
Written by London Swaminathan
Date: 4 November 2016
Time uploaded in London: 13-24
Post No.3319
Pictures are taken from various sources; they are only representational.
contact; swami_48@yahoo.com

உலகத்தில் இந்தியாவை யாரும் அழிக்க முடியாது; ஏனெனில் அதன் கொள்கை “வாய்மையே வெல்லும்” (சத்யமேவ ஜயதே) என்னும் வேத வாக்கியம் ஆகும். ஒவ்வொரு நாடும் உலகில் ஒரு சின்னத்தையும் வாசகத்தையும் தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியா உபநிஷத வாக்கியமான “சத்யமேவ ஜயதே” என்ற அருமையான வாக்கியத்தைத் தெரிவு செய்துள்ளது. சத்தியம் என்பது எல்லா மதங்களுக்கும் அப்பாற்பட்டது. வாழ்க்கையில் எல்லோரும் உண்மையைக் கடைப்பிடிக்காவிடில் உலகமே தலை கீழாகிவிடும்; அதாவது யுக முடிவு நெருங்கிவிட்டது என்று பொருள்.
உலகில் பாரத நாட்டில் இந்த உண்மையை வலியுறுத்தும் அளவுக்கு வேறு யாரும் வலியுறுத்தவும் இல்லை. பின்பற்றவும் இல்லை.
குருவினுடைய வீட்டில் ஐந்து வயது பாலகனைக் கொண்டுபோய் விட்டவுடன் அவர் சொல்லித்தரும் முதல் வாசகம் “சத்யம் வத” (உண்மை பேசு); இரண்டாவது வாசகம் “தர்மம் சர” (அறம் செய்ய விரும்பு). உலகில் எல்லா மதங்களுக்கும் பொருந்தும் அற்புத வேத வாக்கியம் இவை. முதல் மூன்று வருணத்தாரும் இதை குருவினிடத்தில் கற்றனர். நான்காவது வருணத்தினர் தாய் தந்தையிடம் கற்றனர்.
மஹாபாரதத்திலும் பாகவதத்திலும் இதே கருத்தை வலியுறுத்தும் சில பாடல்களைக் காண்போம்:–
பாகவதத்தில்,
சத்யவ்ரதம் சத்யபரம் த்ரிசத்யம் சத்யஸ்ய யோனிம் நிஹிதம் ச சத்யே
சத்யஸ்ய சத்யம்ருத சத்ய நேத்ரம் சத்யாத்மகம் த்வாம் சரணம் ப்ரபன்னா:
–விஷ்ணு பாகவதம் 10-2-26
கிருஷ்ணனைப் பார்த்து தேவர்கள் சொன்ன பாடல் இது. இதன் பொருள் என்ன?
உண்மையே உனது உயிர்மூச்சு, உண்மைப் பொருளே, மும்முறை சத்யம்! நீயே உண்மையின் ஊற்று; உண்மையை உண்மையாக்குபவன் நீ; உண்மை எனும் கண்ணே, உண்மை வடிவானவனே, உன்னைச் சரண் அடைகிறோம்.
சுருக்கமாகச் சொன்னால் உண்மையே கடவுள்; கடவுளே உண்மை.
மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் 13 நற்குணங்களை பீஷ்மர் போதிக்கிறார். அதில் ஒன்று சத்யம்.
சத்யம் ச சமதா சைவ தமஸ்சைவ ந சம்சய:
அமாத்சர்யம் க்ஷமா சைவ ஹ்ரீஸ்திக்ஷா அனசூயதா
த்யாகோ த்யானமதார்யத்வம் த்ருதிஸ்ச சததம் தயா
அஹிம்சா சைவ ராஜேந்த்ர சத்யாகாரார் த்ரயோதச:
உண்மை, சமத் தன்மை, புலனடக்கம், தற்பெருமை பாராட்டாமை, மன்னிக்கும் குணம், அடக்கம், பொறுமை, பொறாமையின்மை(அழுக் காறாமை) அமைதியாயிருத்தல், எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது, இரக்கம், பிறருக்குத் தீங்கு செய்யாமை (அஹிம்சை), கொடை —
ஆகிய 13 குணங்களும் உண்மையின் வேறு வடிவங்களாகும்.

இன்னோரிடத்தில்
சத்யம் பிரம்ம சநாதனம் (உண்மைதான் கடவுள்)
சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம் (எல்லாம் உண்மையில் நிலைபெற்றிருக்கிறது)
என்றும் பீஷ்மர் புகல்வார்.
இறந்து போன அபிமன்யுவின் குழந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க கிருஷ்ணன் சொல்லும் வாசகங்கள் உண்மையின் மகத்துவத்தை விளக்கும்:-
ஓ உத்தரா! நான் பொய் பேசுவதில்லை ஆகையால் நான் சொல்வது நிச்சயம் நிகழும்; இதோ இந்த தருணத்தில் இக்குழந்தையை உயிர்த்தெழ வைப்பேன்.
ஒருக்காலத்திலும் நான் பொய் பேசாதது உண்மையானால், விளையாட்டிற்கும் கூட பொய் சொல்லாதது உண்மை என்றால் இந்தக் குழந்தை உயிர் பிழைக்கட்டும்.
எந்தக் காலத்திலும் நான் அர்ஜுனனுடம் சண்டை இடாதது உண்மையானால். அந்த வாய்மையே இக்குழந்தையைக் காப்பாற்றட்டும்.
என்னிடத்தில் உண்மையும் அறமும் எப்போதும் இருக்குமானால் அபிமன்யுவின் இந்த இறந்துபோன குழந்தை மீண்டும் உயிர்பெறட்டும்
(மஹாபரதம் அஸ்வமேத பர்வம்)

The above sloka is from Manu Smrti
இறந்து போன குழந்தையையும் உயிர்த்தெழச் செய்யும் சக்தி வாய்மைக்கு உண்டு!!
இதே கருத்தை ராமாயணத்திலும் காணலாம். ராமன் 14 ஆண்டுக் காலத்துக்கு கானகம் சென்றதன் காரணம் தந்தையின் வாக்குறுதி சத்தியமாகட்டும் என்பதற்ககத்தான். அவன் கானகம் செல்ல மறுத்திருந்தால் தசரதனின் இரண்டு வரங்களும் பொய்யாகப் போகும்.
தர்மன் 12+1 ஆண்டு கானகத்தில் விதிப்படி உலவியதும் சத்தியத்தைக் காப்பதற்கே. துரியோயதணனைப் போல அறமற்ற வழிகளைப் பின் பற்றியிருந்தால் மஹாபரதமே இருந்திருக்காது.
இந்துக்களின் இரு பெரும் இதிஹாசங்களும் சத்தியத்தை நிலைநாட்ட வந்தவை!
இதிஹாசத்தில் பல இடங்களில் “என் உதடுகள் எந்தப் பொய்யையும் சொன்னதில்லை” என்ற வாசகம் அடிக்கடி வருகிறது.
சமுதயத்திலோ, குடும்பத்திலோ ஒருவர் மற்றவருக்கு உண்மையாக நடப்பதால்தான் அமைதி (சாந்தி) நிலவுகிறது. என்று கணவன் மனைவி இடையே சத்தியம் நீங்குகிறதோ, என்று பெற்றோர்- புதல்வர் இடையே சத்தியம் நீங்குகிறதோ அன்று அமைதி மறைகிறது.
சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம்!

–Subahm—