
Compiled by London swaminathan
Date: 30 December 2016
Time uploaded in London:- 13-06
Post No.3498
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
ஜனவரி 2017 காலண்டர்
துர்முகி வருடம் (மார்கழி-தை மாதம்)
(இம்மாத காலண்டரில் ஓம் பற்றிய பொன்மொழிகள் இடம்பெறுகின்றன)
முக்கிய நாட்கள்:- ஜனவரி 8- வைகுண்ட ஏகாதசி, 13 போகிப் பண்டிகை, 14 பொங்கல்/ மகர சங்கராந்தி, 15 கனு/ மாட்டுப் பொங்கல், 17 திருவையாறு தியாகராஜ ஆராதனை, 26 குடியரசு தினம், 27 தை அமாவாசை.
ஏகாதசி- ஜனவரி 8,23; அமாவாசை- 27; பௌர்ணமி-12

ஜனவரி 1 ஞாயிற்றுக் கிழமை
இவ்வுலகிற்கு தகப்பனும் தாயும் தாங்குபவனும் பாட்டனும், கற்றுணரத்தக்கவனும் பரிசுத்தமளிப்பவனும், ஓம்காரப்பொருளும் அவ்வறே ருக், யஜுர், சாம வேதங்களும் நானே- பகவத் கீதை 9-17
ஜனவரி 2 திங்கட்கிழமை
ஓம் இதி ஏகாகஷரம் ஆத்ம ஸ்வரூபம்; நம இதி த்வ்யக்ஷரம் ப்ரக்ருதி ஸ்வரூபம்; நாராயணாய இதி பஞ்சாகஷரம் ப்ரப்ரம்ம ஸ்வரூபம் — தாரஸரோபநிஷத்
ஜனவரி 3 செவ்வாய்க் கிழமை
யோகதாரனையில் நிலைபெற்றவனாய் ஓம் என்னும் பிரம்மவாசகமாகிய ஓரெழுத்தை உச்சரித்துக்கொண்டு என்னை முறைப்படி சிந்தித்தவனாய் உடலைவிட்டு எவன் செல்லுகிறானோ அவன் உயர்ந்த கதியை அடைகிறான் -பகவத் கீதை 8-13
ஜனவரி 4 புதன் கிழமை
குந்தீபுத்ரனே!நான் நீரில் சுவையும் சந்திர சூரியர்களிடத்தில் ஒளியும் வேதங்களனைத்துள்ளும் ப்ரணவமாகவும்(ஓம்), ஆகாயத்தில் சப்தமும், மனிதர்களுள் ஆண்மையும் ஆகின்றேன் -பகவத் கீதை 7-8
ஜனவரி 5 வியாழக்கிழமை
ஊமையெழுத்தே உடலாச்சு – மற்றும்
ஓமென்றெழுத்தே உயிராச்சு
ஆமிந்தெழுத்தை யறிந்துகொண்டு விளை
யாடிக் கும்மியடியுங்கடி–கொங்கண நாயனார்

ஜனவரி 6 வெள்ளிக்கிழமை
தினந்தினைப் போதாகிலும் தான் தீதற நில்லாமல்
இனம்பிரிந்த மான்போல் இருந்தாய் — தினந்தினமும்
ஓங்காரத்துள்ளொளியாய் யுற்றுணர்ந்து நீ மனமே
ஆங்கார அச்சம் அறு – பட்டினத்தார்
ஜனவரி 7 சனிக்கிழமை
நீங்கும் ஐம்புலன்களும் நிறைந்த வல்வினைகளும்
ஆங்காரமாம் ஆசியும் அருந்தடந்த பாதமும்
ஓங்காரத்தின் உள்ளிருந்து ஒன்பதொழிந்தொன்றிலத்
தூங்கா ஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே–சிவவாக்கியர்
ஜனவரி 8 ஞாயிற்றுக் கிழமை
அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம்
உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம்
மகாரமானது அம்பலம் வடிவானது அம்பலம்
சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே -சிவவாக்கியர்
ஜனவரி 9 திங்கட்கிழமை
ஓம்நமோ என்றுமுளே பாவையென்று அறிந்தபின்
பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின்
நானும் நீயும் உண்டடா நலங்குலம் அது உண்டடா
ஊணும் ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் உனக்குளே – சிவவாக்கியர்
ஜனவரி 10 செவ்வாய்க் கிழமை
அவ்வெனும் எழுத்தினால் அண்டம் ஏழு ஆக்கினாய்;
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!- -சிவவாக்கியர்

ஜனவரி 11 புதன் கிழமை
அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்
எவ்வெத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை
சவ்வுதித்த மந்திரத்தைத்னு தற்பரத்து இருத்தினால்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!- சிவவாக்கியர்
ஜனவரி 12 வியாழக்கிழமை
கொண்டல் வரை நின்றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி இருந்தெண்டிரையாகி
ஒன்றின் பதஞ்செய்த ஓம் என்ற அப்புறக்
குண்டத்தின் மேல் அங்கி கோலிக்கொண்டானே–திருமந்திரம் 410
ஜனவரி 13 வெள்ளிக்கிழமை
தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவம் ஆகும் பெருநெறி தானே –திருமந்திரம் 839
ஜனவரி 14 சனிக்கிழமை
போற்றுகின்றேன் புகழ்ந்தும்புகல் ஞானத்தைத்
தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின்றேன் அறையோ சிவயோகத்தை
ஏற்றுகின்றேன் நம் பிரான் ஓர் எழுத்தே–திருமந்திரம் 864
ஜனவரி 15 ஞாயிற்றுக் கிழமை
நாடும் பிரணவ நடுவிரு பக்கமும்
ஆடு மலர்வாய் அமர்ந்தங்கு நின்றது
நாடு நடுவுண் முகநமசிவாய
வாடுஞ் சிவாய நம புறவட்டத்தாயதே–திருமந்திரம் 902

ஜனவரி 16 திங்கட்கிழமை
ஓம்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள்
ஓம்காரத்து உள்ளே உதித்த சராசரம்
ஓம்கார தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓம்கார சீவ பரசிவ ரூபமே –திருமந்திரம் 2628
ஜனவரி 17 செவ்வாய்க் கிழமை
ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு – கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி – அவள்
சந்நிதியிலே தொழுது நில்லு.
ஜனவரி 18 புதன் கிழமை
ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தன் அருளே என்று மனது தேறு.
ஜனவரி 19 வியாழக்கிழமை
உலகின் மிகப் பழமையான நூல் ரிக்வேதம். அது ஓம்காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும். ஓம் அக்னிமீளே புரோஹிதம் என்று துவங்கி இறுதியில் ஹரி: ஓம் என்று முடிப்பர்.
ஜனவரி 20 வெள்ளிக்கிழமை
வைவஸ்வதோ மனுர் நாம மானனீயோ மனீஷிணாம்
ஆசித் மஹீக்ஷிதாம் ஆத்ய: ப்ரணவ: சந்தசாம் இவ –ரகுவம்சம் 1-11
வேதங்களுக்கெல்லாம் முதலில் பிரணவம் இருப்பது போல அரசர்களுக்கெல்லாம் முதல் அரசராக இருந்தவர் வைவஸ்வத மனு என்பவர். அவர் சூரியனுடைய புத்ரர். அறிவாளிகளாலும் மதிக்கத் தக்கவராய் இருந்தார்.

ஜனவரி 21 சனிக்கிழமை
வாதாபி கணபதிம் பஜே
……………….
ப்ரணவ ஸ்வரூபம் வக்ரதுண்டம்
–முத்துசுவாமி தீட்சிதர்
ஜனவரி 22 ஞாயிற்றுக் கிழமை
மாணிக்க வாசகரின் திருவாசகமும் ஓம்காரத்தில் துவங்கி அதில் முடிவடைகிறது. திருவாசகத்தில் 51 பாடற் பகுதிகளில் முதலில் உள்ளது சிவ புராணம். அதில் உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா – என்று சிவபுராணத்தில் ஓம்காரத்தை அமைத்துள்ளார்.
கடைசியாக அமைந்த பாடற்பகுதி அச்சோ பதிகம். அதிலும், உய்யு நெறி காட்டுவித்திட்டோங்காரத்துட் பொருளை ஐயனெனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே – என்று சொல்லி முத்தாய்ப்பு வைக்கிறார்..
ஜனவரி 23 திங்கட்கிழமை
பாரதி பாடலில் (பாஞ்சாலி சபதத்தின் முதல் பாடல்):
ஓமெனப் பெரியோர்கள் – என்றும், ஓதுவதாய் வினை மோதுவதாய்,
தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர் ,தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய்
நாமமும் உருவும் அற்றே – மனம் நாடரிதாய் புந்தி தேடரிதாய்
ஆமெனும் பொருளனைத்தாய் – வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய்
நின்றிடும் பிரமம் என்பார் – அந்த
நிர்மலப் பொருளினை நினைத்திடுவேன்– பாரதி
ஜனவரி 24 செவ்வாய்க் கிழமை
பாஞ்சாலி சபதத்தின் முடிவுப் பாடல் ஓம்கார கர்ஜனையுடன் முடிகிறது:
ஓமென்றுரைத்தனர் தேவர் – ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்
பூமியதிர்ச்சி உண்டாச்சு – விண்ணை
பூழிப்படுத்தியதாஞ் சுழற் காற்று
சாமி தருமன் புவிக்கே – என்று
சாட்சியுரைத்தன பூதங்களைந்தும்!
நாமுங் கதையை முடித்தோம் – இந்த
நானில முற்றும் நல்லின்பத்தில் வாழ்க.– பாரதி
ஜனவரி 25 புதன் கிழமை
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்:
காமியத்தில் அழுந்தி இளையாதே
காலர் கைப்படிந்து மடியாதே
ஓமெழுத்தில் அன்பு மிகவூறி
ஓவியத்தில் அந்தமருள்வாயே
தூமமெய்க் கணிந்த சுக லீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா
ஏமவெற்புயர்ந்த மயில்வீரா
ஏரகத்தமர்ந்த பெருமாளே

ஜனவரி 26 வியாழக்கிழமை
அகத்திய முனிவனுக்கு முருகப் பெருமான் ஓம்கார மகிமையை உபதேசித்ததை, தெய்வ மணிமாலையில் வள்ளலாரும் பாடுகிறார்:-
சேமமிகு மாமறையின் ஓமெனும் அருட்பதத்
திறனருளி மலைய முனிவன்
சிந்தனையின் வந்தனையும் வந்த மெய்ஞ்ஞானசிவ
தேசிகாரத்னமே
ஜனவரி 27 வெள்ளிக்கிழமை
சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லும்:–
ஓம்காரஸ்ச அதசப்தஸ்ச த்வாவேதௌ ப்ரஹ்மண: புரா
கண்டம் பித்வா விநிர்யாதௌ தஸ்மான் மாங்கலிகாஉபௌ
–பாதஞ்ஜலதர்சனம்
பொருள்:– ஓம், அத என்ற இரண்டு சொற்களும் பிரம்மனின் திருவாயிலிருந்து வெளிவந்ததால் இரண்டும் மங்கலச் சொற்களாக கருதப்படும்.
ஜனவரி 28 சனிக்கிழமை
நான்கு முறை ஓம்காரம்!
போற்றியோ நமச்சிவாய
புயங்கனே மயங்குகின்றேன்
போற்றியோ நமச்சிவாய
புகலிடம் பிறிதொன்றில்லை
போற்றியோ நமச்சிவாய
புறமெனப் போக்கல் கண்டாய்
போற்றியோ நமச்சிவாய
சயசய போற்றி போற்றி
—–திருச்சதகம் பாடல் 64, திருவாசகம்
ஜனவரி 29 ஞாயிற்றுக் கிழமை
பரந்தது மந்திரம் பல்லுயிர்க்கெல்லாம்
வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரஞ் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓம் என்றெழுப்பே–திருமந்திரம் 923
ஜனவரி 30 திங்கட்கிழமை
ஓமென் றெழுப்பித்தன் உத்தம நந்தியை
நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென் றெழுப்பியவ் வாறறி வார்கள்
மாமன்று கண்டு மகிழ்ந்திருந்தாரே–திருமந்திரம் 924
ஜனவரி 31 செவ்வாய்க் கிழமை
ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓமய முற்றது உள்ளொளி பெற்றது
நாமயமற்றது நாமறியோமே
–திருமந்திரம் 2119

xxxx
32.நீரில் எழுத்து இவ்வுலகர் அறிவது
வானில் எழுத்தொன்று கண்டறிவாரில்லை
யாரிவ்வெழுத்தை அறிவாரவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே–திருமந்திரம் 934
33.வேரெழுத்தாய் விண்ணாய் அப்புறமாய் நிற்கும்
நீரெழுத்தாய் நிலந்தாங்கியும் அங்குளன்
சீரெழுத்தாய் அங்கியாய் உயிராமெழுத்து
ஓரெழுத்தீசனும்ய் ஒண்சுடராமே–திருமந்திரம் 949
34.ஓங்கரர முந்தீக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள்கண்டத்தாயிடும்
பாங்கார் நகாரம் பயில் நெற்றியுற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே–திருமந்திரம் 988
35.ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்- பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்- பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்– பாரதி
36.ஆமையொன் றேறி அகம்படி யானென
ஓமஎன் றோதியெம் உள்ளொளி யாய்நிற்கும்
தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்
சோமநறுமலர் சூடி நின்றாளே–திருமந்திரம் 1182

37.உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே
மணந்தெழு மாங்கதி யாகிய தாகுங்
குணர்ந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக்
கணந்தெழுங் காணுமக் காமுகை யாமே–திருமந்திரம் 1198
38.ஓம்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சார்ங்கால முன்னார் பிறவாமை சார்வுற்றார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந்தார்களே–திருமந்திரம் 1531
39.இலிங்க நற்பீடம் இசையும் ஓங்காரம்
இலிங்க நற்கண்ட நிறையு மகாரம்
இலிங்கத்துள் வட்ட நிறையும் உகாரம்
இலிங்க மகார நிறைவிந்து நாதமே–திருமந்திரம் 1722
40.ஒளியை யொளிசெய்து வோமென்றெழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேலெழவைத்துத்
தெளியத் தெளியுஞ் சிவபதந்தானே–திருமந்திரம் 2447
41.வைத்துச் சிவத்தை மதிசொரூபானந்தத்து
உய்த்துப் பிரணவ மாம் உபதேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
அத்தற்கடிமை யடைந்து நின்றானன்றே–திருமந்திரம் 2452
42.ஓமெனும் ஓங்காரத்துள்ளே யொருமொழி
ஓமெனும் ஓங்காரத்துள்ளே யுருவரு
ஓமெனும் ஓங்காரத்துள்ளே பல பேதம்
ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே–திருமந்திரம் 2627
43.ஓமெனும் ஓரெழுத்துள் நின்ற ஓசைபோல்
மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய் நின்ற செஞ்சுடர் எம்பெருமானடி
ஆய்நின்ற தேவர் அகம்படியாகுமே–திருமந்திரம் 2781
–Subham–