
Written by S.NAGARAJAN
Date: 9 September 2017
Time uploaded in London-5-37 am
Post No. 4195
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை (ஏழாம் ஆண்டு 28வது கட்டுரை)
ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை!
ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 5
ச.நாகராஜன்
“இரஸவாதம் என்பது என்ன? உபயோகமற்றவற்றை நீக்கி உபயோகமானவற்றை மூல அடிப்படை பொருளாகவும் சாரமாகவும் மாற்றும் ஒரு கலையே இரஸவாதக் கலையாகும்.” – பிலிப்பஸ் ஆரோலஸ்
நியூடனின் குறிப்புகளை நன்கு ஆராய்ந்த பிரின்ஸிப்பிற்கு நியூடனும் பாயிலும் நிச்சயம் ஈயத்தைத் தங்கமாக மாற்ற முடியும் என்று நம்பினர் என்பது நன்கு தெரிந்தது.
அவர்கள் எவ்வளவு தூரம் அதில் முன்னேறி இருந்தனர்?
தங்கமாக மாற்றும் ஆராய்ச்சியில் கிட்டத்தட்ட அவர்கள் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தனர் என்றே பிரின்ஸிப் நம்புகிறார்.
ஏனெனில் ராபர்ட் பாயில் சட்டத்தை வெகுவாக மதிப்பவர். அவர் ஹவுஸஸ் ஆஃப் பார்லிமெண்டில் தங்கம் தயாரிப்பதை எதிர்த்து இருந்த சட்டத்தை நீக்கி தங்கமாக மாற்றுவதை சட்டபூர்வமாக ஆக்க வேண்டும் என்று வெகுவாக முயன்றார்.
ஏனெனில் சட்டத்திற்கு உட்பட்டே எதையும் செய்ய வேண்டுமென்பது அவர் கொள்கை.
இறுதிக் கட்டத்தை அவர் எய்தி விட்டதாக நம்பியதாலேயே அவர் அப்போதிருந்த சட்டத்தில் உரிய மாறுதலைச் செய்ய வேண்டுமென விரும்பினார் என்கிறார் பிரின்ஸிப்;
ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாயில் 1691ஆம் ஆண்டு இறந்தார்.
தங்கத்தை உருவாக்கும் – ரெட் எர்த் (Red Earth) – சிவப்பு பூமியை எப்படி செய்வது என்பதை அவர் விளக்கமாக எழுதி ரகசியமாக வைத்திருந்தார். பாயிலின் உதவியாளரும் அவரது சட்டபூர்வ உதவியாளரும் தத்துவ ஞானியும் இரஸவாதக் கலை ஆர்வலருமான ஜான் லாக் (John Locke) என்பவர் அவரது குறிப்புகளை அவரது மறைவிற்குப் பின்னர் சற்று தாராள மனதுடன் நியூட்டனுக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் அந்தக் குறிப்புகளை வைத்து நியூட்டன் என்ன செய்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
பாயில் இறந்த ஒரு ஆண்டுக்குப் பின்னர் நியூட்டனுக்கு மனத்தளவில் ஒரு சோர்வு வியாதி ஏற்பட்டது. அது எதனால் என்பது இன்று வரை பெரிய விவாதப் பொருளாகி விட்டது.
அது பாதரஸ விஷத்தினால் தான் என்பது பலரது கருத்து.
ரெட் எர்த்தை தயாரிப்பதில் பாதரஸத்தை வெப்பமாக்கி குளிரவைப்பது அடிக்கடி செய்ய வேண்டிய ஒரு செய்முறை.
இந்த செய்முறையை ஊக்கமுடன் நியூடன் செய்திருப்பார் என்றும் அதன் காரணமாகத்தான் அவருக்கு இந்த வியாதி வந்திருக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர்.
ஆனால் நியூட்டனின் மனோவியாதிக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. நியூட்டனுக்கு பெண்கள் என்றாலே ஒரு அலர்ஜி. ஜான் லாக் ஒரு பணக்கார விதவையை நியூட்டனுடன் பழகச் செய்தார் என்றும் இந்தப் பழக்கம் பிடிக்காததனால் தான் அவருக்கு மனத்தளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்று பொதுவான கருத்தைப் பலரும் சொல்கின்றனர்.

ரஸவாதக்கலையில் நியூட்டனின் செய்முறை பலிக்காது என்றும் அதற்குத் தேவையானது அணுப்பிணைப்பு முறை என்றும் இன்று நவீன அறிவியல் முன்னேற்றத்தின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
எது எப்படி இருந்தாலும் 18ஆம் நூற்றாண்டு ஆராய்ச்சிகள்
கூட்டுப்பொருள்களைப் பற்றி நன்கு அறிய உதவின என்பதே பிரின்ஸிப்பின் முடிவு.
பண்டைய கிரேக்கம் சொல்லும் அடிப்படை நான்கு பூதங்களான நீர், நிலம், காற்று, தீ முதலியவை பற்றிய கொள்கையும் மோகமும் காலப்போக்கில் ஒரு முடிவுக்கு வந்தது போலவே ரஸவாதக்கல் பற்றிய மோகமும் நியூட்டனுக்குப் பின்னர் ஒரு முடிவுக்கு வந்தது.
1727ஆம் ஆண்டு நியூட்டனின் மறைவுக்குப் பின்னர் அவரது ரெட் எர்த் வெளியில் தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இந்த ரஸவாதக் கல் பற்றிய மோகம் இப்போது புதிய வடிவில் ஆரம்பமாகியுள்ளது.
நுரையீரல் புற்றுநோய் முற்றிய நிலையில் அறுவைச் சிகிச்சை ஆபத்தானது என்றும் பயனளிக்காது என்றும் இன்றைய அறிவியல் கூறுகிறது. ஆகவே இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு இளமையை மீட்கும் ரஸவாதக் கலை தேவை என்கின்றனர் மருத்துவர்களில் ஒரு சாரார். அவர்கள் தீராத வியாதிகளைத் தீர்க்க ரஸவாதக் கல் தேவை என்கின்றனர்.
ரஸவாதக் கல் என்றால் அது ஒரு கல் இல்லை; அது பொடியாக (powder) இருக்கும் ஒரு அபூர்வப் பொருள், அவ்வளவே!
இந்த மாயப்பொடியைக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகளுடன் மருத்துவர்களும் இணைந்துள்ளனர் இப்போது.
ஆக ஆயிரத்திதொள்ளாயிரத்து எண்பதுகளிலிருந்து ஈயத்தைத் தங்கமாக்கும் கலை பற்றிய ஆய்வில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாறுதல் ஏற்பட்டுள்ளது.
இதில் இன்று பல ஆய்வுக் கட்டுரைகளையும் பரபரப்பாக விற்பனையாகும் புத்தகங்களையும் எழுதியுள்ள நியூமென்னும் பிரின்ஸிப்பும் இதில் வெற்றி பெற்றே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஆய்வைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அவர்கள் ஆய்வு வெற்றி பெற்றால் அதனால் உலகம் “தங்க மயமாகும்” என்பதில் சந்தேகம் என்ன?
இந்தக் குறுந்தொடரில் வெளி வந்துள்ள குறிப்புகளின் அடிப்படையில் ரஸவாதக் கலையில் ஆர்வமுள்ளவர்களும் ஆய்வு மேற்கொண்டு சங்கேதச் சொற்களின் புதிர்களை அவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறலாம்! முயன்றால் முடியாதது ஒன்று இல்லையே!
(அடுத்து ரஸவாதக் கலை நிபுணர்கள் பற்றி வரலாறு கூறும் செய்திகளைப் பார்ப்போம்)

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
முன்னாள் ஜனாதிபதியும் பாரத ரத்னா விருது பெற்றவருமான பெரும் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இளைஞர்களை உத்வேகப்படுத்துவதில் வல்லவர்.
நீங்கள் மகத்தானவர்களாக ஆகி தேசத்தையும் மகத்தானதாக ஆக்குங்கள் என்பதே அவர் இளைஞர்களுக்குத் தந்த அறிவுரை.
2006 ஆகஸ்ட் 28ஆம் தேதி பழங்குடி மாணவர்கள் குழு ஒன்றை அவர் சந்தித்தார்.
லீட் இந்தியா 2020 (Lead India 2020) என்ற இயக்கத்தை ஒட்டி இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்த சீதாராமபுரம் என்ற ஊரிலிருந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரும் அந்தக் குழுவில் இருந்தார். பார்வையற்றவரான அவர் பெயர் ஸ்ரீ காந்த் பல்லா.
அப்துல்கலாம் அவர்கள் அனைவரையும் நோக்கி ஒரு கேள்வி கேட்டார்””நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள்?”
அதற்கு ஸ்ரீ காந்த், “பார்வையற்ற இந்திய ஜனாதிபதியாக ஆக விரும்புகிறேன்” என்று பதில் அளித்தார்.
இதைக் கேட்ட கலாம் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
பெரிய குறிக்கோளை லட்சியமாகக் கொள்ளுங்கள் என்று அடிக்கடி கூறும் அவர் அந்த மாணவரை வெகுவாகப் பாராட்டி லட்சியத்தை நோக்கி முன்னேறச் சொன்னார்.
இன்று 23 வயதாகும் ஸ்ரீ காந்த் ஹைதராபாத்தைச் சேர்ந்த 50 கோடி நிறுவனமான பொல்லாண்ட் இண்டஸ்ட் ரீஸின் தலைமைப் பொறுப்பு அதிகாரி.அங்கு இப்போது 150 பார்வையற்றோ பணி புரிகின்றனர். சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படாத பாக்கேஜிங் தயாரிப்புகளை ஐந்து கிளைப் பிரிவுகளில் அவர்கள் தயார் செய்கின்றனர். அதன் வருடாந்திர விற்பனை ஏழு கோடியைத் தாண்டி விட்டது.
கலாம் அவர்களின் உத்வேகப் பேச்சு இப்படி ஆயிரக்கணக்கானோரை உயர்த்தி உள்ளது!
***