
Giridharan Rajagopalan speaking
Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 12 June 2019
British Summer Time uploaded in London – 19-38
Post No. 6537
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

Mr and Mrs Siva Krishnamurthy
லண்டனில் இளம் எழுத்தாளர்களின் கதைப் புத்தகங்களின் விமர்சனமும் அறிமுகமும் ஜூன் 1-ம் தேதி நடந்தது. (இது பற்றி முன்னரே இரண்டு கட்டுரைகள் இங்கே பதிவிடப்பட்டன. இது மூன்றாவது கட்டுரை) கதாசிரியரும் , கட்டுரையாளருமான ஜெயமோகன் அவர்களிடமிருந்து ஊற்றுணர்ச்சி பெற்ற இளம் எழுத்தாளர்கள் ஒன்று கூடி புதிய
ஒரு தமிழ் அமைப்பை உருவாக்கினர். அதன் பெயர் ‘லண்டன் தமிழ் இலக்கியக் குழுமம்’. அதில் லண்டன் எழுத்தாளரும் கதாசிரியருமான சிவா கிருஷ்ணமூர்த்தியின் ‘வெளிச்சமும் வெயிலும்’ கதைப் புத்தகம் பற்றி கிரிதரன் ராஜகோபாலன் விமர்சனம் செய்தார். கிரி, சிவா, சிரில், தனராஜ் ஆகிய நால்வரும் பல கதை கட்டுரைகளை ‘சொல்வனம்’ முதலிய பிளாக்குகளில் ஏற்கனவே எழுதி வாசகர்களின் வரவேற்பபைப் பெற்றவர்களாவர். இதோ வெளிச்சமும் வெயிலும் கதைகள் பற்றி கிரியின் விமர்சனம்:-

“நண்பர்களுக்கு வணக்கம்
ஒரு முறை என் உறவினர் ஒருவரிடம் நண்பர் ஒருவர் எழுதிய கதையை அனுப்பியிருந்தேன். உறவினர் வாசிப்புப் பழக்கம் உள்ளவர். ஒரு விதத்தில் எனக்கும் வாசிப்பை அறிமுகப்படுத்தியவர் எனும் விதத்தில் என் வழிகாட்டியும் கூட. குமுதத்தின் நடுப்பக்கத்தில் கவனம் கூடிய காலம் அது. அந்த காலத்தில் சுஜாதாவையும் பாலகுமாரனையும் அறிமுகப்படுத்தினார். கதைகளில் ரெண்டே ரெண்டு விஷயம் தான் கவனத்தில் இருக்க வேண்டும் என்பார். கதை நம்பும்படியாக இருக்கிறதா, கதாபாத்திரங்கள் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறார்களா – இவை ரெண்டும் போதும் என்பார். நான் அனுப்பியதோ ஒரு வரலாற்று மிகு புனைவு. கற்பனையை மட்டுமே பெருமளவு நம்பி படிக்கத் தொடங்கவேண்டிய வகை. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே ரெண்டு விஷயங்களைச் சொன்னதோட கதையில் மானுட அன்பு தெரியவேண்டும் எனக்கூடுதலாகச் சொல்லி முடித்தார். அறுபது வயதைக் கடந்தவர். இன்று சுஜாதாவைப் படித்தால் பல கதைகளை நிராகரிப்பேன் என்றார்.
நண்பர்களே, கதை வாசிப்பு என்பது நம் வாழ்நாள் முழுவதும் வரக்கூடிய பழக்கம் எனக்கொண்டால் ஒருவருக்கு காலம் முழுவதும் மாறாத ரசனை என்று ஒன்று இருக்க முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஒரே எழுத்தாளரின் கதைகளை ஒட்டுமொத்தமாகப் படிப்பதென்பது அதை எழுதியவரை புரிந்துகொள்ளும் முயற்சி தான். அவரது ரசனை, விருப்பு, வெறுப்புகள், ருசி, எரிச்சலுக்கான விஷயங்கள் எனப் பல வகையில் அவரது வாழ்க்கைப்பார்வை திரண்டு வரும் கலசம் தான் கதைகள். அதுவும் ஒருவர் தன் வாழ்நாளில் கண்டவற்றை, கேட்டவற்றை, கற்பனை செய்ததை எழுத்தில் பதியும்போது நாம் அவருடன் பல்வேறு காலகட்டங்களில் பயணம் செய்தவர் ஆகின்றோம். கருவறைக்குத் திரும்ப எத்தனிப்பது போல காலத்தை முன்னும் பின்னும் புரட்டிப்பார்க்கும் முயற்சி.

சிவா கிருஷ்ணமூர்த்தி, அனோஜன் பால கிருஷ்ணன் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.
சிவா கிருஷ்ணமூர்த்தியின் பல கதைகளின் முதல் வாசகனாக நானும் நண்பர் பாஸ்கர் எனும் நட்பாஸும் இருந்திருக்கிறோம். அவர் எங்கோ சென்னையில் இருப்பவர் என்றாலும் இன்று என்னோடு இங்கே இருப்பவராகத் தான் நினைக்கிறேன். சிவாவுக்கும் அதே எண்ணம் இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அவரது லட்சிய வாசக வடிவம் நண்பர் நட்பாசாகத்தான் இருக்கும். எங்களுக்கு மட்டுமல்லாது இன்று எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கும் வழிகாட்டியாக அவர் இருக்கிறார்.
சிவா கிருஷ்ணமூர்த்தியின் புனைவு உலகம் பெரும்பாலும் இந்தியாவுக்கு வெளியே இங்கிலாந்தில் நிகழ்பவை. கல் பாவித்தத் தெருக்கள், மிக அருகே தெரியும் வானம், குறுகலான வீதிகளில் ஒரே மாதிரியான அச்சில் வார்க்கப்பட்ட விக்டோரியன் வீடுகள், ஹை ஸ்டிரீட் எனப்படும் சந்தை வீதி என அந்நிய உலகை நம்முன்னே காட்டிட மிகவும் மெனெக்க்டுகிறார். அநேகமாக அவரது கதைகள் அனைத்திலும் இந்த உலகம் முகத்தில் அறையும் தகவல்களாக வெளிப்பட்டபடி இருக்கிறது. இங்கிலாந்தைப் பற்றி அறிமுகமற்றவர்களுக்கு நிச்சயம் ஒரு ஏக்கம் உருவாகும் வகையில் இந்த வர்ணனைகள் இருக்குமென்றால், இங்கு புழங்கும் மனிதர்களைப் பற்றி விவரணைகள் ஆசுவாசத்தை அளிக்கும். அவனும் நம்மைப் போல ஒரு மனிதன் தாண்டா என..
சிவாவின் கதைகளில் நம்மை உடனடியாகக் கவரும் சில அம்சங்கள் உண்டு. ஒரு பிபிசி குற்றப்புனைவுத் தொடர் தொடங்குவதைப் போல நிதானமும், பூடகத்தன்மையும் அவரது தொடக்கங்களில் உண்டு. மெல்மெல்ல ஒரு ஆங்கிலேய கிராமப்பகுதியின் ஞாயிறு காலை போல மெல்ல துலக்கம் கொள்ளும். கதாபாத்திரங்கள் அறிமுகமாகும்போதே அவர்களைப் பற்றிய ஒருசில குறிப்புகளில் முழு சித்திரத்தையும் கொடுத்துவிடுவார். அழகான ஒரு பெண், அதுவும் தன் மனதுக்கு நெருக்கமானவள் எனும்போது ம.செவின் ஓவியம் எனச் சொல்லிவிடுவார். ம.செவின் ஓவியத்தை அறிந்தவர்கள் அங்கு முழு பெண்ணைக் கண்ணால் பார்த்துவிடுவார்கள். அதே போல ஒரு தெருவை வர்ணிக்கும்போது, எல்லா ஊரின் தெருவைப் போல இதுவும் இருந்தது என சொல்லிவிட்டு ஹை ஸ்டீர்ட்டில் இருக்கும் கடைகள் ஒன்றிரண்டைச் சொல்லிவிடுவார். இது ஒரு அம்சம். மற்றொன்ரு மனிதர்களின் பிரத்யேகத்தன்மை – இதையும் ஓரிரு வரிகளில் நம் முன்ன்னே நிறுத்துவதற்காக சில தனிப்பட்ட உச்சரிப்புகளையோ, அவர்களது பார்வைகளையோ சொல்லிவிடுவார். இது அவர்களை மட்டும் அறிமுகப்படுத்தாது. அவர்களின் பாத்திர அகச்சித்திரத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும்.

பெரும்பாலான கதைகளை எழுதும்போதோ அதற்கு முன்னரோ என்னிடம் நேர் பேச்சில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். எப்படி ஒரு கதையை எழுதியிருக்கிறாரோ அப்படியே தான் சொல்வார். இது சில சமயம் சுவாரஸ்யமான கதைசொல்லலாக இருக்கும். சில சமயம் லீனியரான கதை சொல்லலால் பின் கதை மிக நீண்டு போய்விடும் அபாயமும் நடந்திருக்கிறது.
நினைப்பதெல்லாம் உளறும் சம்பத் எனும் பாத்திரம், ப்ளைட்டில் சந்திக்கும் முன்னாள் காதலி, புதிதாக ஊருக்கு வரும் ஆந்திரா நண்பரின் அட்டகாசங்கள், ஆஸ்திரேலியர்களைக் கைதிகளாகப் பார்க்கும் நவீன மங்கை, சொந்த ஊரிலேயே காரணமில்லாமல் அகதி ஆனவர் வெளிநாட்டில் பிறர் மீது காட்டும் பிரிவினை பாவம் என கதைகள் பல தரப்பட்ட மனிதர்களையும், சம்பவங்களையும் பற்றிப் பேசுகிறது. இவை அனைத்தையும் கோர்ப்பது எது? தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களை கூர்ந்து கவனிப்பதில் தொடங்கி, ஏதோ ஒரு புள்ளியில் இவையெல்லாம் இணையும் வரலாற்றுத் துளிகளைச் சேர்ப்பதில் முடிகிறது.
நல்ல நகைச்சுவை கதையையும் கதாபாத்திரங்களையும் இத்தொகுப்பில் உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக, யாகாவாராயினும் நாகாக்க எனும் சிறுகதை இத்தொகுப்பில் நகைச்சுவை மிகுந்த புனைவாக அமைந்திருக்கிறது. சந்தர்ப்பம் அவலமாக ஆக வேண்டிய சூழலை நகைச்சுவையால் காப்பாற்றியிருக்கிறார். கதை களன் மட்டுமல்லாது, பாத்திரங்களின் வார்ப்பும் அவர்களது எண்ண ஓட்டங்களும் மிகவும் சுவாரஸ்யமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. அதே போல What a wonderful world கதையில் வரும் செல்வேந்திரனின் பாத்திரம் சுருங்கச்சொல்லப்பட்டிருந்தாலும் மனிதனின் கசப்புகளையும், வரலாற்றின் முரணையும் நன்றாகப் படம்பிடித்துக்காட்டியுள்ளது.
ஒரு வகையில் சாதாரணமானவர்களின் சாதாரண வாழ்க்கையில் இடம்பெறும் சிறு முரண்களை வெளிப்படும் கதைகள் என இவற்றைச் சொல்லலாம். யாருமே வரலாற்றின் அதி நாயகர்களோ, தின வாழ்வின் வெற்றியாளர்களோ கிடையாது. தோல்வியாளர்கள் கூட இல்லை. ஆனால் சக மனிதன் மீது வெறுப்பும், அந்நியரின் மீது காரணமற்ற அன்பும் சட்டென உருவாகும் சூழல்கள் மீதான வெளிச்சம் இக்கதைகள்.
கதையின் நிதானமான தொடக்கம் நம்மை அந்த உலகத்தோடு அறிமுகப்படுத்துகிறது என்பது போல இடையில் வரும் உரையாடல்களும், பாத்திரங்களின் சிறு கோணல்களும் கதையை விட்டுத் தனியே பிரித்துவிடும்படியாக அமையவில்லை. அதனால் பனி உருளைப்போல மெல்ல கிளம்பும் கதை பல மனிதர்களை சேர்த்துக்கொண்டு அவரவர்க்கான உலகத்தை உருவாக்கிவிடுகிறது.

பிராஜெக்ட் மேனேஜராக வரும் பெரியசாமி கணினித்துறையில் இருக்கும் பலருக்கும் பரீட்சயம் இருக்கும் கதாபாத்திரம். தனது பிராஜெக்ட் குறிப்பிட்ட நேரத்தில் எந்த பிசகும் இல்லாமல் க்ளையண்டுக்குத் தயாராகிவிட வேண்டும் எனும் ஒரே குறிக்கோளோடு மட்டும் வாழ்பவர். ஒரு பிராஜெக்ட் மேனேஜரின் கஷ்டம் இன்னொரு பிராஜெண்ட் மேனேஜருக்குத் தான் புரியும் என்பது போல சிவாவின் அனுபவம் இங்கு நன்றாகக் கை கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு பிராஜெக்ட் டீமும் ஒரு மினி உலகம். பலவேறு மனிதர்கள், அவர்களுக்கு இடையே இருக்கும் சிக்கல்கள், திறமைசாலிகள், பேச்சை மட்டும் மூலதனமாகக் கொண்டே அலுவலகத்தில் வலம் வருபவர்கள் என நம் முன்னே இருக்கும் உதாரணங்கள் அநேகம்.இவை எல்லாவற்றுக்கும் அடியில் அல்லது தலைக்கு மேலே தினம் வாழ்க்கை எனும் மற்றொரு அவல உலகம் உள்ளது. கோபி கிருஷ்ணனின் கதையில் வரும் குமாஸ்தா போல உலகத்தை தன் அலுவலகத்துக்குள் கொண்டு செல்லக்கூடிய சவுகரியம் ஐடி துறையில் இருப்பவர்களுக்குக் கிடையாது. உலகம் முழுவதும் ஒரு டைம் சோனில் இருக்கும் போது டைம் சோனே இல்லாத ஒரு இடம் இந்திய ஐடி தொழிற்கூடங்கள். அலுவலகத்துக்கு வரும் வழியில் ஒரு கிழவியை இடித்துவிட்டதால் திறமைசாலி அலுவலகர் முக்கியமான நாளன்று வர இயலவில்லை. இக்கட்டான நேரத்தில் பெரியசாமியை அழைத்து தனது சிக்கலைச் சொல்ல வருகிறார். ஆனால் பிராஜெக்டில் கோ லைவ் சிக்கலால் பெரியசாமி எரிந்து விழுகிறார். ஆனால் பாட்டி இறந்துவிட , கோ லைவ் சிக்கலில்லாமல் போன அன்றைய இரவு உதவ முடியாமல் போன காரணத்தால் வரிசையாக தன்னை இந்த இடத்துக்கு வரவழைத்த பலவேறு காரிய காரணங்களை கன்னத்தில் மானசீகமாக அடிக்கிறார். வெகுளாமை எனும் இந்த கதை நல்லதொரு சிறுகதைக்கு உதாரணமாக இருக்கிறது.
சின்னச் சின்ன வரலாற்று தருணங்களால் ஆன சரடு மைக்ரோ வரலாறாக மாறி இருக்கிறது. விக்டோரியன் எனும் கதையில் விக்டோரியன் பேய்களைக் கண்டு பயப்படும் கதைக்களனில் யுத்த காலத்தில் போரிடச்சென்றவரின் கடிதம் ஒன்று கிடைக்கிறது. யுத்த கால கடிதங்கள் என்பது மிகப்பெரிய ஆவணமாக மறவோம் கதையில் வருகிறது.
இந்த உலகிலும் பல சாக்கடைகள் உண்டு, இருட்டு உண்டு, ஏழ்மை உண்டு, ஏமாற்றங்கள் உண்டு, பல சங்கடங்களும், சமரசங்களும் உண்டு எனும் இடத்துக்கு இவரது கதைகள் மெல்ல நகர்வதை இவரது கதைகளைத் தொடர்ந்து படிக்கும் என்னால் உணர முடிகிறது. சின்ன சின்ன வரலாற்றுத் தகவல்களை இடங்களோடு தொடர்புபடுத்தி வருகிறார் என்றாலும் வரலாறு எனும் பரிணாமம் பூதாகரமாக இங்கு இருப்பதை மேலும் விரிவுபடுத்தியிருக்கலாம் என்பது ஒரு குறை.
என் உறவினரிடம் இன்று சிவாவின் கதைகளைக் கொடுத்தால் அதில் இருக்கும் நம்பகத்தன்மைக்காகவும், பாத்திரங்களின் தனித்துவத்தைச் சொன்னதற்காகவும் நிச்சயம் பாஸ் மார்க் கொடுத்திருப்பார். சின்ன விஷயங்களைச் சொல்லிச்செல்லும் சாதாரணர்களைப் பற்றிய கதைகளாகவும் இருப்பதால் சுஜாதாவின் ஶ்ரீரங்கத்துத் தேவதைகள் போல லண்டன் லார்டுகள் பற்றிய தொகுப்பாகவும் இருக்கிறதென பாராட்டியிருப்பார். இன்னும் சில காலங்கள் கழித்தும் நாம் நினைவில் கொள்ளும் சில பாத்திரங்களைப் படைத்ததாலும்,, அந்நிய கலாச்சாரத்த்தைப் பற்றிய சின்னச்சின்ன வரலாறுக்காகவும் இந்தத் தொகுப்பு நினைவில் வாசகர் மனதில் நிற்கும்.”
–subham–
