
Egyptian God and the King
Written by London swaminathan
Date: 16 FEBRUARY 2017
Time uploaded in London:- 5-56 am
Post No. 3641
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
எகிப்தில் எப்போது மன்னர்களின் முடியாட்சி துவங்கியது என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. கி.மு. 3150 முதல் வரலாற்றுக் காலம் துவங்கியது.
மன்னரின் மகனே அடுத்த ராஜாவாக நியமிக்கப் பட்டான். மன்னர்களைக் கடவுள் என்று மக்கள் கருதினார்கள். கீழ் எகிப்து, மேல் எகிப்து — என்று இரண்டு பிரிவுகளாக. எகிப்து இருந்தது. எல்லா மன்னர்களும் இரண்டு பிரிவுகளுக்கும் தலைவர் என்று பெருமையாகப் பிரகடனம் செய்தனர். முதல் வம்ச அரசர்கள், தற்போது எகிப்து நாட்டின் தலைநகராகவுள்ள கெய்ரோவுக்கு அருகில் தலைநகர் வைத்து ஆண்டனர். அந்த நகரத்தை கிரேக்கர்கள் மெம்பிஸ் MEMPHIS என்று அழைத்தனர்.
இரண்டு எகிப்துகளுக்கும் தலைவர் என்பதைக் குறிக்க இரட்டை கிரீடம் என்னும் வடிவமுடைய கிரீடத்தை அணிந்தனர்.
அரசனைச் சுற்றி சில கோட்பாடுகள் உருவாகின. அவருக்கு பிறந்தபோது சூட்டிய பெயரைத் தவிர புதிய மன்னரின் பெயர் சூட்டப்பட்டது. முதலில் மூன்று பெயர்கள் இருந்தன. பின்னர் இது வளர்ந்து ஐந்து பெயர்களாகப் பெருகின! பலவகைக் கிரீடங்களுடன், மன்னன் (பாரோ) புதிய ராஜாங்க சின்னங்களை அணியத் துவங்கினான்.

Picture of Horus from Wikipedia
மன்னர்களின் பெயரகளைக் கல்வெட்டுகளில் பொறிக்கும்போது அதன் புனிதம் கருதி அதை ஒரு சிறிய செவ்வக கட்டத்துக்குள் (SEREK) எழுதினர்.
துவக்க காலத்தில் மன்னர்தான் கடவுள், அவர்தான் பிரபஞ்சத்தின் தலைவர் என்றெல்லாம் சொல்லப்பட்டது. மன்னரின் கட்டளையின் பேரில்தான் சூரியன் உதிக்கிறான், நைல் நதி வெள்ளப் பெருக்கெடுக்கிறது என்றும் நம்பினர்.

ஹோரஸ் (HORUS) என்னும் தெய்வம்தான் எகிப்தின் பழம்பெரும் தெய்வம். பருந்து வடிவ முகம் கொண்டது. இந்து மதத்திலுள்ள கருடாழ்வார் போன்றது! “கருட” என்ற பெயரே ஹோரஸ் என்று திருந்தியதோ என்று எண்ண வேண்டி இருக்கிறது!
எகிப்திய மக்களின் வாழ்க்கை முழுதும் மன்னரைச் சுற்றியே இருந்தது. அவர் இறந்தவுடன் அடக்கம் செய்யப்படுவதற்கான பிரமிடு(PYRAMIDS)களைக் கட்டுவதே பெரும் தொழில்! இதற்கு அடுத்தபடியாக விவசாயம், போர்த் தொழில் இருந்தன.
அரசன் என்பவன் ஹோரஸ் என்னும் கடவுளின் மறு அவதாரம் எனக் கருதப்பட்டான். பின்னர் எகிப்துக்கு வந்த புதிய தெய்வமான ஆசிரிஸை, ஹோரசின் தந்தையாகக் கருதினர். பிறகு ஆசிரிஸ்(OSIRIS), மன்னர் இறந்தவுடன், அவரைக் கவனிக்கும் கடவுள் என்று கதைகள் உருவாக்கப்பட்டன!.
மன்னரின் பட்டாபிஷேகத்தின்போது நால் திசைகளிலும் பறவைகள் பறக்கவிடப்பட்டன. இந்து மத அரசர்கள் பட்டாபிஷேகத்தின்போது கைதிகளும் கூண்டுக் கிளி, மைனா முதலிய பறவைகளும் ‘விடுதலை’ செய்யப்பட்டதை இத்துடன் ஒப்பிடலாம்!

Horus from Roman period (looks like Garuda vahana of Vishnu)
மன்னரின் ஐந்து பெயர்களில் ஒன்று ஹோரஸ் என்ற அடைமொழியுடன்- பட்டத்துடன் துவங்கும். இதுதான் மிகவும் புனிதமான பெயர். பிறந்தபோது வைத்த பெயரை யாருக்கும் சொல்லமாட்டர்கள். அது ரஹசியமானது. குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்!
மன்னர் கடவுள் மட்டுமல்ல. சில நேரங்களில் கடவுளரும் மன்னருக்கு அடிபணியவேண்டும் என்று மக்கள் நம்பினர். இந்து மதத்தில் “குரு” என்பவர் கடவுளுக்கும் மேலாக அதிகாரம் உடையவர்; அவர் விருப்பப்படி, கடவுளும் விதியை மாற்ற முடியும் என்று கதைகள் உள்ளது போல! கோவில்களிலும் எகிப்திய மன்னரே தலைமை. மன்னர்கள் இறந்தபோது அவர்களுடன் நூற்றுக் கணக்கான அதிகாரிகளும் ஆயிரக்கணக்கான சேவகர்களும் உயிருடன் புதைக்கப்பட்டனர்.
ஆயினும் எகிப்திய வரலாறு 3000 ஆண்டுக் கால வீச்சுடையது. காலப்போகில் வெளிநாட்டுப் படை எடுப்புகளால், மன்னரின் நிலையும், அவர் பற்றிய நம்பிக்கைகளும் மாறிக்கொண்டே வந்தன.

மேலும் பல அதிசயங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்!
–தொடரும்