
Written by London swaminathan
Date: 25 December 2016
Time uploaded in London:- 8-09 AM
Post No.3482
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
உலகிலேயே மிகப் பழைய நூலான ரிக்வேதம் முதல் முதலில் கடவுளை ஜோதி வடிவில் கும்பிட எல்லோருக்கும் காயத்ரீ மந்திரத்தைச் சொல்லித் தந்தது.
ஓம் பூர் புவஸ்ஸுவஹ, தத்சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹீ
தியோ யோநஹ பிரசோதயாத்
–என்ற இந்த மந்திரத்தை எல்லோரும் அறிந்து பயன் பெறுவதற்காக மஹாகவி பாரதியார்
செங்கதிர்த் தேவன் ஒளியினைத் தேர்ந்து தெளிகின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக
—-என்று அழகிய தமிழில் மொழிபெயர்த்து அருளினார்.
ரிக்வேதத்துக்குப் பின்னர் வந்த பிருஹத் ஆரண்யக (பெருங்காட்டு) உபநிஷத்தில் தமஸோ மா ஜ்யோதிர் கமய (இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாய்) என்ற மந்திரத்திலும் ஒளி இடம் பெற்றது.

அருணகிரிநாதரோ திருப்புகழில் தீப மங்கள ஜோதீ நமோ நம என்று பாடினார். அவருக்குப் பின்னர் வந்த அருட்பிரகாச வள்ளலாரோ அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை என்று பாடினார்.
அருணகிரிக்கும் வள்ளலாருக்கும் முன்னால் வாழ்ந்த திருமூலர் ஐந்து ஜோதிகள் பற்றிப் பாடினார். திருமூலருக்கும் முன்னால் வாழ்ந்த அப்பரோ நான்கு விளக்குகள் பற்றிப் பாடினார்.
இந்த ஐந்து ஜோதி (ஒளி), நான்கு விளக்குகள் பற்றிப் புரிந்துகொள்ள பாரதியாரின் சில வரிகள் உதவும்:-
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார் – என்று பாரதி பாடினார்.
நமக்குத் தெரிந்த ஒளி எல்லாம் விளக்கின் மூலம் வரும் ஒளிதான். ஆனால் ஞானிகளுக்கும் கவிஞர்களுக்கும் மனத்தின் ஒளி (உள்ளத்தில் ஒளி), அறிவு ஒளி (ஞானதீபம்) முதலியனவும் தெரியும்.
எப்படி சூரியன் சந்திரன் அக்னி (நெருப்பு) ஆகிய மூன்றும் ஒளியை உண்டாக்கி இருளகற்றுகின்றனவோ அதே போல ஞான ஒளி அறியாமை என்னும் இருளை அகற்றும். நம்மைப் போன்ற ‘கண்ணிருந்தும் குருடராய்’ வாழ்வோரை வாக்கினிலேயுள்ள ஒளி மூலம் பெரியோர்கள் கரை ஏற்றுவர். பாரதியார் சொன்னதைப் போலவே அவருக்கும் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தேவார மூவரும் திருவாசகப் பெரியாரும், திருமூலரும் பாடி வைத்தனர்.
சோதி= ஜோதி= ஒளி = விளக்கு

அப்பர் காட்டும் 4 விளக்கு
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
— அப்பர் தேவாரம் 4-11-8
பொருள்
1.இல்லத்தினுள் உள்ள விளக்கானது இருளை கெடுப்பது. அதாவது ஒளி தருவது;
- சொல்லினுள் உள்ள விளக்கானது ஜோதி வடிவில் உள்ளது;
3.பலருடைய மனதில் உள்ள விளக்கு அது எல்லோரும் காண்பது.
4.நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு நமச்சிவாய” என்ற மந்திரம்
நமச்சிவாய என்னும் விளக்கு அறியாமை எனும் இருளை அகற்றும்; சிவஜோதியில் கலக்க உதவும்.

திருமூலர் சொல்லும் 5 ஜோதி
அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியுடன் பிதற்றும் பெருமையை
உண்டவெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்டகுறியைக் குலைத்ததுதானே
–திருமூலரின் திருமந்திரம் 1975
பொருள்:-
மானிடர் உடம்பைச் சூழ்ந்துள்ள அண்ட ஒளியானது, உலகில் வானமண்டலத்தில் விளங்கும் ஒளியுடன் — உடலிலுள்ள உட்கருவிகளின் அறிவால் பிதற்றும் வீணான பெருமையை விழுங்கி — உடல் கடந்துள்ள ஆகாய வெளியில் திகழும் ஒளியினுள்ளே மறைந்தது. அதனால் உடலின் அமைப்புகள் காணாமல் போகும்; உடலும் ஒளியாய்த் திகழும்.
ஐந்து வகை ஜோதிகள்:-
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் — என்ற மாணிக்க வாசகரின் (திருவாசக/திருவெம்பாவை) பாடலுக்கு உரை எழுதிய திரு தண்டபாணி தேசிகர் மேற்கூறிய திருமந்திரப் பாடலை மேற்கோள் காட்டிப் பின் வருமாறு எழுதுகிறார்:-
“சோதியுள் அண்ட ஜோதி, பிண்ட ஜோதி, மன ஜோதி, ஞான ஜோதி, சிவ ஜோதி என ஐந்து என்பார் திருமூலர். அவற்றுள் அண்ட ஒளி ஒவ்வோர் அண்டங்களிலும் உள்ள சூரியன் சந்திரன் அங்கி (தீ), விண்மீன் முதலியன (திருமந்திரம் 1975).
பிண்ட ஒளி உடம்போடு கூடிய உயிர் அறிவின் கண்ணதாய் — மல நாசம் விளைக்க உபாயமாகும் பசுஞான ஒளி (பாடல் 1985);
உயிரைச் சூரியன், சந்திரன், அனல், கலையாகிய நான்குமாக அறிதல் மனவொளி (பாடல் 1990);
ஞான ஒளி பர நாதத்தின் செயலாய் வைகரியாதி வாக்குகள் உதயமானதற்கு இடமாய் இருப்பது.

Kartikai Deepa on top of Tiruvannamalai
சிவ ஒளி :-
முற்கூறிய நான்கு ஒளிகளும் சிவ ஒளியின் முன், இருள் போல அகன்றொழியும் — குடங்கள் தோறும் (அதிலுள்ள நீரில்) சூரிய ஒளி தோன்றினும், அந்தக் குடங்களின் வாயை மூடச் சூரிய ஒளி அந்தக் குடங்களில் மட்டும் அடங்கியதாகச் சொல்ல முடியாததுபோல எல்லா உயிர்களிடத்தும் விளங்குவதாயிருப்பது அகண்ட ஒளி எனப்படும்.
இம்மந்திரத்தினுள்ளும் அண்ட ஒளி, பிண்ட ஒளி, பிதற்றும் பெருமையை உண்ட வெளியாகிய மனத்துள் விளங்கும் ஒளியாம் மனவொளி, அவ்வொளிக்குள் ஒளியாகிய ஞான ஒளி, அகண்ட ஒளி என்று ஐந்து கூறுதல் காண்க. இவ்வண்ணம் இறைவன் நால்வகை ஒளியினும் சிறந்து, பெரிய ஒளியாகிய சிவஞானமாகிய முதற்படியில் நின்றாரும் அரிதற்கரிதாய் இருத்தலின் அரும்பெருஞ் சோதியை என்றார் மாணிக்கவாசகர்.
திருவெம்பாவை இயற்றப்பட்ட இடம் திருவண்ணாமலையாதலின் திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் தேடி அறிய முடியாத ஒளிப் பிழம்பாக நின்றார் இறைவன் என்னும் தல புராண வரலாற்றை அடக்கிக் கூறியதாக உரைத்தலுமாம்” — என்பது தண்ட பாணி தேசிகரின் உரை.

பாரதியாரும் சோதிமிக்க நவகவிதை என்று பாடுவதைக் காண்க.
–சுபம்-