காலம் பற்றிய ஐந்து அற்புதக் கதைகள்!-2

akrura vision

படம்: தண்ணீருக்கடியி்ல், அக்ரூரர், கண்ட  காட்சி

எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1877

தேதி-20 May 2015  நேரம்- 8-30 am

காலம் என்பது சுழன்று கொண்டே இருக்கும்- என்னும் கருத்தை வலியுறுத்தும் மூன்று கதைகளை நேற்று கண்டோம். இன்று மேலும் இரண்டு சுவையான கதைகளைக் காண்போம்.

கதை-4

பாகவத புராணத்தில் உள்ள ஒரு கதை: நாரதர் ஒரு முறை கிருஷ்ணரைப் பார்ப்பதற்காக துவாரகைக்குச் சென்றார். கிருஷ்ணருக்குப் பல மனைவியர்கள் உண்டு. முதலில் மூத்த மனைவியிருக்கும் அரண்மனைக்குச் சென்று வணக்கம் சொல்லுவோம் என்று உள்ளே நுழைந்தார். அவள் அன்பாக கணவனுக்கு விசிறி வீசிக் கொண்டிருந்தாள். என்ன நாரதரே! சௌக்கியமா? நலம்தானா? என்று இருவரும் அன்பாக குசலம் விசாரித்தனர். இவரும் உரிய மரியாதை வசனங்களைப் பரிமாறி விட்டு அடுத்த மனைவியிருக்கும் அரண்மனைக்குச் சென்று உள்ளே நுழைந்தார். அங்கே இரண்டாவது மனைவியுடன் கிருஷ்ணர், தாயக் கட்டம் விளையாடிக் கொண்டிருந்தார். நாரதரைக் கண்டவுடன், அப்போதுதான் முதல் தடவை பார்ப்பது போல குசலம் விசாரித்தார். நாரதருக்கு வியப்பாக இருந்தது. மூன்றாவது மனைவியிருக்கும் அரண்மனைக்குச் சென்று உள்ளே எட்டிப் பார்த்தார். அங்கே அவள், கிருஷ்ணரின் கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தாள் (முன் காலத்தில் இப்படியெல்லாம், கணவன்மார்களுக்கு மனைவிமார்கள் சேவகம் செய்வதுண்டு!!!!)

இப்படியாக நாரதர் பல மாளிகைகளுக்குள் கிருஷ்ணன் பல இடங்களில் இருப்பதையும் ஒவ்வொருமுறையும் அவர், அப்போதுதான் நாரதரை முதல் முறையாகக் காண்பது போல நடந்துகொள்வதையும் கண்டு வியந்தார். கடவுளை எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்தவன், எதையும் செய்ய வல்லவன் (Omniscient, Omnipresent, Omnipotent) என்பர். ஒரே காலத்தில் அவரை எங்கும் காண முடியும்.

வெள்ளைக் காரனுக்கு இந்தக் கருத்து எல்லாம் புரியாது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விஞ்ஞானப் புனைக் கதைகளில் (Science fiction stories) இதை எல்லாம் கதை போல எழுதத் துவங்கியுள்ளனர்.!

IMG_3526

படம்: நாரதர்

கதை-5

பாகவத புராணத்தில் உள்ள மேலும் ஒரு கதை: கிருஷ்ணனும் அவனது அண்ணன் பலராமனும் கட்டிளம் காளைகள். இருவரும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் இருந்து குஜராத் மநிலத்தில் உள்ள துவாரகைக்குச் செல்ல திட்டமிட்டனர். அந்தக் காலத்தில் இந்துக்களில் பெரிய எஞ்சினீயர்கள் இருந்ததால் சாலைப் போக்குவரத்து செம்மையாக நடந்தது.– (இது போலவே ஈரான்- ஆப்கனிஸ்தான் எல்லையில் உள்ள கேகய நாட்டில் இருந்து பரதன் வந்த பாதையையும் வால்மீகி ராமாயணத்தில் காணலாம்) — உடனே அக்ரூரர் என்ற குடும்ப நண்பர் – கிருஷ்ண பக்தர் — அவர்களை ரதத்தில் அழைத்துச் சென்றார். ரதத்தை ஓட்டி வந்த டிரைவர் அக்ரூரருக்கு களைப்பு. உடனே இரண்டு சகோதரர்களையும் ரதத்திலேயே உட்காரவைத்துவிட்டு அவர்கள் அனுமதியுடன் குளிக்கச் சென்றார். யமுனை ஆற்றுத் தண்ணீரில் தலையை முக்குகிறார். நீருக்கு அடியில் ரதத்தில் கண்ணனும் பலராமனும் இருக்கக் கண்டார். வியப்புடன் நீருக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தார். கிருஷ்ணனும் பலராமனும் சிரித்து மகிழ்ந்து உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

மீண்டும் தலையை நீருக்குள் முக்கினார். அப்பொழுது கிருஷ்ணன், விஷ்ணுவாக ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது படுத்திருப்பதைக் கண்டார். மீண்டும் வியப்பு. தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தால் இரண்டு சகோதரர்களும் அதே இடத்தில் ரதத்தில் இருந்தனர். இப்போது அக்ரூரருக்கு கண்ணன்- பலராமன் அவதார புருஷர்கள் என்பது விளங்கிற்று.

கடவுள் என்பவன் காலத்தைக் கடந்தவன் என்பது தெளிவாயிற்று. விஷ்ணுவின் மறு அவதாரம் கிருஷ்ணன் என்றும் ஆதிசேஷனின் மறு அவதாரம் பலராமன் என்றும் இந்துக்கள் நம்புகின்றனர்.

–சுபம்–