Compiled by S NAGARAJAN
Post No.2247
Date: 16 October 2015
Time uploaded in London: 7-48 AM
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
அறிவியல் துளிகள்
பாக்யா 9-10-2015 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 242ஆம் அத்தியாயமாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரை
உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 2
First Part of this article was published yesterday in this blog.
ச.நாகராஜன்
“ஓ, வருணரே! எங்களைப் பேரிடரிலிருந்து காப்பீராக!
– அதர்வண வேத பிரார்த்தனை
நெப்போலியனின் ரஷியப் படையெடுப்பு
1812ஆம் ஆண்டு. நெப்போலியனின் படை ஆறு லட்சம் போர் வீரர்களைக் கொண்ட ஐரோப்பாவின் மிகப் பெரும் படையாக உருவாகி இருந்தது. எதற்கும் அஞ்சாத போர் வீரர்கள்! ரஷியாவிற்குள் அஞ்சாமல் சென்றான் நெப்போலியன். குளிர்காலம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. ஆனால் நெப்போலியனுக்குக் அது ஒரு கவலைப் படக் கூடிய விஷயமா, என்ன! அவனது தளரா நம்பிக்கைக்கு முன்னர் எதுவும் துச்சம் தான்! மாஸ்கோவைப் பிடிக்கும் ஆவலில் படை முன்னேறியது. நகர் சூறையாடப்பட்டது. போர்வீரர்கள் தம் மனைவிமாருக்குக் கொடுப்பதற்காக ஏராளமான நகைகளைக் கொள்ளை அடித்திருந்தனர். ஆனால் நெப்போலியன் அறியாத ஒரு சின்ன உண்மை, ரஷியாவின் குளிர் பயங்கரமான ஒன்று என்பது தான்! ரஷியாவிலிருந்து வெற்றிக் களிப்புடன் படை வெளியேறிய போது குளிர் மைனஸ் நாற்பது டிகிரி செல்ஸியஸ் என்ற உறைகுளிர் நிலையை அடைந்து விட்டது.மைனஸ் நாற்பது என்பது ஒரு அபூர்வமான உஷ்ணநிலை. மைனஸ் நாற்பது செல்ஸியஸும் மைனஸ் நாற்பது ஃபாரன்ஹீட்டும் ஒரே அளவு என்ற விசித்திர நிலை மைனஸ் நாற்பது டிகிரியில் ஏற்படுகிறது. வீரர்கள் பொத் பொத்தென்று விழுந்தனர்; இறந்தனர். ஒரு நாளில் மட்டும் 50000 வீரர்கள் இறந்தனர். ரஷியாவை நோக்கிச் சென்ற ஆறு லட்சம் படைவீரரில் மீண்டு வந்தவர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தான்! மகத்தான இழப்பு!! வந்தவர்களும் நொண்டி நொண்டி வந்தனர். மாபெரும் தளகர்த்தனான நெப்போலியனின் வீழ்ச்சி ரஷியப் படையெடுப்பில் ஆரம்பித்தது. ரஷிய நாடானது அப்பொழுதிலிருந்து ஐரோப்பாவின் சக்தி மிகுந்த நாடாக வளர ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் காரணம் குளிர் தான்!
கிரேக்கர் – பெர்ஸியர் போர்
பெர்ஸியா வலிமை வாய்ந்த நாடாக இருந்த சமயம். கிரீஸின் மீது அது தன் பார்வையைப் பதித்தது. ஆனால் கிரேக்க படை தளகர்த்தனான தெமிஸ்டோக்ளஸ் ஒரு அபூர்வமான கால நிலை வல்லுநன். அவனுக்குக் கடல் காற்றின் வலிமை, அது எந்த திசையில் எப்படி அடிக்கும் என்பதெல்லாம் அத்துபடி! கி.மு 480இல் போர் ஆரம்பித்தது. சலாமிஸ் என்ற இடத்தில் நடந்த கடும் போரில் காற்றைப் பற்றிய தன் அறிவால் அவன் வென்றான். கிரேக்க கலாசாரம் பிழைத்தது!
ஜப்பானை நோக்கிய குப்ளாய்கான்
13ஆம் நூற்றாண்டு. மங்கோலிய அரசனான குப்ளாய்கானின் பார்வை ஜப்பானின் மீது திரும்பியது. ஜப்பானின் மீது படையெடுத்துச் சென்ற அவன் தோல்வியுற்றான். காரணம் ஜப்பானில் அப்போது வீசிய புயல் காற்றோடு கூடிய பருவ மழையால்! இன்னொரு முறை படையெடுத்தான். அப்போதும் தோல்வி. அப்போதும் காரணம் புயல் காற்றுடன் வந்த பருவ மழை தான்! ஜப்பானிய ஷிண்டோ குருமார்களுக்கோ ஒரே சந்தோஷம். அவர்களின் தீவிரமான பிரார்த்தனைக்கு வருணன் செவி சாய்த்து வெற்றி அருளி விட்டான் என்று. அந்தப் புயல் மழையை அவர்கள் காமிகேஸ் என்று அழைத்துக் கொண்டாடினர். காமிகேஸ் என்றால் தெய்வீகக் காற்று என்று பொருள்!
அடிமைகளின் புரட்சி தோல்வியில் முடிந்தது
1800ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி. ரிச்மாண்ட் என்ற இடத்தில் இருந்த ஆயிரக்கணக்கான அடிமைகள் தங்கள் எஜமானர்களை எதிர்த்து தீவிரமான புரட்சி ஒன்று நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அது மட்டும் நடந்திருந்தால் ஏராளமானோர் பலியாகி, வரலாறே மாறி இருக்கும். ஆனால் அடிமைகளின் துரதிர்ஷ்டம்– அன்று ஒரு பெரும் மழையுடன் கூடிய புயல் வந்தது. புரட்சி தோல்வியுற்றது!
ஹிட்லரின் ரஷியயெடுப்பு
அசராத அசுரனான ஹிட்லரின் மின்னல் வேகப் படையெடுப்புக்கு சடசடவென நாடுகள் சுருண்டு வீழ்ந்தன. ராட்சஸனின் கண்கள் ரஷியா மீது பதிந்தன. 1941ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரஷிய படையெடுப்புக்கு நாள் குறித்தான் அவன். அந்தப் படையெடுப்பின் பெயர் ஆபரேஷன் டைபூன். ரஷியாவை அவன் படைகள் தாக்கின. படையெடுப்பில் வெற்றியோ நிச்சயம். ஆகவே ஜெர்மானிய வீரர்கள் ரஷிய ரெட் ஸ்குயரில் வெற்றி அணிவகுப்பின் போது அணிய வேண்டிய வெற்றி யூனிஃபார்மையும் எடுத்துச் சென்றனர். அவ்வளவு நம்பிக்கை. ஆனால் அது ரஷியாவின் கடுங் குளிர் காலம். வெற்றி சீருடையை மறக்காமல் எடுத்துச் சென்ற ஜெர்மனி வீரர்கள் மறந்தது குளிர்காலத்தில் போட வேண்டிய ஆடைகளைத் தான்! விளைவு – மாஸ்கோவின் வெளிப்புறத்திலும் ஸ்டாலின்கிராடிலும் வீரர்கள் சுருண்டு செத்தனர். படையெடுப்பு பெரும் தோல்வியைத் தழுவியது. ஸ்டாலினும் ரஷிய மக்களும் மகிழ்ந்தனர். ரஷியாவின் குளிர் வரலாற்றைப் பல முறை மாற்றிய தெய்வீகக் குளிர்!
மாயன் நாகரிக அழிவின் மர்மம்
மாயன் நாகரீகம் எப்படித் திடீரென மறைந்தது என்பது பற்றி வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒரே திகைப்பு. ஆனால் அதை ஆராய்ந்த கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லாமண்ட் டோஹெர்டி ஆப்ஸர்வேடரி அண்ட் தி நாஸா காடண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் ஸ்டடீஸில், உலக காலநிலை மாதிரிகளை அமைத்து ஆராயும் பேராசிரியர் பெஞ்சமின் குக் என்பவர் மாயன் நாகரிகம் அழிவதற்குக் காரணம் அவர்களே எனத் திட்ட வட்டமாகத் தெரிவிக்கிறார்.
திடீரென ஏற்பட்ட பஞ்சத்தால் லட்சக்கணக்கில் மக்கள் அழிந்து பட்டனர். ஆனால் இந்த திடீர் பஞ்சம் இயற்கையினால் ஏற்பட்ட சாபம் அல்ல; அவர்கள் காடுகளை அபரிமிதமாக அழித்ததினாலேயே பஞ்சம் ஏற்பட்டது என்கிறார்.
ஆக காலநிலை மாறுதல்களால் உலகின் வரலாறும் வரைபடமும் மாறிக் கொண்டே இருக்கிறது. போர்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வீரமும் புத்திசாலித்தனமும் மட்டுமல்ல. காலநிலையும் கூட என்பதை வரலாறு தெரிவிக்கிறது.
இயற்கையான காலநிலை மாறுபாடுடன் மனிதன் இன்றைய உலகில் எல்லா நாடுகளிலும் காடுகளை வெகு வேகமாக அழித்து வருகிறான்.
மக்களுக்கு காடுகளின் முக்கியத்துவம் தெரியவே இல்லை என்பது விஞ்ஞானிகளின் புலம்பலாக மாறி விட்டது.
தன்னைத் தன்னைத் தானே அழித்துக் கொள்ளலாமா என விஞ்ஞானிகளில் பலர் வெளிப்படையாக மனித குல அழிவு பற்றி வேதனை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.
காலநிலை மாறுதல்கள் பற்றிய செய்திகளை அறிந்தால் இயற்கையை இன்னும் அருமையாகப் பாதுகாக்க மனம் வரும், இல்லையா!
அறிவியல் அறிஞர் வாழ்வில்
பிரபல விஞ்ஞானி. தாமஸ் ஆல்வா எடிஸன் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு.
நான் இரண்டு முறை வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் என்று ஒருமுறை அவர் கூறினார்.
விவரத்தையும் அவரே கூறினார் இப்படி: முதலில் ஒரு ஆபீஸில் நான் டெலிபோன் ஆபரேட்டராக வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த மெஷினிடம் எனக்கு மிகவும் ஈடுபாடு வந்து விடவே அதையே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். அதனால், வந்த செய்திகளை அனுப்புவதற்கு மறந்து விட்டேன். அவ்வளவு தான், என்னை வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.
எடிஸன் சிரித்தவாறே தொடர்ந்தார்:—“இன்னொரு ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்தேன். பழைய கால கட்டிடம் அது. எங்கு பார்த்தாலும் எலிகள். அவற்றின் அட்டகாசம் என்னால் பொறுக்க முடியாத அளவிற்குப் போனது. ஈக்களை அடித்துக் கொல்வது போல எலிகளைக் கொல்ல ஒரு சாதனத்தைக் கண்டு பிடித்தேன்.
அவ்வளவு தான், அறை முழுவதும் கொலையுண்ட எலிகளின் துண்டுகள் சிதறிக் கிடந்தன. அறையைப் பார்த்தவர்கள் உடனே என்னை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.
எப்போதும், எதனாலும் மனம் தளராதவர் எடிஸன்!
***************







You must be logged in to post a comment.