

Written by London swaminathan
Date: 22 March 2017
Time uploaded in London:- 21-18
Post No. 3746
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
எகிப்தில் 11 மன்னர்கள் ராம்செஸ் என்ற பெயருடன் ஆட்சி செய்தனர். இவர்களில் ஒருவர் காலத்தில் உலகின் முதலாவது தொழிலாளிகள் ஸ்டிரைக் நடந்தது. இன்னொருவர் காலத்தில் அ ந்தப்புர அழகிகளின் சதியில் மன்னர் உ யி ர் போனது. இன்னொரு வெட்டிப் பேச்சு வீரன் தன் பெயருடன் 20 பட்டங்க ளை ச் சேர்த்துக்கொண்டான். இன்னொருவன் தசரத மன்ன னு க்குப் போட்டியாக பல மனைவியரைக் கல்யா ணம் செய்து கொண்டு குசேலனுக்குப் போட்டியாக 100 குழந்தைகளுக்கு மேல் பெற்றான். இன்னொருவன் தன்னுடைய உருவச் சிலைகளை நம்மூர் அரசியல் வாதிகளை மிஞ்சும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் பிரம்மாண்ட அளவில் நிறுவினான்.
இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை மிகவும் கீர்த்தி வாய்ந்த, கியாதி பெற்ற, பிரசித்தமான மன்னர் பெயர் விக்ரமாதித்தன். எகிப்தில் கியாதி பெற்ற பெயர் ராம சேஷன். சிலர் ரமேசன் என்றும் கருதுவர். ஆனால் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994), ராமன் பெயர் பல இடங்களில் இருப்பதைக் காட்ட இதை உதாரணமாகக் காட்டியுள்ளார் தனது உபந்யாசங்களில்!
இதோ ராம்செஸ் (Ramesses) மன்னர்கள் பற்றி சுவையான செய்திகள்!!!

முதலாம் ராமசெஸ் (கி.மு. 1295-1294)
19ஆவது வம்சம்; இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக ஆண்டார். போர் வீரனாக இருந்து அரசனாக உயர்ந்த பெருமையுடையவர்.
இரண்டாம் ராமசெஸ் (கி.மு. 1279-1213)
சேதி SETI) என்ற மன்னரின் மகன்; சிறுவயது முதலே அரசியல் பயிற்சி பெற்றவர். கரிகால் சோழன் போல சிறுவயதில் அரசு கட்டில் ஏறியவர். 67 ஆண்டுகளுக்குக் கொடி கட்டிப் பறந்தார். பிரம்மாண்டமான கட்டிடங்களையும் தனது உருவம் கொண்ட சிலைகளையும் நிறுவினார். சிவபெருமான் போல தலை யில் நாகம் சூடியதால் இவரை ரமேசன் என்றும் கருதலாம். ராமசெஸ் என் ற பெயர், இந்துக்களின் தொடர்புக்குப் பின்னர் எகிப்தில் வந்தது. என்னுடைய கட்டுரைகளில் மிட்டன்னி மன்னன் தசரதன் எழுதிய கடிதங்கள், இரண்டு இந்துப் பெண்களை எகிப்திய மன்னனுக்கு கல்யாணம் முடித்தது, இரண்டு அம்மன் சிலைகளை அனுப்பியது பற்றி முன்னரே எழுதியுள்ளேன்.
இவர் பல பெண்களைக் கல்யாணம் கட்டினார். நூறு குழந்தைகளுக்கு மேலாகப் பெற்றெடுத்தார்
தான் வளர்த்த சிங்கக் குட்டீயுடன் போர்க்களம் ஏகினார். இவருடைய சிலைகளிலும், படங்களிலும் சிங்கத்தைக் காணலாம். HITTITES ஹிட்டைட் இனத்தாருடன் போரிட்டுத் தோற்றார். ஆனாலும் அதைப் பெரிய வெற்றி என்று சொல்லி, சில படைத் தலைவர்களுக்குப் பட்டமும் பரிசும் தந்தார்.
இவருடைய ஒரு உடைந்த சிலையைப் பார்த்து, ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி (P B Shelley) , ஒஸிமாண்டியாஸ் (Ozymandias) என்ற கவிதை புனைந்தான்.

மூன்றாம் ராமசெஸ் (கி.மு. 1184-1153)
இருபதாவது வம்ச அரசன். இவனுடைய ஆட்சியில் டேரி எல் மெடினா என்ற இடத்தில் உலகின் முதலாவது தொழிலாளர் ஸ்டிரைக் நடந்தது. பலர் கூட்டாகச் சேர்ந்து மத்திய தரைக் கடல் வழியாக வந்து இவனைத் தாக்கினர். அந்த கடல் மக்களை (SEA PEOPLES) இவன் தோற்கடித்தான். கோவில்களுக்கு வாரி வழங்கினான். ஆனால் இறுதியில் அந்தப்புர அழகிகளின் சதியில் உயிர் இழந்தான்.
நாலாவது ராமசெஸ் (கி.மு.1153-1147)
முந்தைய மன்னரின் காலத்தில் துவங்கிய தொழிலாளர் ஸ்டிரைக்கை தீர்த்துவைத்தார். எகிப்திய கடவுளர் கோவில்களுக்கக நல்ல கற்கள் தேவை என்று எண்ணி கற்சுரங்க ஆய்வுகளை நடத்தினார். பல கோவில்களுக்கு இந்து மன்னர்களைப் போல மான்யம் வழங்கினார். அத்தனையையும் பபைரஸ்(Papyrus) புல் பேப்பரில் எழுதிவைத்தார். அதனால்தான் நாம் இவ்வளவு விவரங்களைப் பெற முடிகிறது. நீண்டகாலம் வாழ ஆசைப்பட்டாலும் ஆறே ஆண்டுகளில் இவர் ஆட்சி முடிந்தது.
ஐந்தாவது ராமசெஸ் (கி.மு. 1147-1143))
சென்ற மன்னர் காலத்தில் கோவில் அர்ச்சகர் இடையே ஊழல் மலிந்தது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இவர் பல சீர்திருத்தங்களைச் செய்தார். இவருடைய குறுகிய ஆட்சியில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை ஆயினும் இருபத்துக்கும் மேலா விருதுகளைத் தன் பெயருடன் சேர்த்து தம்பட்டம் அடித்துக்கொண்டார். இறுதியில் அம்மை நோய் கண்டு இறந்ததாகத் தெரிகிறது.
இதோ அவரது விருதுகள்/ படங்களில் சில:–
வாழும் ஹோரஸ் தெய்வம்; பலமான காளை; வெற்றி மன்னன்; மேல், கீழ் எகிப்துகளைக் கட்டிக்காப்போன்; இரண்டு தேவதைகளின் அபிமானி; வீரசூரன்; மில்லியன் பேரை விரட்டியவன்; தங்க ஹோரஸ்; நாட்டில் வெற்றிடம் இருந்தால் தன் பெயரால் சின்னம் எழுப்பி, வெற்றிடத்தை நிரப்புவோன் — இன்னும் பல.
ஆறாவது ராமசெஸ் (1143- 1136 கி.மு.)
இவனது காலத்தில் கோஷ்டிப் பூசல் அதிகரித்தது.
ஏழாவது, எட்டாவது மன்னர்களின் காலத்தில் குறிப்பிடத் தக்க நடவடிக்கை ஒன்றும் நடைபெறவில்லை.

ஒன்பதாவது ராமசெஸ் (1126-1108 கி.மு.)
இவர் 17 ஆண்டுக்காலம் ஆட்சிபுரிந்ததால் உருப்படியான காரியங்களைச் செய்ய அவகாசம் கிடத்தது. இவரது காலத்திலேயே – அதாவது இற்றைக்கு 3100 ஆண்டுகளுக்கு முன்னரே — கல்லறைகளைக் கொள்ளை அடிப்பது துவங்கிவிட்டது. அதில் விலை உயர்ந்த அணிகலன்கள் இருந்ததே காரணம்.. கல்லறை உடைப்புகள், அது தொடர்பான கோர்ட் கேசுகள் (Court Cases) ஆகியன இவரது காலத்திலேயே துவங்கி விட்டது
இவர் பழைய மன்னர்களின் மம்மி உருவ சடலங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றினார்.
பத்தாவது ராமசெஸ் பத்து ஆண்டுகள் ஆண்டார். பெரிய நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை.
பதினோராவது ராமசெஸ் (கி.மு.1097-1069)
கடைசி ராமசெஸ் மன்னர் இவர்தான். 27 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். கட்டுக்கடங்காத பழங்குடி மக்கள், இவருக்குத் தொல்லை கொடுத்தனர். தீப்ஸ்(THEBES) நகர கோவில் குருக்கள்மார்கள், மிகவும் பணக்காரர்களாகவும், செல்வாக்குமிக்கவர்களாகவும் ஆகி அரசனையே கேள்வி கேட்கத் துவங்கினர். கோவில் அர்ச்சகர்களின் செல்வாக்கு ஓங்கியதால், மோதல் ஏற்பட்டது. ஒரு அர்ச்சகரை இந்த மன்னர் நாடு கடத்தினார். பின்னர் மற்றவர்களுடன் சமாதானமாகப் போனார். கல்லறைக் கொள்ளைகள் நீடித்தன. இவரது கல்லறையையே இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுதான் ராம்செஸ் மன்னர்களின் கதை.
–சுபம்–