மனிதன் கடவுளாகும் காலம்! (Post No.4758)

Date: 18 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-07 am

 

WRITTEN by S NAGARAJAN

 

Post No. 4758

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

பாக்யா 16-2-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 52வது) கட்டுரை!
மனிதன் கடவுளாகும் காலம்! – ஷோங் ஷோங்!, ஹுவா ஹுவா!!
ச.நாகராஜன்
“எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது! பதில் சொல்லுங்களேன்!! நீங்கள் உங்கள் மனைவியை குளோன் செய்து உருவாக்கிவிட்டு அந்த குளோன் மனைவியை சந்திரனில் வைத்து விட்டு, நிஜ மனைவியை பூமியில் வைத்து விட்டு வாழ்ந்தால் அது ஏமாற்று வேலையாகக் கருதப்படுமா, கருதப்படாதா?!” – லூயிஸ் கஸ்மேன் (Luis Guzman)
இது மனிதன் கடவுளாகும் காலம்!
ஆம், உண்மையிலேயே மனிதன் படைப்புத் தொழிலில் கச்சை கட்டிக் கொண்டு இறங்கி விட்டான்!
சர்ச்சைக்குரிய செயற்கைப் படைப்பில் அவன் வெற்றியும் பெற்று விட்டான்!
முதன் முதலாக உயர் விலங்கினமான குரங்கை ‘சொமாடிக் செல் ந்யூக்ளியர் ட்ரான்ஸ்ஃபர்’ (Somatic Cell Nuclear transfer) என்ற அதி நவீன தொழில்நுட்ப உத்தி மூலமாக குளோனிங் செய்து படைத்து விட்டான்.
ஒரே மாதிரியான சிறுகுரங்குகள் (macaque) இரண்டை இரண்டு வார இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக உருவாக்கிப் படைத்து விட்டான்.
நீண்ட வால்களை உடைய இந்தக் குட்டிக் குரங்குகளின் பெயர் ஷோங் ஷோங் (Zhong Zhong) மற்றும் ஹூவா ஹுவா (Hua Hua).
Zhonghua – ஷோங்குவா என்ற சீனச் சொல்லுக்கு சீன தேசம் என்று பொருள். அந்தச் சொல்லின் அடிப்படையில் வைத்த பெயர் தான் ஷோங் ஷோங்!

 

மரபியலில் Non-embryonic cell – அதாவது முளையத்துக்குரியதல்லாத உயிரணு என்ற உத்தியின் மூலம் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ள இரட்டையர்கள் இவர்கள்!
27-11-2017 அன்று இவர்கள் படைக்கப்பட்டனர் என்று அதிகாரபூர்வமாக அறியப்படுகிறது!
இதை பென் ஹிர்ஷெலர் என்ற விஞ்ஞானி அறிவித்துள்ளார்.

சீன அகாடமி ஆஃப் ஸயின்ஸஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோஸயின்ஸ் என்ற நிறுவனம் ஷாங்காயில் உள்ளது.

அதில் உள்ள விஞ்ஞானிகள் இந்த சொமாடிக் செல் ந்யூக்ளியர் டிரான்ஸ்ஃபர் என்ற உத்தியைப் பயன்படுத்தியுள்ளனர்!

இந்த முறையில் உயிரணு முட்டையிலிருந்து கருவை எடுத்து அது இன்னொரு உடலில் உள்ள உயிரணுவின் கருவில் மாற்றி வைக்கப்படும். இப்படி மாற்றி அமைக்கப்பட்ட முட்டை மூன்றாவது இடத்தில் பதியம் செய்யப்படும். இதன் விளைவாக குளோனிங் எனப்படும் முறையால் புதிய உயிர் ஒன்று உருவாகும்!

 

1999விஞ்ஞானிகள் டெட்ரா என்ற பெயருடைய ஒரு ரீஸஸ் குரங்கை எம்ப்ரியோ – ஸ்பிலிட்டிங் என்ற முறையில் உருவாக்கினர். ஆனால் பல குட்டிகளை உருவாக்குவதில் சிக்கல் இருந்தது. இதுவரை இப்படி குளோனிங் செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற முடியவில்லை; தடைகள் ஏராளம் இருந்தன.

ஆனால் சீன விஞ்ஞானிகள் குழு இந்தத் தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளது! 181 சினைக்கருக்களை 42 பதிலி (surrogate) குரங்குகளில் செலுத்தி கடும் முயற்சிகள் செய்து பார்த்த பின்னர் இப்போது இரு குட்டிக் குரங்குகள் படைக்கப்பட்டுள்ளன!

 

இதே போல 79 சினைக்கருக்களை 21 பதிலி குரங்குகளில் செலுத்திப் பார்த்த போது இரு குட்டிக் குரங்குகள் பிறந்தன; ஆனால் உடனே இறந்தன!

 

இந்த முறை பிறந்திருக்கும் ஷோங் ஷோங் (Zhong Zhong) மற்றும் ஹூவா ஹுவா (Hua Hua) உயிருடன் இருக்கின்றன!
இந்த பரபரப்பூட்டும் செய்தியை அறிவியல் இதழான ‘செல்’ என்ற பத்திரிகை 24-1-2018 அன்று வெளியிட்டுள்ளது.

இதில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர் கியாங் சன் (Qiang Sun), “நாங்கள் ஏராளமான சோதனை முறைகளை மேற்கொண்டு முயற்சித்தோம். இந்த உத்தி தான் வெற்றியைத் தந்துள்ளது” என்று பெருமிதத்துடன் கூறுகிறார்!

 

இதன் நோக்கம் என்ன? இப்படிப்பட்ட குளோனிங் படைப்புகள் சில வியாதிகளைப் பற்றிச் சரியாக அறிய உதவும் என்கின்றனர் விஞ்ஞானிகள். புதிய மருந்துகளை உபயோகித்துப் பார்க்கும் போது மரபணு வேறுபாடு என்ற சிக்கலினால் மருந்தைப் பயன்படுத்த முடியுமா முடியாதா என்பன உள்ளிட்ட பல கேள்விகள் அடிபட்டுப் போகும் என்பதும் அவர்கள் கருத்தாக உள்ளது.

 

ஆனால் இந்த வெற்றியையும் ராபின் லோவெல் பாட்ஜ் (Robin Lovell Badge) என்ற விஞ்ஞானி குறைத்தே மதிப்பிட்டு விமரிசித்துள்ளார்.100 சினைக்கருக்களிலிருந்து வெறும் இரு குட்டிகள் என்பது பெரிய வெற்றி அல்ல என்பது அவர் கருத்து!

‘திறமையற்ற ஆபத்தான செய்முறை’ என்று அவர் இந்த புதிய குளோனிங் முறை பற்றிக் கருத்துத் தெரிவிக்கிறார்.

மனித குலத்தில் தொன்று தொட்டு உபதேசிக்கப்பட்டு வரும் வாழ்முறை நெறிகள் பற்றி பல அறிஞர்களும் கவலைப் படுகின்றனர்.

‘இப்படி விலங்குகளைப் படைப்பதும் அழிப்பதும் செய்யக் கூடாது, இது நல்லதல்ல, மனிதன் பின்பற்ற வேண்டிய நல்ல நெறிகளையே இது சீரழித்து விடும்’ என்பது அவர்களின் கருத்து!

இப்படியே போனால் மனிதனைக் கூட மனிதன் படைத்து விடுவானே என்று அவர்கள் அங்கலாய்க்கின்றனர்.

அதற்கு மு மிங் பூ என்ற விஞ்ஞானி, “ஆமாம், அதற்கென்ன,  குளோனிங் முறைப்படி மனிதனும் படைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று பதில் அளித்திருக்கிறார்.

கடையில் சென்று நமது டிசைன் படி இன்று ஆடைகளை வடிவமைக்கிறோம்; வீ டுகளை இஷ்டப்படி டிசைன் செய்து அவற்றை விருப்பப்படி கட்டி நாம் இன்று வாழ்கிறோம். அதே போல டிசைனர் பேபி உருவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது மிகப் பெரிய ஆச்சரியகரமான செய்தி!

இதன் விளைவுகளை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது!

‘பயப்படாதீர்கள்! ஆராய்ச்சிக்காகத் தான் இந்த குளோனிங் படைப்பு உருவாக்கப்படுகிறது’ என்று விஞ்ஞானிகள் சொன்னாலும், ஆராய்ச்சிக்காகத் தான் அணுகுண்டை வெடித்துப் பார்த்தோம் என்று முதலில் சொல்லி விட்டு ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் போடப்பட்டதே அதை மறக்க முடியுமா?!

மனிதன் கடவுளாகும் காலத்தைத் தடுக்க கடவுளாலும் முடியாதோ?!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .

“லாபரட்டரியில் ஒரு பெண்ணுடன் என்னால் பணி புரிய முடியாது; ஒன்று அவர்களுடன் நான் காதல் வயப்படுகிறேன்; அல்லது அவர்கள் என்னைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்”  என்று 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான  டிம் ஹண்ட் சொன்னாலும் சொன்னார், அவருக்கு ஏகப்பட்ட கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

லாபரட்டரியில் காதல் உருவாககி கல்யாணத்தில் முடிந்து வெற்றிகரமாக வாழ முடியும் என்பதை பல விஞ்ஞான காதல் ஜோடிகள் நிரூபித்துள்ளன! ஒரு எடுத்துக்காட்டு இதோ:

 

ஜெரோம் கார்லே (Jerome Karle) 1940இல் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் முதன் முதலாக இஸபெல்லா லுகோஸ்கியை (Isabella Lugoski) பிஸிகல் கெமிஸ்ட்ரி வகுப்பில் பார்த்தார். டாக்டர் டிகிரி வாங்க அவர் முதல் வருடப் படிப்பிலும், இஸபெல்லா அண்டர் கிராஜுவேட் கடைசி வருடத்திலும் இருந்தார். அகர வரிசைப் படியிலான பெயர் பட்டியலால் அவர்கள் இருவரும் ஒரே லாபரட்டரியில் பணியாற்ற வந்தது.

 

லாபரட்டரியில் நுழைந்து பார்த்த போது ஒரு இளைஞர் எல்லா உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருந்ததைப் பார்த்த நான், ‘எப்படி இவ்வளவு சீக்கிரம் லேபுக்கு வர முடிந்தது என்று அவரைப் பார்த்துக் கேட்டேன்’ என்ற இஸபெல்லா, அந்தக் கேள்வியை அவர் ரசிக்கவில்லை என்பதையும் உணர்ந்தார்.

இருந்தாலும் நாளடைவில் ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழகிய போது காதல் மலர்ந்தது. 1942இல் காதல் கல்யாணத்தில் முடிந்தது. 1946இல் இருவரும் பிஸிகல் கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் பட்டத்தைப் பெற்றனர்.

இருவரும் இணைந்து பணியாற்ற முடிந்ததால் மாலிகுலர்    ஸ்ட்ரக்ஸரை நிர்ணயிக்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்துப் புகழ் பெற்றனர்.

 

1985இல் ஜெரொமுக்கு இரசாயனத்தில் நோபல் பரிசு கிடைத்தது.

இஸபெல்லா தனது பங்கிற்கு ஏராளமான விருதுகளைப் பெற்றார்.

காதல் ‘க்ளிக்’கான விஞ்ஞான தம்பதிகளில் இவர்கள் மிகவும் புகழ் பெற்ற தம்பதிகளாக ஆனார்கள்.

***