
WRITTEN BY S NAGARAJAN
Date: 4 SEPTEMBER 2018
Time uploaded in London – 6-17 AM (British Summer Time)
Post No. 5391
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
திருநெல்வேலியிலிருந்து ஆர்.சி.ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் வெளிவரும் ஆரோக்கிய மேம்பாட்டு மாத இதழ் ஹெல்த்கேர். இதில் ஜூலை 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. தொடர்பு மின்னஞ்சல் editor@tamilhealthcare.com
மூளை நன்கு செயல்பட எவ்வளவு நேரம் உடல்பயிற்சி செய்ய வேண்டும் ?
மூலம் : கிறிஸ்டோபர் வாஞ்செக்
தமிழாக்கம் : ச.நாகராஜன்
அனைவருக்குமே உள்ள கவலை வயதாக ஆக, மூளையின் செயல்பாடு குறைந்து கொண்டே வருகிறதே, ஞாபகமறதி அதிகமாகிறதே, உடலின் அவயவங்கள் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறதே என்பன போன்றவை தாம்!
நன்கு உடல்பயிற்சி செய்யுங்கள் என்பது பொதுவான அறிவுரை.
யோகா, தாய்-சி போன்றவற்றையும் பலரும் பரிந்துரை செய்கின்றனர்.
எதைச் செய்வது, எவ்வளவு நேரம் செய்வது என்பதில் ஒரே குழப்பம்.
தினசரி செய்யுங்கள் என்கின்றனர் சிலர். வாரத்திற்கு இவ்வளவு மணி நேரம் என்கின்றனர் சிலர்.
இப்படிச் செய்ய முடியாதவர்கள் கவலைப்படுகின்றனர்.
கவலை போக்கும் விதமாக இப்போது நல்ல செய்தி வந்துள்ளது.

ஆறு மாத காலத்தில் 52 மணி நேரம் உடல் பயிற்சி செய்தால் போதும் என்கிறது நவீன மருத்துவ ஆய்வு ஒன்று! இது மூளையை நன்கு செயல்படுத்த உதவும் என்கிறது ஆய்வு முடிவு!
பொதுவாக உடல்பயிற்சியானது, சிந்தனையாற்றலை நன்கு தூண்டி விடும்; உடலையும் மனதையும் பண்படுத்த உதவும்; மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்; அல்லது மூளை செயலிழப்பைத் தடுக்கும் என்பன போன்றவற்றை ஆய்வு முடிவுகள் அறிவித்துள்ளன!
நியூராலஜி கிளினிகல் ப்ராக்டீஸ் என்ற பத்திரிகையில் 30-5-2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை அகில உலக ஆய்வு ஒன்றை விரிவாக வெளியிட்டிருக்கிறது.
நடைப்பயிற்சி, ஓட்டம், வெயிட் தூக்குதல், யோகா, தாய்-சி எல்லாமே நலம் பயப்பவையே! இதில் எதைச் செய்தாலும் ஆறு மாதத்தில் 52 மணி நேரம் செய்தால் போதும்!
“இந்த 52 மணி நேரத்தையும் கூட உங்களுக்கு உகந்த முறையில் பிரித்துக் கொள்ளலாம். இப்போது ஒரு மணி நேரம்; பின்னால் இன்னொரு மணி நேரம் என்று” என்கிறார் ஆய்வைச் செய்த மியாமி மில்லர் ஸ்கூல் ஆஃப் மெடிசின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜாய்ஸ் கோமஸ் -ஆஸ்மான் (Joyce Gomes-Osman) என்னும் நியூரோஸயிண்டிஸ்ட் பெண்மணி.
இது அனைவருக்கும் பெரிய ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். தினசரி ஒரு மணி நேரம் என்பது போன்ற கடுமையான விதி முறைகள் தேவை இல்லை.
குறைந்த தீவிரம் உடையவை யோகாவும் தாய்-சியும்.
அதிக தீவிரப் பயிற்சி என்பது வலுவை அதிகரிக்கும் கடினமான பயிற்சிகளும் ஏரோபிக் பயிற்சிகளும். இவை இரண்டுமே பலனளிக்கின்றன என்கிறார் கோமஸ்.

உடல் பயிற்சி சம்பந்தமாக முன்னர் செய்யப்பட்ட 100 ஆய்வுகளை இந்தப் புதிய ஆய்வு ஆராய்ந்தது. இதில் பங்கு கொண்டவர்கள் மூளை செயல்பாடு பற்றிய ஆய்வுக்கு உட்பட்டவர்கள். மொத்தம் 11000 பேர்கள் இவற்றில் பங்கு கொண்டனர். அவர்களின் சராசரி வயது 73!
ஆய்வு தந்த முடிவின் பொதுவான அம்சம் எந்த முறையில் உடல் பயிற்சி செய்யப்பட்டாலும் ஆறு மாதங்களில் 52 மணி நேரம் செய்தால் அவை மூளை சிந்தனையாற்றலைக் கூர்மைப் படுத்துகின்றன என்பதே!
இந்த 52 மணி நேரத்திற்குக் குறைவாகச் செய்யப்பட்ட பயிற்சிகள் நல்ல முடிவுகளைத் தரவில்லை என்பதே ஆய்வு தரும் செய்தி!
உடல் பயிற்சி சிகிச்சை முறையைத் தருகின்ற நியூரோ ஸயிண்டிஸ்ட் என்ற முறையில் கோமஸ், “என்னுடைய நோயாளிகளுக்கு ஒரு சரியான டோஸை தர ஆசைப்பட்டேன், இப்போது தான் அது சாத்தியமாகி இருக்கிறது” என்கிறார்.
“இன்னும் அதிக செயல்பாட்டுடன் இருங்கள் என்று பொதுவாக நாங்கள் கூறி விடுகிறோம் எங்களிடம் சிகிச்சை பெற வருபவர்களிடம். ஆனால் அதன் அர்த்தம் என்ன? அவருக்கு தினமும் 30 நிமிடப் பயிற்சி தேவையா? அல்லது ஒரு மணி நேரம் தேவையா? எந்த விதமான உடல் பயிற்சி வேண்டும் என்பதைச் சொல்ல முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது தெளிவாக 52 மணி நேர லட்சியத்தை முன் வைக்க முடிகிறது” என்கிறார் அவர் முத்தாய்ப்பாக!
இதய நோயாளிகளுக்கு அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்த இதுவே வழி!
டாக்டர் டக்ளஸ் ஷார் என்பவர் ஓஹையோ ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் வெக்ஸ்னர் மெடிகல் மையத்தில் உள்ள மூளை செயல்பாடு மற்றும் நினைவுத் திறன் குறைப்பாடு பற்றிய மையத்திற்கு டைரக்டர். அவரும் இந்த ஆய்வு முடிவை ஏற்றுள்ளார். “மூளை செயல்திறனுடன் இயங்க உடல் பயிற்சி இன்றியமையாதது என்பதே முக்கிய செய்தி. நீண்ட கால அடிப்படையில் அதைச் செய்யவேண்டும். அவ்வளவு தான்” என்கிறார் அவர்.
ஷார் மேலும் கூறுகையில், “ உடல் பயிற்சியின் போது மூளையானது நன்கு செயலூக்கம் செய்யப்படுகிறது. நமது தசைகளை எப்படிக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்பதை நாம் கற்க வேண்டும். ஆகவே பயிற்சிகளின் போது அதிக கவனம் தேவை. ‘use it or lose it’ – பயிற்சியைச் செய்யுங்கள்; அல்லது பலனை இழந்து விடுங்கள் என்பதே தாரக மந்திரம் என்கிறார்.
அத்தோடு தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே இருந்து யாருடனும் பழகாமல் இருப்பது பயனளிக்காது என்றும் அவர் கூறுகிறார்,

பிரேஸில், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள், உடல் பயிற்சியானது மூளையின் செயல்பாட்டு வேகம், திட்டமிடுதல், கவனம் கொள்ளுதல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது என்கின்றனர். பொதுவாக வயதாக ஆக, இவைதான் அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் பிரச்சினை என்பதால் இந்த ஆய்வின் முடிவு ஒரு வரபிரசாதமே.
இனி ஆறு மாதத்தில் 52 மணி நேர பயிற்சி என்பதை மேற்கொள்வோம். செயல்பாட்டுடன் கூடிய முளையால் உடல் இயக்கம் கொண்டு நலம் பெறுவோம்.
***
மூலம் : கிறிஸ்டோபர் வாஞ்செக்
தமிழாக்கம் : ச.நாகராஜன்
நன்றி : லைவ் ஸயின்ஸ்