
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7759
Date uploaded in London – 29 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
அம்பல வாணக் கவிராயர் 100 பாடல் பாடி அறப்பளிச்வர சதகத்தை முடிக்கும் அழகே அழகு. அவர் சிவ பெருமானை வருணிக்கும் அழகு மனதில் பல சித்திரங்களைக் கொண்டு வருகிறது. அவர் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை; தேவார மூவரும் திருவாசக முதல்வனும் சொன்னதைத் தான் சொல்கிறார். இருந்தபோதிலும் படிப்பதற்கு எளிதாக , எதுகை மோனையுடன் உளது.

அவர் சிவ பெருமானுக்குச் சூட்டும் அடை மொழிகள்:
பிறைசூடி – தலையில் பிறைச் சந்திரனை அணிந்தவனே ,
உமை நேசன் -உமா தேவிக்குப் பிரியமானவனே ,
விடை ஊர்தி – ரிஷப வாகனத்தில் பவனி வருவோனே,
நடமிடும் பெரியன் – தாண்டவமாடும் நடராஜா ,
உயர் வதுவை வடிவன் – கல்யாண கோலத்தில் காட்சிதருவோனே ,
பிட்சாடனன் – பிச்சை எடுக்கும் கோலத்தில் வருவோனே,
காம தகனனே – காமனைக் கண்களால் எரித்தவனே,
மறலியை வென்ற பெம்மான் – எமனை வென்றவனே,
புரந்தகித்தோன் – திரிபுரம் எரித்த சிவனே,
மறமலி சலந்தரனை மாய்த்தவன் – வீரமிக்க சலந்தாசுரனைக் கொன்றவனே,
பிரமன் முடி வவ்வினோன் – பிரம்மாவின் தலையைக் கிள்ளியவனே
வீரேசுரன் – வீரேஸ்வரா !
மருவு நரசிங்கத்தை வென்ற அரன் – நரசிங்க அவதாரம் கட்டுக் கடங்காத கோபத்துடன் நின்றபோது சரபமாக வந்து கோபத்தை அடக்கிய அரனே,
உமை பாகன் – அர்த்தநாரியாக உமையுடன் நிற்பவனே ,
வனசரன் – வேடனே,
கங்காளன் – எலும்பு மாலை அணிந்தவனே,
விறன்மேவு சண்டேச ரக்ஷகன் – வெற்றிமிக்க சண்டேசனைக் காப்பாற்றியவனே,
கடுமாந்தி – விஷம் குடித்தவனே,
மிக்க சக்கரம் உதவினோன் – விஷ்ணுவுக்குச் சக்கராயுதம் கொடுத்தவனே,
விநாயகனுக்கு உதவினோன்- விநாயகப் பெருமானுக்கும் அருளினோன்,
குகன் உமையுடன் கூடி – சோமா ஸ்கந்தமூர்த்தியாக உள்ளவன்,
மிளிர் ஏகபாதன் – ஒளிர்கின்ற ஒற்றைக் காலன் ,
சுகன்- சுகமாக இருப்பவன் ,
அறிவு அரிய தக்ஷிணாமூர்த்தியோடு – அறிதற்கு அரிதாகவுள்ள தக்ஷிணாமூ ர்த்தி நீ !
லிங்கமாம் ஐயனே – லிங்கா ரூபமாக விளங்கும் ஐயா !
என்று சிவ பெருமானைத் துதிக்கிறார்.



பிறகு இறுதிப் பாட்டில் ‘குட் பை’ சொல்லும் பொது ஏனையோர் கொன்றை மலர் போன்ற உயர்தர மலர்களைக் கொண்டு பூஜிக்கையில் நான் எருக்கம் பூ , அருகம் புல் ஆகியவற்றால் பூஜிக்கிறேன் அதையும் ஏற்றுக் கொள் என்று வேண்டுகிறார். “பத்ரம் புஷ்ப ம் , பலம், தோயம் (பழம் , தண்ணீர்) எது கொடுத்தாலும் நான் அதை ஏற்றுக் கொள்வேன்” என்று பகவத் கீதையில் (9-26) கிருஷ்ணன் சொன்னதையும், புறனானூற் றில் “புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா (பாடல் 106)” என்று கீதையைக் கபிலர் திருப்பிச் சொன்னதையும் அம்பலவாணர் எதிரொலிக்கிறார் .



Tags – அம்பலவாண கவிராயர் , சிவன், உமைநேசன்
XXXX SUBHAM XXXXX