
Article Written S NAGARAJAN
Date: 24th August 2016
Post No. 3087
Time uploaded in London :– 5-29 AM
(Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
பாக்யா 19-8-16 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
எவரெஸ்ட் வெற்றியும் உயிர் தியாகங்களும்!
ச.நாகராஜன்

“மேலை நாட்டினரின் மலையேறும் நோக்கமும் நமது மலையேறும் நோக்கமும் முற்றிலும் மாறுபட்டது” –ஜம்லிங் டென்சிங் (எவரெஸ்டை வெற்றி கொண்ட டென்சிங்கின் மகன்)
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வெற்றி கண்ட முதல் மனிதர் டென்சிங் நார்கே. (தோற்றம் 29-5-1914 மறைவு 9-5-1986) இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்குள்ள போற்றப்படும் நூறு பேர்களில் அவரையும் சேர்த்துக் கொண்டாடியது டைம் பத்திரிகை.
1953ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் சர் எட்மண்ட் ஹிலாரியுடன் அவர் ஏறினார்.
மேலை நாட்டினருக்கு மலை ஏறுவது என்பது ஒரு விளையாட்டான பொழுது போக்கு. ஆனால் இந்தியா, திபத் மற்றும் நேபாளத்தில் உள்ள ஷெர்பாக்களுக்கோ அது ஒரு வழிபாடு போல. எவரெஸ்ட் அருகில் உள்ள இடத்தை அவர்கள் புனிதத் தாய் என்று போற்றி வழிபட்டு வருகின்றனர்.
எவரெஸ்ட் வெற்றியைப் பற்றி டென்சிங் கூறுகையில், “நான் முயன்றேன். ஏழு முறை முயன்றேன். தாயின் மீது தவழத் துடிக்கும் சேயைப் போல. முடிவாக அவள் வெற்றியை அருளினாள்” என்று கூறினார்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று பலியானோர் எண்ணிலடங்காத பேர்கள்.
1996ஆம் ஆண்டு மே மாதம் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் பனிப்புயலில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். கோரமான விபத்து என்ற பெயரை இது பெற்றது. எவரெஸ்ட் மீது ஏறுவதில் வருடா வருடம் பலர் உயிரிழப்பது வழக்கமாக ஆனது.
1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி பிரிட்டனைச் சேர்ந்த மலையேறும் வீரர்களான ஜார்ஜ் மல்லாரி மற்றும் ஆண்ட்ரூ இர்வின் ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் மிக உயரத்தில் உள்ள முகாமிற்குச் சென்று தங்கினர்.
நான்கு நாட்கள் கழித்த பின்னர் அவர்கள் வடகிழக்கே சிகரத்தின் கீழ் செங்குத்தாக 800 அடிக்குக் கீழாக இருப்பதைக் கண்டதாக சிலர் பின்னர் கூறினர். ஆனால் அப்போது பிரம்மாண்டமான மேகக் கூட்டம் அவர்களை மூடியது.
பின்னர் அவர்கள் இருவரையும் யாரும் காணவே இல்லை.
அவர்கள் என்ன ஆனார்கள்? புரியாத புதிராக இருந்தது.
அறிவியல் ஆய்வாளர்கள் அந்த இருவரும் 29029 அடி உயரத்தில் மலை உச்சியை அடைந்து கீழே இறங்கி வரும் போது ஜூன் 9ஆம் தேதி இறந்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தனர்.
1933ஆம் ஆண்டு இர்வினின் ஐஸ் கோடரி 28907 அடியில் கண்டு பிடிக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு மலாரியின் உடலை எவரெஸ்டின் வடக்குப் பகுதியில் ஒரு மலையேறும் குழு கண்டது. சில நாட்களில் அதே பகுதியில் இன்னொரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அது இர்வினா என்ற சந்தேகமும் எழுந்தது.
ஆனால் அவர்கள் எவரெஸ்ட் உச்சியை அடைந்தனரா என்பதை யாராலும் உறுதி செய்ய முடியவில்லை.
எவரெஸ்டில் டென்சிங்கின் வெற்றியைக் கொண்டாட வெற்றி கண்ட 50ஆண்டு விழாவின் போது டென்சிங்கின் மூன்றாவது மனைவிக்குப் பிறந்த டென்சிங்கின் மகன், ஜம்லிங் டென்சிங் (Jamling Tenzing) எவரெஸ்ட் மீது ஏறினார். அவருக்குத் துணையாக சர் எட்மண்ட் ஹிலாரியின் மகனும் கூடச் சென்றார். தன்னை ஒரு நாளும் மலை ஏறுவதை தன் தந்தை ஊக்குவிக்கவில்லை என்று கூறிய ஜம்லிங், “ஆனால் அவன் ஒரு நாள் நிச்சயம் எவரெஸ்ட் மீது ஏறி விடுவான்” என்று மற்ற அனைவரிடமும் டென்சிங் தன்னைப் பற்றிக் கூறியதாகத் தெரிவித்தார்.

டென்சிங் பற்றிய ‘எவரெஸ்ட்’ என்ற ஆங்கிலத் திரைப்படம் இமேஜ் மேக்ஸிமம் என்பதன் சுருக்கமான ஐமேக்ஸ் உத்தியில் 1998ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதைத் தயாரிக்க ஜம்லிங் எவரெஸ்ட் பெரிதும் உதவினார். அவருக்கு 25000 டாலர்கள் தரப்பட்டது. ‘பணம் பெரிதல்ல, ஷெர்பாக்களைப் பற்றி உலக மக்கள் அறிய அது உதவியதே, அதைத் தான் பெரிதாக நினைக்கிறேன்’, என்று கூறி மகிழ்ந்தார் ஜம்லிங்.
45 நிமிடமே ஓடும் எவரெஸ்ட் படம் ஐமேக்ஸ் உத்தியில் தயாரிக்கப்பட்ட படங்களிலேயே அதிக வசூலை அள்ளிக் குவித்தது.
‘டச்சிங் மை ஃபாதர்ஸ் சோல்’ (Touching my Father’s Soul) என்ற புத்தகத்தை அவர் எழுதி 2001 ஆம் ஆண்டில் வெளியிட்டார். புத்தகம் அமோகமாக விற்பனையைக் கண்டது, 18 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஜம்லிங் இப்போது மலையேறும் வீரர்களுக்கான பயிற்சியைத் தருவதற்கான ஒரு மையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகிறார்.
அத்துடன் உத்வேகம் ஊட்டும் சிறந்த மோடிவேஷனல் பேச்சாளராகவும் திகழ்கிறார்.
தந்தைக்கு ஏற்ற பிள்ளை என்று உலகம் அவரை பாராட்டுகிறது.
புனிதமான அன்னை எனக்கு வெற்றியை அருளினாள் என்று ஜம்லிங்கும் இமய மாதாவைத் தொழுது போற்றி வணங்குகிறார்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,
தென் துருவத்தில், அண்டார்டிகா குளிர் என்பது பயங்கரமான குளிர்! வான்பௌதிக இயலாளரான ரோட்னி மார்க்ஸ் (astro physicist – Rodney Marks) என்பவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். அண்டார்டிகாவில் உள்ள அமெரிக்க ஆய்வு மையமான அமுண்ட்ஸென் ஸ்காட் நிலையத்தில் தென் துருவ ஆய்வுப் பணிக்காகச் சென்றார்.
2000ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதியன்று திடீரென்று அவர் மரணமடைந்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
குளிரோ கடும் குளிர். விமானம் பறப்பது என்பது எளிதான காரியமல்ல.ஆகவே அவரது உடல் வசந்த காலம் வரும் வரை அங்கேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டு பின்னர் நியூஜிலாந்திற்கு பருவநிலை சீரடைந்த பிறகு கொண்டு வரப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் மெதனால் விஷத்தால் மரணமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த நிலையத்தில் இருந்த 49 பேரிடம் நியூஜிலாந்து போலீஸ் விசாரணையை மேற்கொண்டது. அவர் நிச்சயம் தற்கொலையும் செய்து கொள்ளவில்லை, யாரும் அவருக்கு மெதனால் கொடுக்கவும் இல்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தனக்குத் தெரியாமலேயே தற்செயலாக மெதனாலை சாப்பிட்டிருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 2008ஆம் ஆண்டு மீண்டும் ஒரு அறிவியல் ஆய்வை பிரேத பரிசோதனை நிபுணர் ஒருவர் மேற்கொண்டு முந்தைய முடிவை உறுதி செய்தார்.

அறிவியல் அறிஞர் ஒருவரின் முடிவு தென் துருவத்தின் முதல் கொலை கேஸாக அமைந்து பிரபலமானது.
********************
You must be logged in to post a comment.