
Written by S NAGARAJAN
Date: 17 July 2017
Time uploaded in London:- 5-59 am
Post No.4088
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
IMAGES OF SRI RAMA FROM FACEBOOK FRIENDS;THANKS.
கம்பன் கவி இன்பம்
கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! என்ற கட்டுரையைத் தொடர்ந்து வரும் கட்டுரை இது.
சொல் கண்டார் சொல்லே கண்டார்; ஞான எல் கண்டார் எல்லே கண்டார்!
ச.நாகராஜன்
கம்பனை அணு அணுவாக, சொல் சொல்லாகச் சுவைத்து ரசிக்கும் கவிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை தனது அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்:
சொல் கண்டார் சொல்லே கண்டார்; சொல்லினுட் சொலிக்கும் ஞான
எல் கண்டார் எல்லே கண்டார்; இனிமையோடிகலுஞ் சந்த
மல் கண்டார் மல்லே கண்டார்; மகிழ்கவித் துறைகை போய
வல் கண்ட புலவர் யாரிவ் வரகவி முடியக் கண்டார்?!!!

சொல்லைக் கண்டவர் கம்பனின் சொல் வண்ணத்தில் மூழ்கி விடுவார்கள். ஒரு சொல்லா, இரண்டு சொல்லா? ஒரு பாடலுக்கு நான்கு வரிகள்; ஒரு வரிக்கு சுமாராக ஆறு சொற்கள் என்று வைத்துக் கொண்டாலும் பத்தாயிரம் பாடலுக்கு சுமார் இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் சொற்கள். இவற்றில் பெர்முடேஷன் காம்பினேஷன் போட்டால் நமக்கு வரும் எண்ணிக்கை பல பல கோடிகள். அவ்வளவு விதமாக சொல்லோடு சொல்லினை இணத்து, சொற்றொடர்களை ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பிட்டு, அர்த்தங்களை அறிந்து, புரிந்து சுவைப்பது என்றால் ஒரு ஜென்மத்தில் நடக்கக் கூடிய காரியமா என்ன.
சொல்லைப் பார்க்கப் போய் சொல்லினுள் ஞான எல்லை, (எல் என்றால் ஒளி) – ஞான ஒளியைக் கண்டால் அதிலிருந்து மீள்வது எங்ஙனம்?
சொல்லினுள் ஜொலிக்கும் ஞான ஒளி கண்டவர் கண்டவரே; அதிலிருந்து அவர் எப்போது எப்படி மீள்வாரோ? யாருக்குத் தெரியும்.
சந்த இனிமையைக் கண்டவர்கள் அதிலேயே மாட்டிக் கொள்வார்கள்.
இப்படி இருக்கும் போது தமிழின் துறைகளை நன்கு கையாண்ட கம்பனின் கவிதையின் முடிவை முழுதுமாக யார் கண்டார்கள்.
இவ் வரகவியை “முடியக்” கண்டவர்கள் யாரும் இலர்.
கே.என். சிவராஜ பிள்ளையுடன் ஓங்கிய குரலில் நாமும் ஆம், யாரும் முடியக் காண முடியாது என்று கூவுகிறோம்.
தோள் கண்டார் தோளே கண்டார் பாடலில் கம்பன் ராமனின் அழகை முடியக் கண்டவர் யாரும் இல்லை என்று ஒரு ‘போடு” போடுகிறான் இல்லையா!

அதே “போடை” அவருக்கே போடுகிறார் சிவராஜ பிள்ளை.
அற்புதமான பாடல் தானே இது?
கம்ப ராமாயணக் கவுத்துவ மணி மாலையில் (கம்பராமாயணக் கௌஸ்துப மணிமாலை) 72வது பாடலாக மலர்கிறது இது.
51வது பாடலில் இதையே வற்புறுத்துகிறார் அவர் இப்படி:
சொல்வளம் பெரிதென்கோ யான்? சொல்லினுட் டுளும்பு ஞான
நல்வளம் பெரிதென்கோ யான்? நவையறு மணிகள் வீசும்
வில்வளம் பெரிதென்கோ யான்? வியங்கியம் விழுமி தென்கோ?
பல்வளம் செறிந்து பண்ணாம் பரிமள மியன்ற பாவில்!
சொல்வளமா?
ஞான நல் வளமா?
மணிகள் வீசும் வில் வளமா?
அடடா, அனைத்தும் இணைந்து பல்வளம் செறிந்து காணும் கம்பனின் பண் கொண்ட பாடலை எப்படிப் புகழ்வது?
எங்களுக்கும் தெரியவில்லை.
கம்பன் புகழே புகழ்; அவன் பாடலே பாடல் என்று கவிஞர் சிவராஜ பிள்ளையுடன் மகிழ்ச்சியுடன் இணைந்து ஓர் குரலாய்க் கூவுகிறோம் நாம்.
அழகிய இந்த நூலில் வரும் பாடல்கள், கம்ப ராமாயணத்தில் வரும் முக்கியச் செய்யுள்களை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்பதைக் கம்பனைக் கற்றோர் அறிவர்!

***




