Don’t Reblog it for at least a week; don’t use pictures.
Article written by ச.நாகராஜன்
Date: 20th September 2015
Post No: 2174
Time uploaded in London :– 12-41
(Thanks for the pictures)
ச.நாகராஜன்
மஹரிஷி யாக்ஞவல்க்யரிடம் சில கேள்விகள்!
ப்ருஹத் ஆரண்ய உபநிடதத்தில் ஒரு காட்சி.
பொய்யே சொல்லாதவர் தான் ப்ரஹ்ம ரிஷி எனக் கூறப்பட முடியும்! (கடந்த காலத்தில், நிகழ் காலத்தில் ஒரு பொய்யும் சொல்லி இருக்கக் கூடாது! இனி வரும் காலத்திலும் பொய் சொல்லாத வன்மை கொண்டிருக்க வேண்டும்!)
அப்படிப்பட்ட ப்ரஹ்மரிஷிக்கு ஆயிரம் பசுக்கள் (பொற்கிழிகளுடன் தான்!) தர மன்னர் ஜனகர் முன் வந்தார்.
எல்லோரும் இந்த பிரம்மாண்டமான பட்டத்திற்கு நிச்சயம் தகுதியுள்ளவர் தான் இல்லை என்று எண்ணி அமர்ந்திருந்த போது மஹரிஷி யாக்ஞவல்க்யர் ஆயிரம் பசுக்களையும் சிஷ்யர்களின் துணை கொண்டு ஒட்டலானார்.
பார்த்தார் விதாக்தா சகல்யர்!
மஹரிஷி யாக்ஞவல்க்யரிடம் வந்தார். கேட்டார்.
“மஹரிஷி யாக்ஞவல்க்யரே! எத்தனை கடவுள்கள் உண்டு?
கேள்விகள் கணைகளாக வர பதில்களும் திருப்பிப் பறந்தன இப்படி:
“கடவுளைத் துதி செய்யும் துதிகளில் எத்தனை கடவுள்கள் கூறப்படுகின்றனரோ அத்தனை கடவுள்கள் உண்டு. அதாவது முன்னுற்றி மூன்றும் மேலும் மூவாயிரத்தி மூன்றும்..”
“சரி, ஆனால் எத்தனை கடவுள்கள் உண்டு, மஹரிஷி யாக்ஞவல்க்யரே!”
“முப்பத்தி மூன்று”
“சரி, ஆனால் எத்தனை கடவுள்கள் உண்டு, மஹரிஷி யாக்ஞவல்க்யரே!”
“மூன்று”
“சரி! எத்தனை கடவுள்கள் உண்டு, மஹரிஷி யாக்ஞவல்க்யரே!”
“இரண்டு”
“சரி, எத்தனை கடவுள்கள் உண்டு, மஹரிஷி யாக்ஞவல்க்யரே!”
“ஒன்றரை”
“சரி, எத்தனை கடவுள்கள் உண்டு, மஹரிஷி யாக்ஞவல்க்யரே!”
“ஒன்று”
“சரி, அந்த முன்னுற்றி மூன்றும் மேலும் மூவாயிரத்தி மூன்றும் யாவர்?”
“அவைகள் அவர்களின் சக்தியே! முப்பத்தி மூன்று கடவுள்களே உள்ளனர்”
“அந்த முப்பத்தி மூன்று பேர் யார்?”
“எட்டு வசுக்கள், பதினோரு ருத்ரர்கள், பன்னிரெண்டு ஆதித்யர்கள். இவர்களே முப்பத்தியொன்று பேர். இந்திரனையும் ப்ராஜபதியையும் சேர்த்தால் முப்பத்தி மூன்று ஆகிறது”
“வசுக்கள் யார்?”
“தீ, புவி, காற்று, வளி மண்டலம், சூரியன், வான், சந்திரன், நட்சத்திரங்கள் இவையே வசுக்கள். இவர்களின் மீதே இந்த அழகிய உலகம் உறுதியாக இருக்கிறது. அதனால் அவர்களின் பெயர் வசுக்கள்”
“ருத்ரர்கள் யார்?”
ஒருவனிடம் உள்ள பத்து மூச்சுகள், ஆத்மாவையும் சேர்த்ந்தால் பதினொன்று. அவைகள் இந்த உடலிலிருந்து நீங்கும் போது நம்மைப் புலம்ப (அழ) வைக்கின்றன. ஆகவே ருத்ரர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.”
“ஆதித்யர்கள் யார்?”
“ஒரு வருடத்தில் உள்ள பன்னிரெண்டு மாதங்களே தான்! இந்த உலகை “ எடுத்துக் கொண்டு செல்கின்றவர்கள்” அவர்கள். ஆகவே அவர்கள் ஆதித்யர்கள் எனப்படுகின்றனர்.”
“இந்திரன் யார்? ப்ரஜாபதி யார்?”
“இடி முழக்கமே உண்மையில் இந்திரன். யாகமே ப்ரஜாபதி.”
“இடி முழக்கம் என்பதென்ன?”
“இடியே தான் அது.”
“யாகம் என்பதென்ன?”
“யாகத்தில் இடப்படும் மிருகங்கள்”
“ஆறு கடவுள்கள் யார்?”
““தீ, புவி, காற்று, வளி மண்டலம், சூரியன், வான். இவையே ஆறு கடவுள்கள். ஏனெனில் இந்த உலகமே இந்த ஆறு தான்!”
“மூன்று கடவுள்கள் யார்?”
“உண்மையில் அவை மூன்று உலகங்களே, ஏனெனில் அவற்றில் தான் கடவுளர் இருக்கின்றனர்”
“இரண்டு கடவுள்கள் யார்?”
“உணவும், மூச்சும்”
“ஒன்றரை யார்?”
“இதோ இங்கு யார் தூய்மைப் படுத்துகிறாரோ அவர், காற்று”
“இதோ இங்கு யார் தூய்மைப் படுத்துகிறாரோ அவர் ஒன்று தானே ஆக முடியும், ஒன்றரை எப்படி?”
“ஏனெனில் அவரிடம் முழு உலகமும் செழிக்கிறது. ஆகவே அவர் ஒன்றரை ஆகிறார்.”
“ஒரே கடவுள் யார்?”
“மூச்சு. அதை ப்ரஹ்மா என்று சொல்கின்றனர்.”
பசுக்களை ஓட்டிக் கொண்டு மஹரிஷி செல்கிறார்.
ஜனகர் உள்ளிட்ட அனைவரும் அவரை வணங்கி வழிபட்டு வழி
விட்டு நிற்கின்றனர்.
ஆரண்யத்தில் அற்புதக் காட்சி முடிகிறது!
ப்ரஹ்ம ஞானம் மலர்கிறது!!
**********


You must be logged in to post a comment.