எனது கம்பெனியில் சேருகிறீர்களா, சார், நீங்கள்? (Post No.5074)

Written by S NAGARAJAN

 

Date: 4 JUNE 2018

 

Time uploaded in London –  6-56 am  (British Summer Time)

 

Post No. 5074

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நடைச்சித்திரம் : மேலாண்மை நகைச்சுவை

 

எனது கம்பெனியில் சேருகிறீர்களா, சார், நீங்கள்?

.நாகராஜன்

 

எனது கம்பெனியில் வேலைக்கு ஆட்களை எடுக்கிறோம்.

நீங்கள் சேருகிறீர்களா, சார்?

**

 

கம்பெனி தலைமை நிர்வாகிகளைப் பற்றிய அனுபவங்கள் அநேகமாகப் பலருக்கும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். பணியைப் பற்றிய அறிவு நன்கு இல்லாவிட்டாலும் மற்றவரை நன்கு வேலை வாங்கத் தெரிய வேண்டும்; அதாவது நன்கு செயல் திறமையுடனும் அறிவுடனும் இருக்கும் பலரையும் நன்கு பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்;

இன்னொரு வித தலைமை நிர்வாகிகள் உண்டு; அவர்கள் மானேஜ்மெண்டின் தலைமைக்கு தலைமையாக இருக்கும் கம்பெனி உரிமையாளர்களை “அனுசரித்து” நடப்பவர்கள்.

 

இதற்கு அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதாவது “ஆமாம் சாமி” யாக இருக்க வேண்டும்!

சரி இன்றைய கம்பெனிகளின் நிர்வாகிகள் – பாஸ் – எப்படி இருக்கிறார்கள்?

ஒரு ஜோக் உண்டு.

 

கிளி ஒன்றை வாங்க வந்தவர் அதன் விலையைக் கேட்டார்.

500 டாலர் என்றார் கடைக்காரர்.

“500 டாலரா? கிளிக்கா” என்று வாயைப் பிளந்தார் விலையைக் கேட்டவர்.

“இதற்கு கம்ப்யூட்டர் ஆபரேட் பண்ணத் தெரியும் “ என்றார் கடைக்காரர்.

அடுத்த கிளியைப் பார்த்த அவர், “இதன் விலை என்ன?” என்றார்.

“இதன் விலை ஆயிரம் டாலர் என்றார் கடைக்காரர்.

 

“ஆயிரம் டாலரா? ஒரு கிளிக்கா இந்த விலை” மலைத்துப் போய்க் கேட்டார் அவர்.

“இந்தக் கிளிக்கு யூனிக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் தெரியும.புராகிராமும் பண்ணும்” என்றார் கடைக்காரர்.

மூன்றாவதாக இருந்த கிளியைப் பார்த்த அவர், “இதன் விலை என்ன?” என்று கேட்டார்.

இதன் விலை இரண்டாயிரம் டாலர் என்றார் கடைக்காரர்.

“என்ன இரண்டாயிரம் டாலரா?” என்று மயங்கி விழும் நிலையில் இருந்தார் கேட்டவர். “அப்படி என்ன இது செய்கிறது?”

 

“உண்மையைச் சொல்லப் போனால் இது ஒன்றுமே செய்து நான் பார்த்ததில்லை. ஆனால் மற்ற இரண்டு கிளிகளும் இதை “பாஸ்” என்று கூறி பவ்யமாக நடந்து கொள்கின்றன!” என்றார் கடைக்காரர்.

எக்ஸிகியூடிவ் என்பவர் யார் என்பதை இப்போது புரிந்து கொண்டால் சரி.

 

ஒரு நல்ல எக்ஸிகியூடிவ் திறமையானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல வேலை வாங்க வேண்டும். தலைமைக்கும் தலைமையாக இருக்கும் உரிமையாளர்களை “அனுசரித்து” நடக்க வேண்டும்.

 

 

ஒரு எக்ஸ்கியூடிவ் லேடி கார் ஓட்டும் போது ஒரு பஸ் மோதி இறந்தார்.

அவரை மேல் உலகில் செயிண்ட் பீட்டர் வரவேற்றார்.

 

“நீங்கள் பெரிய எக்ஸிகியூடிவ். அனைத்தும் அறிந்தவர். வேலையாட்களை எடுத்து அவர்களுடன் பணி புரிந்தவர். ஆகவே உங்களுக்கு ஒரு சலுகை.

ஒரு நாள் உங்களை நரகத்திற்கு அனுப்புகிறேன். அடுத்த நாள் உங்களை சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன். 48 மணி நேரம் கழித்து உங்கள் முடிவின் படி நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்களோ அங்கு செல்லலாம்”

செயிண்ட் பீட்டரின் இந்த அபார சலுகையால் மனம் மகிழ்ந்த பெண்மணி முதலில் நரகம் சென்றார்.

 

அபாரமான வரவேற்பு.அனைத்துப் பெண்களும் அழகிகள். பியூட்டி பார்லரின் செண்ட் வாசனை கமகமத்தது.

அவரை வரவேற்று கோல்ப் மைதானத்திற்கு கூட்டிச் சென்றனர். நல்ல விளையாட்டு.பின்னர் க்ளப் ஹவுஸில் டின்னர். அடாடாடா! அதுவல்லவா டின்னர்.

 

டெவில் நேரடியாக வந்து நமது பெண்மணியை வரவேற்று நலம் விசாரித்தார்.

பிறகு பார்ட்டி. நல்ல அரட்டை.

24 மணி நேரம் முடிந்தது.

 

இப்போது சொர்க்கத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

மேகக் கூட்டங்களின் நடுவே தேவதைகள்! அவரை வரவேற்றன. நல்ல பாடல். அழகிய நடனம். ஆனந்தமாக இருந்தது.

24 மணி நேரம் முடிந்தது.

 

அவர் செயிண்ட் பீட்டரிடம் தன் முடிவைச் சொல்லும் நேரம்.

“நன்கு யோசித்துப் பார்த்தேன். சொர்க்கம் நன்றாகத் தான் இருக்கிறது. ஆடலும் பாடலும் சரி தான். ஆனால் நரகத்தில் இருக்கும் சுகமே தனி. ஆகவே அங்கேயே செல்ல விரும்புகிறேன்.”

அவர் நரகத்திற்கு அனுப்பப்பட்டார்.

நரகத்தில் கோரமான உருவங்கள் ஹாஹா என்று இப்போது அலறிக் கொண்டிருந்தன. நாற்றம் தாங்க முடியவில்லை. பார்க்கும் இடமெல்லாம் சகிக்க முடியாத குப்பை கூளச் சாப்பாடு.

அலறிப் போன பெண்மணியை டெவில் – கோரமான உருவம் – பார்த்து அசிங்கமாகச்  சிரித்தது.

 

“நேற்று நான் வந்த போது இந்த இடம் பிரமாதமாக இருந்ததே” என்று வருத்தம் தோய பயத்துடன் எக்ஸ்கியூடிவ் பெண்மணி கேட்டார்.

அதற்கு டெவில் பதில் சொன்னது” “ நேற்று உங்களை தேர்ந்தெடுக்கும் நாள்.இன்றோ நீங்கள் பணியாளருள் ஒருவர்.” (Yesterday we were recruiting you; today you are staff!”)

 

கம்பெனிகளைப் பற்றியும் எக்ஸிகியூடிவ் பற்றியும் ஒரு நல்ல ஐடியா கிடைத்தால் சரி!

**

 

எனது கம்பெனியில் வேலைக்கு ஆட்களை எடுக்கிறோம்.

நீங்கள் சேருகிறீர்களா, சார்?

 

***