
DATE – 9 FEBRUARY 2018
Time uploaded in London- 7-15 am
Written by S NAGARAJAN
Post No. 4718
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் ஐந்தாவது உரை
- ஒளி மாசின் பாதிப்பு ச.நாகராஜன்

உலகில் ஒளி மாசால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?
2016இல் நடத்தப்பட்ட ஒரு பெரிய ஆய்வின் படி உலகில் மூன்றில் ஒரு பங்கு மனித இனத்திற்கு வானத்தைப் பார்க்கவே முடியவில்லையாம். பால் வீ தி எனப்படும் மில்கி வே அவர்களுக்குத் தெரிவதே இல்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 99 விழுக்காடிற்கும் அதிகமான மக்கள் ஒளி மாசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதன் முதலில் 1988ஆம் ஆண்டில் இண்டர்நேஷனல் டார்க் – ஸ்கை அசோசியேஷன் (International Dark-Sky Association) உலகின் இருளைப் பாதுகாக்கத் தோன்றியது. ஒளியுடன் இருளையும் பாதுகாக்க இது பாடுபடுகிறது!
சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்தவுடன் உலகின் பெரு நகரங்கள் அனைத்திலும் ஒளி விளக்குகள் செயற்கை ஒளியை உமிழ்கின்றன.
இருளை நம்பி இருக்கும் தாவரங்களும் பிராணிகளும் இன்னலுக்குள்ளாகின்றன.
உண்மையில் சொல்லப் போனால் உலகமானது சூரியனின் ஒளி-இருள் ஆகிய இந்த இரு நிலைகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது! சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமே பருவ கால நிலைகளைச் சரியாக ஏற்படுத்துகிறது. இயற்கையான சூரிய ஒளி இதற்கு இன்றியமையாதது. இது அதிகமாகவும் கூடாது; குறையவும் கூடாது!
ஆஸ்திரேலியாவில் மட்டும் பத்தொன்பது லட்சத்தி நாற்பதினாயிரம் தெரு விளக்குகள் உள்ளன. ஒவ்வொரு பத்து ஆஸ்திரேலியருக்கும் ஒரு விளக்கு! இதற்காகும் செலவு 2100 லட்சம் டாலர்கள். 115 லட்சம் டன் கார்பன் டை ஆக்ஸைடை இவை வெளிப்படுத்துகின்றன.பூமியை மாசு படுத்துகின்றன!
உலகெங்கும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் நான்கில் ஒரு பங்கு விளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் தான்! தேவையற்ற விதத்தில் விளம்பரங்களுக்கும் இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும், தொழிலகங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்படும் மின்சாரமோ மிக அதிகம். இத்தாலியைச் சேர்ந்த டெர்னா என்ற நிறுவனம் மாலையில் பகல் நேர வெளிச்சம் அதிகமாக இருந்த நேரத்தில் விளக்குகளைச் சற்று தாமதமாக எரிய விட்டதின் மூலமாக மட்டும் 6452 லட்சம் கிலோவாட் ஹவர் மின்சக்தியைச் சேமித்திருக்கிறது!
தேவையற்ற விதத்தில் தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் ஒளியைப் பரவ விடுவது, தேவைக்கு மேல் மிக அதிக அளவிலான வெளிச்சம் கொண்ட பல்புகளை எரிய விடுவது, கண்கள் கூசும் விதத்தில் விளக்குகளை எரிப்பது, மிக அதிக பல்புகளின் தொகுதிகளை ஒரே இடத்தில் எரிய விடுவது ஆகியவற்றால் ஒளி மாசு ஏற்பட்டு, அதன் மூலம் விபத்துக்கள், நோய்கள் உள்ளிட்ட பல அபாயங்கள் ஏற்படுகின்றன.

இவற்றைத் தவிர்க்கும் விதத்தில், உலகெங்கும் ஒளி மாசை நீக்க அனைவரும் நடவடிக்கை எடுத்தால், மின்சாரமும் சேமிக்கப்படும், பூமியும் பிழைக்கும். ஒவ்வொரு தனி மனிதனின் பங்கும் இதில் வெற்றி அடைய இன்றியமையாததாகும்.
முயன்றால் வெற்றி தவிர வேறெதுவும் இல்லை!
***