
Written by London swaminathan
Date: 18 January 2017
Time uploaded in London:- 22-14
Post No.3556
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
கண்ணாமூச்சி விளையாட்டு உலகெங்கிலும் விளையாடப்படுகிறது. இது தமிழன் கண்டுபிடித்த விளையாட்டோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மேலை உலகத்தில் கிரேக்கர்கள் முதல் முதலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதற்கும் முன்னரே 2000 ஆண்டுப் பழமையான சங்கத் தமிழ் இலக்கியத்திலும் அதற்கு ஆயிரம் ஆண்டுக ளுக்குப் பின்னர் வந்த கம்பராமாயணத்திலும் காணப்படுகிறது. ஒரே ஒரு வித்தியாசம் பழங்காலத்தில் இதைப் பெண்கள் விளையாடியதாகவே தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் சொல்கின்றன.

பார்வதி, சிவ பெருமானின் கண்களை மூடி விளையாடியதாகவும் உடனே உலகமே இருண்டதாகவும், அதன் காரணமாக உலகிற்கு ஒளியூட்ட சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்க நேரிட்டது என்றும் புராணங்கள் செப்பும்.
முதலில் கம்ப ராமாயணப் பாடலைப் படித்து ரசிப்போம்:-
கம்பராமாயணம், பால காண்டம்
பொன்னே தேனே பூமகளே காண் எனை என்னா
தந் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி
இன்னே என்னைக் காணுதி நீ என்று இகலி தன்
நல் நீலக் கண் கையின் மறைத்து நகுவாளும்
பொருள்:-
தனக்கு நிகராக எவரையும் பெறாத ஒரு மங்கை, “பொன் போன்றவளே! தேனே! இலக்குமி போன்ற செல்வமுடையாளே! நான் ஒளிந்து கொள்கிறேன். நீ என்னைக் கண்டுபிடி பார்க்கலாம் என்று தோழியிடம் கூறினாள். அந்த்ச் சோலையில் மலர்ச் செடிகளும் புதர்களும் மண்டிக் கிடக்கும் இடத்தில் ஒளிந்து கொண்டாள். தோழி அவளைக் கண்டுபிடிக்க முடியாதபோது, பின்னே வந்து தோழியின் கருங்குவளை மலர் போன்ற பொத்திக் கொண்டு, “நீ இப்போது என்னைக் காண்பாயாக” என்று சொல்லி சிரித்தாள்.

கம்ப ராமாயணத்துக்கு முன்னரே சங்க கால இலக்கியத்தில் கண்பொத்தி விளையாடும் குறிப்பு கிடைக்கின்றது:
சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை யன்ன
நலம்பெறு கையின் என் கண்புதைத்தோயே
பாயல் இந்துணையாகிய பனைத்தோள்
தோகை மாட்சிய மடந்தை
நீயலது உளரோ என் நெஞ்சமர்ந்தோரே (293, ஐங்குறு நூறு)
பொருள்: மலையில் மணம் கமழும் காந்தள் போன்ற விரல்களால் என் கண்களைப் பொத்திய என் நங்காய், என் நெஞ்சில் என்றும் வீற்றிருப்பவர் பாயலில் என் மனதுக்கினிய துணைவியாகிய மயில் போன்றவளே. மனைத்தக்க மாண்புடைய மடந்தை நீயன்றி பிறர் யாருளர்? எதற்காக என் கண்ணைப் புதைத்தனை? (தலைமகன், தலைவியைப் பார்த்துச் சொன்னது)

இந்த விளையாட்டு எப்படி தோன்றியது?
தாய்மார்கள், குழந்தையை விட்டு விலகிச் சென்றால், சிறிது நேரத்தில் அழத் துவங்கும். சில நேரங்களில் குழந்தையை அழவிட்டு வேடிக்கை பார்க்க தாய்மார்கள் கதவுக்குப் பின்னாலோ, திரைக்குப் பின்னாலோ நிற்பர். குழந்தை அழுவதற்கு முன்னர், அதன் முன் தோன்றி கொஞ்சும் மொழிக ளைச் சொன்னவுடன் குழந்தை சிரிக்கும். அதைக் கண்டு தாய்மார்கள் மகிழ்வர். குழந்தை வளர்ந்த பின்னரும் இது நீடிக்கும். பின்னர் குழந்தை களே தமக்குள் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை ஆடத் துவங்கும். ஆதி மனிதன், குகைகளில் வாழ்ந்த காலத்தில் தன் மகன்களையும் கொஞ்ச நேரம் தவிக்கவிட்டுப் பின்னர் அவர்கள் முன் தோன்றி ஆனந்தப் படுத்தி இருப்பன். ஆகவே இது மிகப் பழங்கால விளையாட்டுகளில் ஒன்றாகும்.
இதை, கண்களில் துணியைக் கட்டிவிட்டு சுற்றி நின்றும் விளையடலாம். அல்லது ஒருவர் கண்ணைப் பொத்தி இருக்கையில் மற்றவர்கள் ஓடி ஒளிந்துகொண்ட வகையிலும் ஆடலாம்..
இந்த விளையாட்டில் பல சாதகங்கள் உள்ளன:
காசு பணம் தேவை இல்லை.
விளையாட விசேஷ பலகையோ, காய்களோ தேவை இல்லை
எத்தனை பேர் வேண்டுமானாலும், எந்த இடத்திலும், எவ்வளவு நேரம் ஆனாலும் விளையாடலாம்.
வயது வரம்போ, கால வரம்போ கிடையாது.
நல்ல உடற்பயிற்சியும் மனத் தெளிவும் பிறக்கும்.
பலருடன் தோளொடு தோள் உரசி ஆடுவதால் சகோதரத்துவம் வளரும்.
உலகிலேயே மிகப்பெரிய கண்ணாமூச்சி ஆட்டம் கேம்பிரிட்ஜ் அருகில் மில்டன் பூங்காவில் 2016 செப்டம்பரில் நடந்தது. ஆயிரத்தும் மேலானோர் கலந்துகொண்டனர்..

–Subham–