
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9270
Date uploaded in London – –16 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து வாரம் தோறும் திங்கள் கிழமை ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 15-2-21 அன்று ஒளிபரப்பான ஜோதிடம் உண்மையா? என்ற உரை கீழே தரப்படுகிறது.
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். ஜோதிடம் உண்மையா, பொய்யா? அறிவியல் ஜோதிடத்தை ஆமோதிக்கிறதா? ஏராளமானோருக்குத் தோன்றும் இந்த சந்தேகங்களுக்கு சற்று விடை காண முயல்வோம்.

ஜோதிடம் உண்மையா என்பதை மூன்று பகுதிகளாகப் பிரித்து அணுக வேண்டியுள்ளது. முதலாவது அணுகு முறை அறிவியல் ரீதியாக – ஏனெனில் காலத்திற்கேற்ற அணுகு முறை இது. இரண்டாவது அணுகு முறை – வேதத்தின் அடிப்படையிலான சாஸ்திர ரீதியாக. ஏனெனில் வேதாங்கம் ஆறு என்பதை நாம் அறிவோம். அதில் ஒன்று ஜோதிடம். அடுத்து மூன்றாவது அணுகு முறை – அனுபவ ரீதியாக.
இந்த மூன்று முறைகளின் அடிப்படையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு ஜோதிடம் உண்மையா என்ற ஒரு தொடரை மஞ்சுளா ரமேஷ் அவர்களின் ஞானஆலயம் குழுமத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையான ஸ்ரீ ஜோஸியம் இதழில் எழுதினேன். அத்தோடு பல்வேறு பத்திரிகைகளிலும் விஞ்ஞானிகளின் கூற்றுக்களையும் அறிவியல் ஆய்வின் முடிவுகளையும் கட்டுரைகளாகத் தந்து வந்தேன். அதன் அடிப்படையில் இந்த உரையை அமைத்துள்ளேன்.
ஏராளமான விஷயங்களைக் கொண்ட 160 பக்கம் கொண்ட புத்தகம் ஜோதிடம் உண்மையா? ஆகவே அவை அனைத்தையும் சில நிமிடங்களில் அளிக்க முடியாது என்பதால் இந்த உரையில் சுவாரசியமான சில சம்பவங்களையும் ஜோதிடம் பற்றிய அறிவியல் அணுகுமுறையையும் மட்டும் அளிக்கிறேன்.
ஜோதிடம் சம்பந்தமான உண்மையாக நடந்த சில வரலாற்றுச் சம்பவங்களை முதலில் பார்க்கலாம்.
மதுரையை நிர்வகித்த மாபெரும் வீரர் தளவாய் அரியநாயகத்தின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் இது. அரியநாயகம் இளைஞனாக இருந்த சமயம் அவர் ஒரு அந்தணரிடம் ஜோதிடம் பார்க்கச் சென்றார். அந்த சமயத்தில் அவரது அன்றாட வாழ்க்கைக்கே அவர் அல்லல்பட வேண்டியதாக இருந்தது. அந்த அந்தணர் அரிய நாயகத்திடம், “நீ பெரிய சாம்ராஜ்யத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கப் போகிறாய்” என்றார். அரியநாயகத்திற்குச் சிரிப்பு தான் வந்தது. இது சாத்தியமே இல்லை என்றார் அவர். ஆனால் அந்த அந்தணரோ விடாப்பிடியாகத் தான் சொன்னதையே சொல்லி, ‘இது நடக்கும்’ என்றார். சரி, ‘இது நடக்கும்’ என்று சொல்கின்ற நீங்கள் இது நடக்கும் போது என்னை வந்து பாருங்கள்.

உங்களுக்கு எனது சொத்தில் பாதியைத் தருகிறேன்’ என்று கூறிய அரியநாயகம் சொன்னதோடு நிற்காமல் ஒரு ஓலையில் அதை எழுதி அந்தணரிடம் கொடுத்தார். காலம் உருண்டோடியது. அரியநாயகம் மதுரையின் மாபெரும் வீரனாகி நிர்வாகப் பொறுப்பு முழுமையும் ஏற்றார். ஒரு நாள் அரண்மனையில் அந்தணர் ஒருவர் வந்து அரியநாயகத்தைப் பார்க்க வேண்டும் என்றார். சேவகர்கள் அனுமதி தர மறுத்தனர். அவரோ வற்புறுத்தி வேண்டினார். இறுதியில் அரியநாயகம் அவரை வரச் சொல்ல அவரைச் சந்தித்த அந்தணரை நோக்கிய அரிய நாயகம், ‘என்ன விஷயம்’ என்றார். ‘நீங்கள் முன்பொருமுறை என்னைப் பார்க்கச் சொன்னீர்கள். ஆகையால் தான் வந்திருக்கிறேன்’, என்றார் அவர். ‘நானா’ என்று ஆச்சரியப்பட்ட அரியநாயகத்திடம் ‘இதோ நீங்கள் கொடுத்த ஓலை’ என்று ஓலை ஒன்றைக் கொடுத்தார் அந்தணர். அதைப் படித்துப் பார்த்த அரியநாயகம் துள்ளிக் குதித்தார். ‘அன்று கொடுத்த ஓலை’, ‘அன்று கொடுத்த ஓலை’ என்று அவர் கூவினார்.அவர் கண்கள் பனித்தன. ஓடி வந்து அந்தணரை வணங்கினார்.
‘இதில் பாதிச் சொத்தைத் தருவதாக வாக்களித்துள்ளேன். ஆனால் பாதிச் சொத்தை என்னால் தர முடியாது. ஒன்றுமில்லாமல் நான் இருந்த காலத்தில் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டிய உங்களுக்குப் பாதிச் சொத்தைத் தருவது முறை ஆகாது. என் முழுச்சொத்தையும் உங்களுக்குத் தருகிறேன். இதோ இந்த அரியணையில் ஏறி அமருங்கள்’ என்றார் அரிய நாயகம். அங்கிருந்தோரிடம் நடந்ததை எல்லாம் அவர் கூற அனைவரும் அந்தணரை வணங்கினர். ஆனால் அந்த அந்தணரோ, ‘எளிமையாக வாழும் எனக்கு எதற்கு இந்த அரசுப் பொறுப்பு. நான் வாழ்வதற்குத் தேவையான சிறிய அளவு பொருளை மட்டும் தாருங்கள்’ என்று கூறி அரசை அவரிடமே திருப்பி அளித்தார். அரியநாயகம் அவரை உரிய முறையில் கௌரவித்தார்.
இது பழைய காலச் செய்தி.
நவீன் காலத்தில் ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். அமெரிக்காவில் விஸ்கான்ஸின் மாகாணத்தில் 1904இல் பிறந்தார் ஜீன் டிக்ஸன் என்னும் ஒரு அபூர்வ பெண்மணி. ஜோதிடத்தில் வல்லுநரான இவர் இரண்டாம் உலகப் போரை வழி நடத்தி பிரிட்டனை வெற்றி பெறச் செய்த வின்ஸ்டன் சர்ச்சிலிடம், ‘வரப்போகும் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்’ என்றார். விழுந்து விழுந்து சிரித்தார் சர்ச்சில். பிரிட்டனுக்கு வெற்றி ஈட்டித் தந்த என்னை மக்கள் ஒரு போதும் புறக்கணிக்க மாட்டார்கள் என்று உறுதியாகச் சொன்னார். ஆனால் தேர்தலில் ஜீன் டிக்ஸன் கூறியபடி அவர் தோற்றார். 1956இல் அவர் “வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியாக பழுப்பு நிற முடியும் நீல நிறக் கண்களும் கொண்ட ஒரு இளைஞர் குடியேறப் போகிறார். ஆனால் அவர் தன் பதவிக் காலத்திலேயே சுட்டுக் கொல்லப்படுவார் என்றார். அதன்படியே கென்னடி ஜனாதிபதி ஆனார். ஆனால் 1963ஆம் ஆண்டு டல்லாஸில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது போல ஏராளமான சம்பவங்கள் உள்ளன.
இனி அடுத்து அறிவியல் ரீதியில் ஜோதிடம் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளைப் பற்றி ஒரு சிறிது காண்போம்.

எங்கோ இருக்கின்ற கிரகங்களுக்கும் பூமிக்கும் என்ன சம்பந்தம், அதிலும் அவற்றிற்கும் மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? பகுத்தறிவுடன் ஆராய வேண்டாமா? சொல்பவர் சொன்னால் கேட்பவர்க்கு புத்தி எங்கே போயிற்று? விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையாவது பார்க்க வேண்டாமா?
இப்படி நினைக்கும் ஏராளமான பேர்களில் பிரான்ஸை சேர்ந்த மைக்கேல் காக்லின்(Michel Gauquelin) சற்று வித்தியாசமானவர்.
1928ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதி பாரிஸில் பிறந்தார் காக்லின்.
16 வயதில், அருகிலிருக்கும் புத்தகக் கடைக்குச் சென்று அங்கேயே உட்கார்ந்து ஜோதிட புத்தகங்களைப் படித்துக் கரைத்துக் குடித்தார்.
பிரான்ஸில் உள்ள சார்போர்ன் பல்கலைக் கழகத்தில் உளவியல் படிக்க ஆரம்பித்த அவர், அதில் பி.ஹெச்.டி பட்டமும் பெற்றார்.
ஜோதிடம் உண்மையா இல்லையா என்ற கேள்வி அவர் மனதில் இடைவிடாது எழுந்த வண்ணம் இருந்தது.
இதைப் பற்றி முற்றிலுமாக ஆராய்ந்து விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்ட அவர் பிரெஞ்சு பத்திரிகை ஒன்றில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்தார்.
to be continued…………………………………………………………………

tags- ஜோதிடம்-1, உண்மையா- PART 1,