
Date: 30 JANUARY 2018
Time uploaded in London- 6-45 am
Written by S NAGARAJAN
Post No. 4679
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST
WITH YOU.
((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))
இலக்கியத் திருட்டு
காப்பி அடிக்கும் எழுத்துக் கலைவாண(ஞ)ர்கள்!
ச.நாகராஜன்

1
கவிஞர் கண்ணதாசன் எழுதியதைத் தன் பெயரில் போடத் துடித்த கலைஞர்கள் காலத்திலிருந்து இன்று வரை காப்பி அடிக்கும் கலைவாணர்கள் பெருகியே வந்திருக்கிறார்கள்.
இதை ஒரு குற்றமாக அவர்கள் நினைப்பது இல்லை என்பது தான் மெய்; வருத்தப்பட வைக்கும் விஷயமும் இது தான்!
இதில் ஒரு அற்ப ஆசை; தானும் ஒரு படைப்பாளி தான் என்பதை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே அடி மனத்து ஆசை.
புரிகிறது; ஆனால் இது பெரும் தவறல்லாவா! ஒரிஜினல் படைப்பாளிக்கும் படிப்பவர்களுக்கும் இழைக்கும் மாபெரும் துரோகமல்லவா?!
படித்ததில் பிடித்ததை நண்பர்களுக்கு அனுப்பலாம்; தளங்களில் வெளியிடலாம்- உரியவரின் அனுமதி பெற்று; அது இந்தக் கால கட்டத்தில் மிகவும் கஷ்டம் என்றால், படித்த நல்ல விஷயத்தைப் பகிர வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி இருந்தால், அதை எழுதியவர் யார், அதை வெளியிட்ட பத்திரிகை அல்லது இணையதளம் எது, அதை விரும்பக் காரணம் என்ன என்பதையும் சேர்த்து வெளியிட வேண்டும். உள்ளதை உள்ளபடி வெளியிட்டால் போதும்; என் அபிப்ராயம் எல்லாம் எதற்கு என்றால், அதுவும் சரிதான், படைப்பை அப்படியே அதை எழுதியவர், வெளியிட்ட தளம், பத்திரிகை எது என்பதுடன் வெளியிட வேண்டும்.
இது குறைந்த பட்ச கர்டஸி.(Courtesy)

2
நாளுக்கு நாள் எனது படைப்புகளை உடனுக்குடன் “திருடி” என் பெயரை ‘கட்’ செய்து விட்டு, தங்கள் பெயரில் வெளியிடும் சாமர்த்தியசாலிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.
இப்படி அவர்கள் பெயரில் வெளியாகியுள்ள திருட்டுக் கட்டுரை எனது உடனடி கவனத்திற்கு சில மணி நேரங்களுக்குள்ளாகவே தெரிவிக்கப்பட்டு விடுகிறது.
சுமார் எட்டாயிரம் பேர்கள் தினசரி எனது கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்பதும், இவர்களுள் பெரும்பாலானோர் மிகவும் நல்லவர்கள், வல்லவர்கள், அதி புத்திசாலிகள், ஸ்மார் பீபிள் என்பதும் ஒரு காரணம் – இது உடனடியாக என் கவனத்திற்குக் கொண்டுவரப்படுவதற்கு
3
எனது எழுத்துக்களை திருடிய சில “திருடர்கள்”, திருடிகள் பற்றி எழுத வேண்டாம் என்று தான் இத்தனை நாள் இருந்தேன். ஆனால் சமீபத்திய “காதல் எத்தனை வகை” என்ற எனது கட்டுரை திருடப்பட்டு வெளியிடப்பட்ட விதம் தான் என்னை வருத்தமுறச் செய்தது, கோபமுறச் செய்தது.
அதில் என் பெயரை வெளியிடவில்லை; பரவாயில்லை!
வெளியிட்ட www.tamilandvedas.com தளத்தின் பெயர் வெளியிடப்படவில்லை, பரவாயில்லை.
ஆனால் போஜ மஹாராஜன் எழுதிய சிருங்காரபிரகாஸம் என்ற அரிய நூலை 1908 பக்கங்களையும் கைப்பிரதியாக எழுதி அதை ஆராய்ந்து உலகிற்கு வெளியிட்டாரே பேரறிஞர் டாக்டர் வி.ராகவன், அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை.
அந்தப் பகுதியை கட் செய்து விட்டார் “உத்தம வில்லன்”!
ஏன் அப்படிச் செய்தார் என்பது தான் தெரியவில்லை!
தன் பெயரில் வெளியிட்ட இந்தக் கட்டுரையை சில மணி நேரத்திற்குள்ளாகவே ஹெல்த்கேர் இதழ் ஆசிரியரும் என் நண்பருமான ஆர்.சி. ராஜா,” நன்றி கூட இல்லையே” என்று வருத்தப்பட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் – இதை எடுத்துப் போட்டவரின் தளத்தின் லிங்கை அனுப்பி!
என்ன சொல்லித் திட்டுவது? படிப்பவர்கள் தாம் தீர்மானித்துத் திட்ட வேண்டும்.
சிலர் தனக்கு வந்த மெயிலிலிருந்து அப்படியே அனுப்பி விடுகிறார்கள் – அவர்களுக்கு ‘லிஃப்ட்” ஆனது தெரியாது!
ஆகவே உடனடியாக யாரையும் திட்ட முடியாது!

4
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தை சென்னையில் இருந்தால் காலையில் கேட்பது வழக்கம். காரணம், சுமார் இருநூறுக்கும் (இன்னும் அதிகமாகவே) மேற்பட்ட அறிவியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளை நான் அளித்திருப்பதாலும் இன்னும் அளித்து வருவதாலும், அந்தச் சிந்தனைகள் ஒலிபரப்பப்படுவதை கேட்பேன்.
ஒரு நாள். ஒரு ஒலிபரப்பு என்னை திடுக்கிட வைத்தது.
ஒரு டாக்டர். ஜானகி என்று பெயர். எனது நூறு அறிவியல் கட்டுரைகளைத் தொகுத்து ‘வியப்பூட்டும் விஞ்ஞானப் புதுமைகள் நூறு” (நவம்பர் 2005 வெளியீடு) என்று ஒரு நூலாக வெளியிட்டிருந்தேன்.
அதில் பத்தை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து மாற்றாமல் அம்மையார் அனுப்ப, அதை நமது வானொலி நிலையமும் ஏற்றுக் கொண்டிருந்தது.
உடனடியாக புரோகிராம் எக்ஸிகியூடிவிடம் (திரு செல்வகுமார் அருமையான நண்பர்; சிறந்த நிர்வாகி; நல்லனவற்றைத் தேர்ந்தெடுப்பதில் வல்லவர்) விஷயத்தைச் சொன்னேன்.
அவர் சிரித்தார். ‘என்ன செய்வது? எல்லா நூல்களையும் என்னால் படிக்க முடியாதே! இப்படி ஒரு டாக்டர் செய்யலாமா’, என்று வருந்தினார்.
பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை நான் ஊகித்தேன்.

5
பாக்யாவில் கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து சுமார் 19 வருடங்களாக வாரம் தோறும் எழுதி வருகிறேன். ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தினத்தந்தியில் அப்படியே எனது அறிவியல் கட்டுரை காப்பியாக ஒரு முறை வந்ததை தற்செயலாகப் பார்த்துத் திடுக்கிட்டேன். என்ன செய்வது?
6
இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகை தினக்குரல். சில ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சுளா ரமேஷ் அவர்களின் குழுமத்திலிருந்து வெளியாகும் சினேகிதி பத்திரிகையில் மாதம் ஒரு கட்டுரை எழுதுவது எனது வழக்கம். அதில் வெளியான 64 கலைகள் பற்றிய எனது கட்டுரை அப்படியே வெளியாகி இருந்தது. ஆனால் இந்தப் பத்திரிகையில் எனது பெயரும், கட்டுரை எடிட் செய்யப்படாமலும் வந்திருந்தது. இதை எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன் அவர்கள் சுட்டிக் காட்டினார்.
திருட்டு உலகிலும் ஒரு நல்ல குரல்!
எனது சம்பந்தி சந்தேகாஸ்பதமாக இருக்கும் கட்டுரைகள் என்னுடையது தானா என்று சுலபமாகக் கண்டுபிடிக்க ஒரு வழி வைத்திருக்கிறார்.
இதை அவர் சொன்ன போது சிரித்து மகிழ்ந்தேன்.
காப்பி அடிக்கப்பட்டுள்ள கட்டுரையின் சில முக்கிய சொற்றொடர்களை அப்படியே கூகுளில் போடுவாராம். எனது ஒரிஜினல் கட்டுரை வெளியான தளம்/ அல்லது பத்திரிகை, வெளியான தேதி உள்ளிட்டவை வந்து விடுமாம். உடனடியாக எனக்குத் தெரியப்படுத்துவார்.
இது போல எனது நண்பர்கள் பலரும் உடனடியாக போனில் கூப்பிட்டுச் சொல்லி விடுகிறார்கள்!

7
ரவி என்று ஒரு ஆசாமி. அப்படியே அப்பட்டமான காப்பியாளர். எனது கட்டுரையைத் தன் போட்டோவுடன் போட்டுக் கொண்டார். இதைச் சுட்டிக் காட்டிய போது, “இதில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார். அவருக்கு காப்பிரைட், திருட்டு இலக்கியம் என்றெல்லாம் பாடமா எடுக்க முடியும்? இதற்கு தண்டனை உண்டு என்றவுடன் ஆசாமி வழிந்தார்; வழிக்கு வந்தார்.
8
ஒரு நல்ல ஆன்மீக மாதப் பத்திரிகை. ‘அமிர்தமாக வர்ஷிக்கும்’ நல்ல கருத்துக்களைக் கொண்டது. இதில் ஒரு கட்டுரை வந்தது. இதைச் சுட்டிக் காட்டியவுடன் ஆசிரியர் வருத்தப்பட்டார். ஏனெனில் இப்படி ஒரு காப்பி கட்டுரையைத் தான் வெளியிட்டு விட்டோமே என்று!
சென்ற வாரம் எனது சம்பந்தி அனுப்பிய கட்டுரை ஒன்று வந்தது. மஞ்சுளா ரமேஷ் ஞான ஆலயம் குழுமம் நடத்தும் ஜோஸிய இதழான ஸ்ரீ ஜோஸியத்தில் நவம்பர் 2017 இதழில் வெளியான கட்டுரை ஒன்றை அப்படியே ஒரு பெண்மணி தன் பெயரில் இணைய தளத்தில் வெளியிட, அது “உலா” வந்தது! ஆனால் ஒரிஜினல் கட்டுரையில் நான் கொடுத்திருந்த ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகங்களை (என்னென்ன கிழமைகளில் என்னென்ன செய்யலாம்?) வெட்டி விட்டார்.

9
கட்டுரை நீண்டு விட்டது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!
அனுமதியுடன் பிரசுரியுங்கள், உரிய கட்டுரையாளரின் பெயரைப் போடுங்கள், அது வெளியான பத்திரிகை அல்லது தளத்தின் பெயரைச் சுட்டிக் காட்டுங்கள் என்று தான் சொல்லலாம்; இதற்கு அதிகமாக என்னத்தைச் சொல்ல, காப்பி அடிக்கும் கலை(ஞ)-வாணர்-களுக்கு?!
1961ஆம் ஆண்டு வெளியான திருடாதே திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது :
‘திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது!’

10
ஒழிக்க முடியாவிட்டாலும் கூட கண்டிக்கலாம் இல்லையா?
இப்படி இலக்கியத் திருடு செய்யும் குருடர்களை ஒரு வார்த்தை கண்டித்து எழுதிப் போடுங்கள்.
வெட்கமடைபவர்கள், அப்புறம் அதில் ஈடுபடமாட்டார்கள், உரியவரின் பெயரை வெளியிடுவார்கள்!

அத்துடன் எனது நலம் விரும்பிகள் செய்வது போல ஒரிஜினல் படைப்பாளருக்கு இப்படிச் செய்பவர் யார் என்பதைத் தெரிவிக்கலாம்!
***