
Written by S NAGARAJAN
Date: 24 March 2017
Time uploaded in London:- 5-56 am
Post No.3751
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
புத்தக மதிப்புரை
எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி …
by ச.நாகராஜன்
மதுரை யாதவர் கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள திரு எம்.சுப்பையா தாஸ் அவர்கள் எழுதியுள்ள ‘எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி..’ என்ற நூல் அளக்கமுடியா விஷயங்களை கணிதக் கோல் வைத்து அளந்து காண்பிக்கிறது.
சூத்திரத்திற்கு அப்பால் இருக்கும் விளக்க முடியாத ஆன்மீக விஷயங்களை நம்மை கணித சூத்திரங்கள் மூலம் வழி நடத்திக் கொண்டு சென்று விளக்குகிறது.
கணிதத்திற்கு ஆன்மீகத்திற்கும் காலம் காலமாகத் தொடர்பு உண்டு. காலமும் கணக்கும் நீத்த காரணனனை கணிதம் மூலம் விளக்கியவர் லாகூரில் கணிதப் பேராசிரியராக வேலை பார்த்த சுவாமி ராமதீர்த்தர். அவரது எட்டு தொகுதிகள் கொண்ட இன் தி வுட்ஸ் ஆஃப் காட் ரியலைசேஷன் (In the Woods of God Realisation) நூலில் கணிதம் மூலமாக அவர் விளக்கும் வேதாந்த விஷயங்கள் மிகவும் சுவை பயப்பவை.
அதே போல கணித மேதை ராமானுஜனின் பிரசித்தி பெற்ற வாக்கியமான், “An equation for me has no meaning unless it represents a thought of God” என்பதிலிருந்து கணிதமே கடவுள்; கணிதத்தின் மூலம் கடவுளைக் காணலாம் என்பது நிதரிசனமாகப் புலனாகிறது.
இந்த அடிப்படையில் கணிதப் பேராசிரியர் ஒருவர் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு 147 பக்கம் அடங்கிய நூலில் மூன்று பிரிவுகளில் 18 அத்தியாயங்களில் அற்புதமான விஷயங்களை விளக்குகிறார். ஆறு அத்தியாயங்களில் கணித சூத்திரங்களும் விளக்கங்களும் நர்த்தனம் புரிகின்றன!
மாண்டூக்ய உபநிடதத்தில் மூன்று பரிமாண உலகமும் நான்கு பரிமாண உலகமும் சுட்டிக் காட்டப்படுவதை நூலாசிரியர் நன்கு விளக்குகிறார்.
நமது ரிஷிகள் எதையும் உள்ளுணர்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். தங்கள் தவ வலிமையால் அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் கண்டவர்கள் அவர்கள்.
உடலில் நமது இதயம் இடப்பக்கம் இருப்பதை நாம் உணர்கிறோம். அவ்ர்கள் ஆன்மீக இதயம் வலப்பக்கத்தில் உள்ளது என்று கூறுகின்றனர்.
இதை ஆசிரியர் விளக்கும் போது சமீப காலத்தில் திருவண்ணாமலையில் வாழ்ந்து அரிய உபதேசங்களை அருளிய பகவான் ரமண மஹ்ரிஷியும் இதை அடிக்கடி கூறியுள்ளதையும் இதை அவர் தனது அனுபவத்தின் மூலமாக உணர்ந்து நமக்கு அருளியிருபப்தையும் நாம் அறிந்து பிரமிக்கிறோம்.
நான்காவது பரிமாணம் என்பது ஒரு அதிசயமான விஷயம். இதைப் பற்றி மேலை நாட்டு அறிஞர்களும் ஆராய்ந்து பல நூல்களை இயற்றியுள்ளனர். குறிப்பிட்த்தகுந்த பல புத்தகங்களில் ஜே.டபிள்யூ. டன் (1875-1949) எழுதிய “An Ezperiment with Time” குறிப்பிடத்தகுந்த ஒன்று. ஆங்கிலத்தில் உள்ள இது போன்ற புத்தகங்கள் தமிழில் இல்லை என்ற குறையைப் போக்கும் விதத்தில் நூலாசிரியர் சுப்பையா தாஸ் சில எளிய சித்திரங்கள் மூலம் நான்காம் பரிமாணத்தை விளக்குகிறார்.
நானோ வினாடியில் பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்கள் அந்த குறிப்பிட்ட நானோ வினாடியில் மட்டும் நமது மூன்று பரிமாண உலகில் நடக்கும்.
இந்தச் செயல்கள் நடந்து முடிந்தவுடன் செயல்கள் அனைத்தும் நான்காம் பரிமாண உலகில் ஒரு குறிப்பிட்ட பதிவகத்தில் சேமித்து வைக்கப்படும்.
ஆகாம்யம்,சஞ்சிதம், பிராரப்தம் ஆகிய மூன்று க்ர்ம அல்லது எண்ணத் தொகுப்புகளை ஆசிரியர் அழகுற மூன்று பக்க முக்கோணத்தின் மூலம் விளக்குகிறார்.
பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்தால் மிஞ்சுவது பூரணம் என்பதை கணித மூலம் ஆசிரியர் அழகுற விளக்குகிறார்.
பிரபஞ்ச ஒடுக்கம், பிரபஞ்ச வெடிப்பு போன்ற அறிவியல் விஷய்ங்களை ஆன்மீக ரீதியில் ஆசிரியர் விளக்குகிறார்.
சனி கிரகத்தின் வடதுருவ பகுதியில் அறுகோண வடிவ அடையாளத்தை தங்கள் ஞானக்கண்ணால் கண்டுணர்ந்த முனிவர்கள் அதை சனீஸ்வரன் கோவிலின் மேற்கூரையில் பொறிக்கச் செய்தனர். நாஸா அனுப்பிய காஸினி விண்கலம் இந்த அறுகோண அமைப்பை போட்டோ எடுத்து அனுப்பியிருப்பதால் முனிவர்களின் அபூர்வ ஆற்றல் உறுதி செய்யப்படுகிறது.
இது போல ஓம் என்ற பிரணவத்தின் அற்புத ஆற்றலையும் ஆசிரியர் அழகுற விளக்குகிறார்.
ஸ்ரீ சத்யசாயிபாபாவின் அழகான முத்திரை வாக்கியங்களையும் அவர் தெய்வீக வாழ்வில் ஒரு சிறு பெண்ணுக்கு அவர் அருளால் விளைந்த அற்புத சம்பவத்தையும் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். இது எல்லையற்ற அபூர்வமான ஆற்றலையும் அவதார மஹிமையையும் விளக்க சுவையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
காலம் மற்றும் வெளி, காரண- காரியம் இவற்றிற்கு உட்பட்ட மனிதன் இதை மீறி வெளி வருவதற்கு ஆன்மீக வாழ்வில் அடியெடுத்து வைத்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆசிரியர் கூறும் செய்தி.
இந்த அரிய குறிக்கோளை அடைய இறை தத்துவத்தை உணர வேண்டும்.அதை கணிதம் மூலம் விளங்கிக் கொள்ள்லாம் என்பதை இந்தக் கணிதப் பேராசிரியர் சுவையுடன் கூறுகிறார்,
நூலுக்கு யாதவர் கல்லூரியின் முன்னாள் செயலர் திரு பன்னீர்செல்வம் அழகான் மதிப்புரையைத் தந்துள்ளார்.
நூலின் இறுதியில் மேற்கோள் நூல்கள் பட்டியலும் கலைச்சொற்கள் விளக்கமும் தரப்பட்டுள்ளன.
அழகுற அச்சிடப்பட்டுள்ள இந்த் புத்தகம் கிடைக்கும் இடம்:
THAASU PUBLICATIONS
14, II CROSS STREET,
VISHWANATHAPURAM
MADURAI 625014
TAMILNADU
INDIA
PHONE 0452 2641945
Email subdoss2014@gmail.com
நூலின் விலை ரூ 150/ (147 பக்கங்கள்)
கணிதம் மூலம் கடவுளை விளக்கும் ஆசிரியருக்கு எமது பாராட்டுக்கள்.
***