
Written by S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 14 AUGUST 2019
British Summer Time uploaded in London – 7-45 am
Post No. 6774
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை www.allindiaradio.gov.in தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து நிகழ்நிலையில் கேட்கலாம். 8-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட எட்டாம் உரை இங்கு தரப்படுகிறது.
காற்றின் தரம் பற்றிய குறியீட்டு எண்!
நாளுக்கு நாள் உலகம் வெப்பமயமாவதாலும் காற்றின் தரம் குறைந்து கொண்டே போவதாலும் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலை மாற ஒவ்வொருவரின் பங்கும் இன்றியமையாதது. காற்றின் தரம் பற்றிய குறியீட்டு எண் Air Quality Index என அழைக்கப்படுகிறது.

இது 51 முதல் 100 வரை இருந்தால் அது ஏற்கப்படக் கூடிய சூழ்நிலையைக் குறிக்கிறது. 201 முதல் 300 வரை இருப்பின் அது அபாயகரமான சூழ்நிலை இருப்பதையும் தரமற்ற காற்றை சுவாசிக்கும் நிலை இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
காற்றின் தரம் குறைவதற்கான மிக முக்கிய காரணம் வாகனங்களிலிலிருந்து வெளியேற்றப்படும் நச்சு வாயுக்களே.
நச்சு வாயுக்களை வெளிப்படுத்தாத தரம் வாய்ந்த வாகன எஞ்ஜின்கள், வாகனங்களின் தரமான பராமரிப்பு, வாகனங்களைக் குறைவாகப் பயன்படுத்தல் ஆகியவை பெரு நகரங்களின் காற்று மண்டலத்தைச் சுத்தப்படுத்துவதற்கான சில வழிகளாகும்.
ஒவ்வொரு வாகனத்திற்குமான, சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தது என்பதற்கான தரச் சான்றிதழ் பெறுவதும், இன்றியமையாத ஒன்றாகும். அத்துடன் சூரிய சக்தி ஆற்றலைப் பயன்படுத்தும் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதும் ஒரு நல்ல வழி!
ஒவ்வொருவரும் அன்றாடப் பயன்பாட்டிற்குத் தனித்தனியே காரில் செல்வதைத் தவிர்த்து பலரும் இணைந்து ஒரு வாகனத்தில் செல்லும் பழக்கத்தையோ அல்லது மெட்ரோ ரெயில் பயன்பாடு அல்லது அலுவலகம் ஏற்பாடு செய்யும் பஸ்ஸில் பயணம் செய்தல் போன்றவற்றை மேற்கொண்டால் நச்சுப் புகை வெளியேற்றம் நிச்சயம் குறைவு படும்.
பர்டிகுலேட் மேட்டர் (Particulate Matter – PM) எனப்படும் துகள்மப் பொருள்கள் குறுமணலை விட அளவில் சிறியவை. இவை காற்றில் கலக்கும் போது, அவற்றை சுவாசிப்பவருக்கு ஆஸ்த்மா உள்ளிட்ட ஏராளமான வியாதிகளைத் தருகின்றன.
அன்றாட காற்றின் தரக் குறியீட்டு எண்ணை அறிவது இன்றைய வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான அம்சமாகி விட்டது.
மிக மோசமான குறியீட்டு எண் இருப்பதை அறிந்து கொண்டால் வெளியில் செல்லாமல் இருப்பது, அவசியம் நேர்கையில் வெளியில் செல்லும் போது முகத்திற்கு காப்புறை அணிவது ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.
ஒரு நகரின் ஆரோக்கியமான வளி மண்டலத்தை அந்த நகரைச் சேர்ந்தவர்களே நிச்சயமாக உருவாக்க முடியும்!
***
