞ்சாபியருக்கு இது தவறு என்றும் புரிகிறது. ஆனால் ‘’தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’’ என்பதால் மாற்ற முடியாது.

இலண்டனில் நான் தலைமை தாங்கிய சில கூட்டங்களில் தமிழைக் கொலை செய்பவர்கள் இந்தியத் தமிழர்களா? இலங்கைத் தமிழர்களா? என்ற சர்ச்சை எழுந்தது உண்டு. இது இன்றைய கூட்டத் தலைப்புக்குப் பொருந்தா விஷயம், தனியாகப் பட்டிமன்றம் நடத்தினால் நானே வந்து ஒரு கட்சியைப் பேசவோ தலைமை தாங்கவோ தயார் என்பேன். உடனே அமைதி திரும்பும்.
எனது மனைவி கூட இலங்கைத் தமிழர்களின் தமிழ் — மிகவும் அழகாக இருக்கிறது — என்பாள். வானொலியிலும் தொலைக் காட்சியிலும் அவ்வப்போது செய்தி வாசிப்பவர்களைக் கண்டு எடுக்கப்பட்ட முடிவு இது என்று எனக்குத் தெரியும். உடனே அவர்கள் பயன்படுத்தும் கதைத்தல், பாரதூரமான, மனுஷி, கதிரை, குசினி என்ற சம்ஸ்கிருத, போர்ச்சுகீசியச் சொற்களைக் காட்டி இவை தமிழ் அல்லவே என்பேன்.
தமிழில் ‘’ழ’’ ஒரு சிறப்பு எழுத்து. வேறு மொழியில் இல்லை என்று சொன்னாலும் பிரெஞ்சு மொழியில் உள்ள ‘’ரோலிங் ஆர்’’ (Rolling R sound) ஒலியையும் சீன மொழியில் உள்ள ஒரு எழுத்தையும் இதனுடன் ஒப்பிடுவர். இவ்விரு மொழிகள் பற்றியும் அதிகம் தெரியாததால் ஆய்வு செய்யவில்லை. காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் மாபெரும் மொழியியல் அறிஞர். உண்மையில் அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை. ரிக் வேதத்தில் இந்த ஒலி இருப்பதைக் காட்டி இருக்கிறார் ( சாந்தோகா, பௌழியா).
என்னுடைய கருத்து தமிழும் சம்ஸ்கிருதமும்தான் உலகிற்கே மூல மொழிகள். நாம் இரு கண்கள் போலப் போற்றும் இவ்விரு மொழிகளைக் கொண்டு உலகையே அளந்து விடலாம். இந்த மொழிகள் இரண்டையும் தெரியாமல் யாராவது இந்திய வரலாற்று ஆராய்ச்சியில் இறங்கினால் கால்டுவெல் பாதிரியார் உளறியது போல உளறி அகப்பட்டுக் கொள்வர் (கால்டுவெல் செய்த தவறுகள் என்ற எனது கட்டுரையில் மேல் விவரம் காண்க)
60, 70, 80, தொன்பது
தமிழில் எழுபது, எண்பதுக்குப் பிறகு ஏன் தொன்பது வரவில்லை,
எழுநூறு, எண்ணூறுக்குப் பின் ஏன் தொன்னூறு வராமல் தொள்ளாயிரம் வருகிறது என்று பலர் ஏற்கனவே ஆராய்ச்சி செய்துள்ளனர். ஆனால் ஆயிரம் வரிசை சொல்லும் போது மட்டும் ஏழாயிரம் எட்டாயிரத்துக்குப் பின் ஒன்பதாயிரம் என்று ஒழுங்காக வந்து விடும்.
இலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் சொல்லிக் கொடுத்தபோது இவைகள் குறித்து எல்லாம், மாணவர்களை எச்சரிப்பேன்- தவறு செய்யாமல் இருப்பதற்காக!!
இதை சம்ஸ்கிருதத்திலும் காணலாம் ‘’ஊன’’ மாசிகம் முதலிய சொற்களால் மாதத்தைவிடக் ‘’குறைந்தது’’ (ஊன) போன்ற விஷயங்களை விளக்குவர். இந்த ஊனம்தான் ஒன் –பது (ஊன பத்து= 10—1=9) என்பர் சிலர்.
இன்னொரு சாரார் இந்தியாவில் எட்டு வரைதான் எண்கள் இருந்தன இதனால்தான் ‘’எண்’’ என்றால் = எட்டு என்பர். சம்ஸ்கிருதத்திலும் ‘’நவ’’ (9) என்றால் புதியது!!! ரிக் வேதத்தில் பிரமாண்டமான டெசிமல் சிஸ்ட (தசாம்ச முறை) எண்கள் இருந்தாலும் ஆதிகாலத்தில் எட்டின் மடங்கையே எடை விஷயத்திலும் எண்ணிக்கை விஷயத்திலும் இந்தியர்கள் பயன்படுத்தினர். இதற்கு சிந்து சமவெளி எடைக்கற்களும் (120, 240, 320) இந்தியாவின் பழைய நாணய முறைகளும் சான்று பகரும்.

நான் சின்னப் பையனாக இருந்த போது காலணா காசுக்காக அம்மாவிடம் கெஞ்சுவேன். காலணாவுக்கு ஆறு மிட்டய் கிடைக்கும்!! நாலு காலணா= ஒரு அணா; 16 அணா = ஒரு ரூபாய். நாணயங்களும் நாலணா, எட்டு அணா என்றே வெளியிடப்படும். எல்லாம் நான்கின் எட்டின் மடங்கு!!! (மூன்று தம்பிடி=காலணா, ஒரு ரூபாய்= 64 கால் அணா நாணயங்கள் அல்லது 192 தம்பிடிகள்!!)
மதுரை வடக்குமாசிவீதி யாதவர் பள்ளிக் கூடத்தில் ஒண்ணாப்பு (ஒன்றாம் வகுப்பு படித்தேன்). பெரிய வகுப்பான ஐந்தாம் வகுப்பில் ஒரு மணி இருக்கும். பள்ளிக் கூடம் நாலரை மணிக்கு முடியும். அதற்கு முன்பு ராகம் போட்டு வாய்ப்பாடு சொல்வோம். அங்கும் கூட 16 ஆம் வாய்ப்பாடுதான் கடைசி வாய்ப்பாடு. ராகத்தோடு — (பூர்ணாஹுதி மந்திரம் போல) — உரத்த குரலில் 16 – 16 =256 என்று சொல்லி முடித்தவுடன் முடித்தவுடன் ஒரு பெரிய பையன் (லீடர்) பள்ளிக்கூட மணியை எடுத்துக்கொண்டு போய் அடிப்பான். எல்லோரும் ‘’ஓய்’’ என்று கத்திக் கொண்டு வெளியே ஓடுவொம். அங்கும் 16 (எட்டின் மடங்கு) தான் கடைசி.
மணக்குது, நாற்றம் அடிக்கிறது
மணக்குது:— இதை நாற்றம் அடிக்கிறது என்ற பொருளில் இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் மணக்குது என்றால் சுகந்த மணம் வீசுகிறது என்று பொருள் —(நெய் மணக்குது, நெய் மணக்குது—சபரி மலையிலே என்ற பாட்டு பிரசித்தமானது)— . அந்தக் காலத்தில் நாற்றம் என்றால் துர் நாற்றம் என்பது அல்ல. ஆனால் இன்று நாம் துர்வாசனை என்ற பொருளில் பயன் படுத்துகிறோம். எல்லா மொழிகளிலும் காலப்போக்கில் இப்படி பொருள் மாறும். இது பெரிய விஷயமல்ல.
இலங்கைத் தமிழர்களும் நிறைய சம்ஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். வீரகேசரி முதலிய பத்திரிக்கைகளில் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தை கிழித்து எடுத்துக்கொண்டு ‘’ஹைலைட்டர்’’(Highlighter Pen) பேனா வைத்து ஆராய்ச்சி செய்வேன். தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் போலத்தான் அவையும். இதே போலத்தான் பேச்சுத் தமிழும் இருக்கிறது. இதே போக்கை பழங்காலத் தமிழ் கல்வெட்டுகளிலும் காண்கிறோம்.
ஆக ஒட்டு மொத்தத்தில் எனது கருத்து சரியே. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, இனி வரும் எந்தக் காலத்திலும் சரி — சம்ஸ்கிருதக் கலப்பில்லாமல் யாரும் பேச முடியாது. இது இழுக்கு அல்ல. ஒரு மொழி வளர ஓரளவுக்கு மற்ற மொழிச் சொற்கள் தேவை. ஆனால் அந்த மொழித் தூய்மை கெடாத அளவுக்கு இதைச் செய்ய வேண்டும். இன்று எப்படி ஆங்கிலக் கலப்பிலாமல் நாம் பேச முடியாதோ அதைப் போலத்தான் சம்ஸ்கிருதமும்.
தமிழனின் ஆதங்கம்
தமிழர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை (Inferiority complex) உண்டு. சம்ஸ்கிருதத்துக்குப் பின்னர் தான் தமிழ் மொழி வந்தது, இலக்கியம் வந்தது என்று சொன்னால் அது தாழ்வு என்று நினைக்கின்றனர். எப்படியாவது தமது மொழியையும் கலாசாரத்தையும் உலகிலேயே பழையது Oldest, greatest) என்று காட்ட வேண்டும் என்பது அவர்கள் துடிப்பு. ஒரு மொழியின், மதத்தின், கலாசாரத்தின் பெருமைக்கு பழமை மட்டும் காரணமாகது. நேற்று வந்த ஆங்கில மொழியும் இஸ்லாம் மதமும் உலகெங்கும் பரவி நல்ல செல்வாக்கான நிலையில் இருப்பதைப் பார்த்தால் இது புரியும்.
அல்லூறு: மலேசியத் தமிழர்கள் சாக்கடை, ஜலதாரை என்பதற்கு அல்லூறு என்பர். இலண்டன் தமிழ் சங்கத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த (காலங்சென்ற) திரு கணபதி அவர்கள் இந்தச் சொல்லைச் சொல்லி மகிழ்வார். இது பழந்தமிழ் சொல் என்றும் மலேசியர்கள் மட்டுமே பயன்படுத்துவர் என்றும் சொல்லுவார். நான் படித்தவரை இது சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் பிற்காலத் தமிழ் நூல்களில் இருக்கிறதா என்றும் தெரியாது. கிரியா அகராதியில் (2008 பதிப்பு) இல்லை. ஒருவேளை பழந்தமிழ் சொல்தான் என்று நிரூபிக்கப்பட்டாலும் ஒரு தமிழ் சொல்லை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது. மலையாள த்தில் இன்றும் கூட வழக்கொழிந்த நிறைய பழந்தமிழ் சொற்களைப் பயன்படுத்து கின்றனர்.
தமிழ் வாழ்க! சம்ஸ்கிருதமும் வாழ்க!!



You must be logged in to post a comment.