காந்திஜிக்கு பிடித்த உபநிஷத் மந்திரம்!

item-gandhi-stamp-001

Written by London Swaminathan
Post No. 1017; Dated 3rd May 2014.

உபநிஷத அற்புதங்கள் –பகுதி 5 எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்
முன்னரே எழுதியது போல இந்தப் பகுதிகள் உபநிஷத தத்துவங்களை விளக்குவது அல்ல. உபநிஷதம் பற்றிய மேம்போக்கான சுவையான செய்திகளைக் கூறுவதே இப்பகுதியின் குறிக்கோள். சென்ற பகுதியில் வெள்ளி- கிரகம் மழை தொடர்பான விஷயங்கள் உபநிஷதங்களிலும் தமிழில் புறநானூற்றிலும் இருப்பதைக் கண்டோம். இதோ மேலும் சில:–

46. மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த உபநிஷத் ஈச உபநிஷத் ஆகும். திடீரென்று ஒரு தீவிபத்து ஏற்பட்டு எல்லா உபநிஷத்துகளும் இந்து மத நூல்களும் அழிந்துவிட்டாலும் ஈச உபநிஷத்தின் முதல் மந்திரம் மட்டும் இந்துக்களின் நினைவில் இருந்தால், அதுவே போதும். இந்துமதம் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்றார் காந்திஜி!!

அந்த மந்திரத்தில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது?
இதோ முதல் மந்திரம்:

“ஈசாவாஸ்யம் இதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
த்யேன த்யக்தேன புஞ்சீதா மா க்ருத: கஸ்யஸ்வித்தனம்”

பொருள்: இந்த பிரபஞ்சத்தில் உள்ள அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் அனைத்தும் இறைவனுக்கே சொந்தம். அவனே அவைகளை நிர்வகிக்கிறான். ஒவ்வொருவரும் அவருக்கு உரித்தானதை மட்டும் எடுத்துக்கொள வேண்டும். மற்றவர்களுக்குச் சொந்தமானது எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
uk gandhi

47. மகாத்மா கந்தியிடம் ஒரு மேல் நாட்டு பத்திரிக்கை நிருபர் வந்தார். உங்கள் வாழ்க்கையின் (வெற்றியின்) ரகசியம் என்ன? மூன்றே சொற்களில் கூறுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார். காந்திஜி உடனே தயங்காமல் RENOUNCE AND ENJOY என்று சொல்லிவிட்டார். இசா உபநிஷத்தின் முதல் மந்திரத்தில் உள்ள “ தேன த்யக்தேன புஞ்சீதா” என்ற மூன்று சொற்களின் சாரம் இது.

தேன = அவரால் (கடவுளால்)
த்யக்தேன = உனக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை
புஞ்சீதா = ஏற்றுக் கொள்

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் உன் தேவைக்கு மேல் எதற்கும் ஆசைப் படாதே. இப்படி எல்லோரும் கருதினால் உலகில் ‘இல்லை’ என்ற தொல்லை ‘இல்லை ஆகிவிடும்’!
(ஆதாரம்: உபநிஷத், ஏகநாத் ஈஸ்வரன் எழுதிய ஆங்கில நூல்)

gandhi-english

48.கண்ணாடி (தர்பண), வைர ஊசி (வஜ்ர சூசிகா), மணி பார்க்கும் எந்திரம் (கடீயந்த்ர = கடிகாரம்) ஆகியனவும் உபநிஷத்துகளில் குறிப்பிடப் படுகின்றன.

49. கொடிகள், வாகனங்கள் தோன்றியது இந்தியாவில்தான் என்று பல கட்டுரைகள் எழுதினேன். ராமாயண, மஹாபாரதங்களில் கொடிகள் பற்றி நிறைய குறிப்புகள் இருந்தாலும் அந்தக் காவியங்கள் எழுத்தில் வந்தது கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளில்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுவர். ஆனால் உபநிஷதங்களிலும் விருஷப த்வஜ ( விடைக் கொடி- பிரஸ்னோபநிஷத்), மூஷிக த்வஜ (எலிக் கொடி) ஆகியன வருகின்றன.

50. வீணை என்னும் வாத்தியம் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் வருகிறது (2-4-9; 5-4-10)

51.படகுகள்/கப்பல்கள் பற்றி பிருஹதாரண்யக, முண்டக, மைத்ரீ உபநிஷத்துகளில் படிக்கிறோம் 18 படகுகள் கொண்ட ஒரு அணியை முண்டகோபநிஷத்தில் காணலாம் ( முண். 1-2-7)

52. ஜோதிடம் பற்றிய குறிப்புகள் தைத்ரீய சிஷாவல்லியில் வருகிறது (3).

53.தேவாலயம், சிவாலயம் போன்ற கோவில் குறிப்புகள் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் வருகின்றன (5-7; 3-3-4). கி.மு 800 வாக்கிலேயே கோவில்கள் இருந்தன என்பதை இது உறுதி செய்கிறது,

54.பஞ்சம் ஏற்பட்டது பற்றி சாந்தோக்ய உபநிஷத் ( 1-10-1) கூறுகிறது. சம்ஸ்கிருத ,தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் 12 ஆண்டுக் காலம் நீண்ட வறட்சி பற்றி வருகிறது. அந்தக் கால உண்மை நிலையை எழுதியதால் இந்த இலக்கியங்களை நாம் நம்ப முடிகிறது. திருவிளையாடல் புராணமும் கூட நீண்ட வறட்சியால் புலவர்கள், பிராமணர்கள் ஆகியோர் வேற்று தேசங்களுக்குச் சென்றதாகத் தெரிவிக்கிறது.

sahanavatu

55. உபநிஷத்துகளில் மிகவும் பழமையானதும் பெரியதும் பிருஹத் ஆரண்யக ( பெரிய காட்டு) உபநிஷத் என்று முன்னரே கண்டோம். இதில் உத்தாலகர் என்பவர் தனது மகன் ஸ்வேதகேதுவுக்கு ஒன்பது உபமானக் கதைகள் மூலம் அத்வைதக் கொள்கையைப் போதிக்கிறார். இந்த குட்டிக் கதை சொல்லும் உத்தியை பிற்காலத்தில் புத்தர், ஏசு போன்றோரும் பயன்படுத்தினர். ஏசுநாதர் இதைக் கற்க இந்தியா வந்ததாகவும் ஒரு சாரார் கூறுவர்.

56. உபநிஷத்துகளில் பிராணிகளும் கூட மனிதனுக்கு உபதேசிப்பதைக் காண்கிறோம்: இடி/மின்னல் த.. த… த…. என்று உபதேசித்ததை முன்னர் தனிக்கதையில் கண்டோம். அன்னப் பட்சிகள் பேசிக்கொண்டதை ஜனஸ்ருதி அறிந்துகொண்டார். சத்யகாமனுக்கு அவன் மேய்த்துவந்த மாட்டுக் கூட்டத் தலைமைக் காளையே உபதேசம் செய்தது. தீ, அன்னம், நீர்மூழ்கிப் (மீன்கொத்தி) பறவை ஆகியவற்றிடமிருந்தும் அவன் கற்றுக் கொண்டான். அவனுடைய சீடன் உபகோசல என்பவன், யாகத் தீயில் இருந்து பாடம் கற்றான். இதை வைத்துதான் சம்ஸ்கிருதத்தில் பஞ்ச தந்திரக் கதைகள், ஹிதோபதேசக் கதைகள் உருவாயின என்றும் கருதலாம்.

57.பிருஹத்ரதன் (பெருந்தேரன்), அஜாதசத்ரு, ஜனகன் போன்ற மன்னர்களின் பெயர்கள் உபநிஷத்துகளில் காணப்படுகிறது. இவர்களுடைய காலத்தைக் கண்டுபிடித்து இந்திய வரலாற்றை திருத்தி எழுதுவது நமது கடமை.

58. சாப்பாட்டைக் குறைகூறக்கூடாது என்று தைத்ரீய உபநிஷத் கூறுகிறது (தைத்ரீய பிருகுவல்லி-9)

உபநிஷதத் தொடர் முற்றும்.