காலம் வருமுன்னே காலன் வர மாட்டான்! (Post No.5139)

Written by S NAGARAJAN

 

Date: 23 JUNE 2018

 

Time uploaded in London –  6-46 am  (British Summer Time)

 

Post No. 5139

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கர்ம பலன் அதிசயம்

காலம் வருமுன்னே காலன் வர மாட்டான்!

 

ச.நாகராஜன்

 

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்.

ஹிந்து மதம் கூறும் கர்ம பல சித்தாந்தத்தின் படி இது சத்தியம்.

சில உண்மை சம்பவங்களைப் பார்ப்போம்.

1

டைட்டானிக் கப்பல் விபத்தைப் பற்றி அனைவரும் அறிவோம்.

அதன் முதல் பயணத்திலேயே அது விபத்திற்குள்ளானது.

அதில் பயணம் செய்தவர்களுள் ஜேம்ஸ் க்ரக் (James Kruck) என்பவரும் ஒருவர். சிகாகோவைச் சேர்ந்தவர் அவர். மூழ்க முடியாத கப்பல் என்று வர்ணிக்கப்பட்ட டைட்டானிக் மூழ்கவே அதில் பல நூறு பேர் உயிரிழந்தனர். (2222 பேர்கள் கப்பலில் இருந்தனர்; 1517 பேர்கள் உயிரிழந்தனர்)

ஆனால் அதில் ஜேம்ஸ் க்ரக் உயிர் பிழைத்தார்.

பின்னர் அடுத்து டார்பிடோவிற்கு இலக்கான லூஸிடானியா(Lusitania) வில் அவர் பயணித்தார்.

அதிலும் அவர் உயிர் பிழைத்தார்.

பின்னர் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் வண்டிகள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதின.

 

அதில் ஒன்றில் பயணம் செய்தவர் நமது ஜேம்ஸ் க்ரக்.

அந்த விபத்திலும் கூட ஒரு சிறு காயமும் இன்றி உயிர் பிழைத்தார்.

 

அவருக்கு 68 வயதான போது மூன்றாம் மாடி ஜன்னலிலிருந்து கீழே விழுந்தார். காயங்கள் ஏற்பட்டாலும் உயிர் பிழைத்தார்.

மரணத்தை வென்ற மாவீரனாக அவர் காணப்பட்டார்.

ஆனால் என்ன அதிசயம்!

 

ஒரு அடி ஆழம் கூட இல்லாத ஒரு சிற்றோடையை ஒரு நாள் அவர் கடக்க நேரிட்டது. அப்போது மாரடைப்பு ஏற்பட அந்த நீரோடையில் அவர் விழுந்தார். உயிர் துறந்தார்.

காலனை விரட்டி விரட்டி அடித்த அவ்ர் காலம் வந்தவுடன் அவன் வசமானார்.

அதிசயம், ஆனால் உண்மை!

 

2

 

கல்கத்தா செய்தித்தாளான அம்ருத பஜார் பத்ரிகா தனது 23-6-1974 தேதியிட்ட இதழில் ஒரு உண்மைச் சம்பவத்தைப் பிரசுரித்தது.

திருமதி கான்சிலேரியா வில்லானுவேவா (Mrs Cancilaria Villanueva) தென் பிலிப்பைன்ஸில் (Southern Philippines) ஒரு கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வயது 52.

தீவுகளுக்கு இடையே பயணித்துக் கொண்டிருந்த அலோஹா (Aloha) என்ற அந்தக் கப்பல் திடீரென்று தீ விபத்தால் பற்றி எரிந்து உடைந்தது. ஜாம்போங்கா டெல் -நார்ட் (Zamboanga Del –Norte) என்ற மாகாணத்தின் அருகில் அது ஜூன் 2ஆம் தேதி மூழ்கியது. அதில் பயணித்த 271 பயணிகளில் 4 பேர் உயிரிழந்தனர்.

 

அதிலிருந்து விழுந்த கான்சிலேரியா ஒரு கடல் ஆமையின் முதுகில் ஏறினார். அந்த ஆமை அவரை இரண்டு நாள் பாதுகாப்புடன் சுமந்தது. 48 மணி நேரம் கழித்து அவர் ஒரு கப்பலைப் பார்த்தார். உதவி கோரிக் கத்தினார். கப்பலில் வந்த மாலுமி அவர் ஒரு பெரிய எண்ணெய் டிரமில் ஏறி வந்து கொண்டிருந்ததாக நினைத்தார். ஆனால் உண்மையில் பார்த்தால் அது ஒரு கடல் ஆமை. யாராலும் இதை நம்ப முடியவில்லை.

அவரைப் பாதுகாப்பாக கப்பலில் ஏற்றினர் மாலுமிகள்.

என்றாலும் கூட ஆமை அங்கிருந்து போகவில்லை. இரண்டு முறை கப்பலை சுற்றி விட்டு, தனது ‘பயணி’ பாதுகாப்பாக இருபப்தை உறுதி செய்தவிட்ட பின்னர், மெதுவாக அது அங்கிருந்து நகர்ந்தது.

 

இந்த அதிசயச் செய்தியை Bulletine Today என்ற பத்திரிகை வெளியிட்டது. அது உலகச் செய்தி ஆனது.

காலம் வரவில்லை அந்தப் பெண்மணிக்கு; ஆகவே காலனும் அவரிடம் வரவில்லை.

 

 

3

சவாய் மதோபூரில் ஜக்கர்பந்த் அருகே படகு ஒன்று விபத்திற்குள்ளானது. தாயும் தந்தையும் நதியில் மூழ்கி இறந்தனர்.

 

அவர்களது ஒரு வயது மகன் ஒரு புல் கட்டில் விழ அந்தக் குழந்தை உயிர் பிழைத்தது.

இதை PTI பெரிதாக வெளியிட்டது.

4

இன்னொரு  PTI செய்தி. நியூயார்க்கிலிருந்து வந்த செய்தியை அது 26-2-1952 அன்று வெளியிட்டது.

 

பல மாடி அடுக்குக் கட்டிடம். அதில் ஆறாவது மாடி ஜன்னலிலிருந்து ஒரு மூன்று வயதுக் குழந்தை தவறி கீழே விழுந்து விட்டது. டெலிவிஷன் ஏரியலில் தடுக்கிக் கீழே வந்து விழுந்த குழந்தை அம்மா அம்மா என்று கத்திக் கொண்டே சாதாரணமாக எழுந்து நடந்தது!

 

5

ஈரானில் ஒரு பூகம்பம். இடிபாடுகளுக்கு இடையே ஏழு நாட்கள் கழித்து இரு குழந்தைகள் உட்பட ஏழு பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இது போன்ற பூகம்ப மீட்புச் செய்திகள் ஏராளம் உண்டு.

 

6

‘ஈஸ்வரஸ்ய வஷே சர்வம் சராசரமிதம் ஜகத்’

 

இந்த சராசரம் ஈஸ்வரனின் வசம் உள்ளது.

உண்மை; அனைத்தையும் நமது கர்மமே நிர்ணயிக்கிறது.

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்!

சம்பவங்கள் ஆயிரம் ; உள்ளே உறைந்திருக்கும் சத்தியம் ஒன்றே தான்!

***