ஜோதிட மேதைகள்: காளிதாஸ்

Picture: Maldives, a Muslim country, has issued stamps on Zodiac Signs in 1974.

ஜோதிட மேதைகள் தொடருக்காக

பாரதத்தின் சாரம் மஹாகவி காளிதாஸ்

By Chitra Nagarajan

 

நவரத்னங்களில் ஒருவர்

விக்கிரமாதித்தன் அரசவையில் இடம் பெற்றிருந்த மேதைகளில் மஹாகவி காளிதாஸரின் கவித் திறன் பாரதமெங்கும் பரவி இருந்ததை வரலாறு வியப்புடன் பொன்னேட்டில் பொறிக்கிறது! மஹரிஷி அரவிந்தரோ, “ வால்மீகி, வியாஸர், காளிதாஸர் ஆகியோர் புராதன இந்தியாவின் சாரம்” என்று வியந்து கூறுகிறார். அறநெறி, அறிவுத்திறன், உலகியல் பொருள் ஆகிய மூன்றிலும் ஆர்யர்கள் எவ்வளவு மேம்பட்டிருந்தனர் என்பதை அவர்கள் தங்கள் நூல்களில் சித்தரிக்கின்றனர் என்று மேலும் கூறும் அவர் மனித ஆன்மாவின் மேம்பாட்டை அவர்களது கவிதைகள் சித்தரிக்கும் பாங்கைப் புகழ்கிறார்.

காளிதாஸரின் கதை

காளிதாஸரின் கதை அனைவரும் அறிந்ததே. வழி வழியாகக் கூறப்படும் கதைப்படி காளிதாஸர் ஒன்றுமே அறியாத முழு மூடனாக இருந்தார். அனைத்தையும் கற்று விட்டோம் என்று மமதை கொண்ட ராஜகுமாரியின் ஆணவத்தை அடக்க அரசவையில் இருந்த பண்டிதர்கள் ஒரு பெரும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு நாள் மரத்தின் நுனியில் உட்கார்ந்தவாறே அடி மரத்தை வெட்ட முனையும் முழு மூடனான காளிதாஸைப் பார்த்து தமது சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்கான சரியான நபர் அவனே என்று தீர்மானித்து அவனிடம் எதுவும் பேச வேண்டாம்; அரசகுமாரியின் முன்னர் சைகைகளாலேயே எதையும் சொல்; பொன்னும் பொருளும் மிக்க வாழ்க்கை உண்டு” என்று கூறி அவனை அழைத்துச் சென்றனர். அரசகுமாரி கேள்விகளைக் கேட்க காளிதாஸன் மனம் போனபடி சைகைகளைக் காட்ட அதற்கு அரசவை பண்டிதர்கள் அற்புதமான வியாக்யானம் தந்தனர். வியந்து போன ராஜகுமாரி காளிதாஸனை மணமுடித்தாள், ஆனால் முதல் இரவிலேயே காளிதாஸனின் ‘புலமை’ அவளுக்குத் தெரிந்தது தான் எப்படிப்பட்ட சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டோம் என்பதும் அவளுக்குப் புரிந்தது.

 

இதற்குப் பின்னர் காளிதாஸன் மனம் நொந்து காளியின் முன் சென்று தன் தலையை அர்ப்பணிக்க முற்பட்ட போது அவள் பிரசன்னமாகி அனுக்ரஹிக்க, காளிதாஸரின் கவி மழை பாரதமெங்கும் பொழிந்தது. இதையே வெவ்வேறு விதமாக பல நூல்கள் சித்தரிக்கின்றன. இன்னொரு பரம்பரைச் செய்தியின் படி காளிதாஸன் மனம்  நொந்து ஒரு ஆற்றங்கரை படித்துறைக்குச் சென்ற போது அங்கு துணி துவைக்கும் கற்களைப் பார்த்தார். அடித்துத் துவைக்கப்படும் கற்கள் மழுமழுவென்று மழுமழுப்பாகவும் உருண்டையாகவும் இருக்க அருகே உள்ள ஏனைய கற்கள் சொரசொரப்பாகவும் எந்த வித அழகான வடிவமும் இன்றி இருப்பதையும் பார்த்தார். அவருக்கு பொறி தட்டியது போல ஞானம் ஏற்பட்டது, தன் அறிவை மழப்பான கற்கள் போல ஆக்க புத்திகூர்மையைத் தீட்டினால் போதும் என்று படிக்க ஆரம்பித்தார்; பெரிய மேதையானார்.

பல்துறை மேதையின் காவியங்கள்

எது எப்படியானாலும் காளிதாஸர் பல் துறை மேதை. சொற்களையும் அதன் ஆழத்தையும் சொல்லும் பாங்கையும் மனித குலத்திற்குச் சொல்ல வேண்டியதையும் அறிந்த விற்பன்னர் அவர். அவரது காவியங்களின் வர்ணனைகள் தென் பாரதத்தையும் வட பாரதத்தையும் அற்புதமாக வர்ணிப்பதால் அவர் நாடு முழுவதும் சுற்றி வந்த பயணி என்பதும் அவர் ருதுக்களை வர்ணிப்பதை வைத்து அவர் இயற்கையை நேசிக்கும் இயற்கை ஆர்வலர் என்பதும் தெரிய வரும். ரகுவம்சம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், அபிஞான சாகுந்தலம், விக்ரமோர்வசீயம், ருதுசம்ஹாரம் ஆகிய அற்புத கவிதை காவியங்களில் ஜோதிடக் குறிப்புகளையும் தேவ ரகசியங்களையும் காளிதாஸர் ஆங்காங்கே குறிப்பிட்டுக் கொண்டே செல்வது அவர் அருள்சக்தி படைத்த மாமேதை என்பதைத் தெளிவாக விளக்குகிறது.

 

காளிதாஸரைப் பற்றிய ஏராளமான  (நூற்றுக்கும் மேலானவை) சுவையான சம்பவங்கள் உள்ளன.இவரது முழு வாழ்க்கையை அறிவதோடு இவரது நூல்களைப் படிப்பது இந்திய கலாசாரத்தை அறிய விரும்பும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

காளிதாஸர் தரும் நட்சத்திர சித்திரங்கள்

 காளிதாஸர் நூற்றுக்கணக்கான நட்சத்திர ரகசியங்களை தன் நூல்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுக் கொண்டே செல்கிறார். மாதிரிக்கும்ஸோமதாரையை ஸ்வர்க்க பத்ததி என்றும் (ரகுவம்சம் 9-87) அஸ்வினி நட்சத்திரத்தை குதிரை தலை போல இருக்கிறது (தன்வி கோடகமுகாக்ருதௌ த்ரிபே) என்றும் அவர் கூறுவதைக் குறிப்பிடலாம்! நவீன வானவியல் நிபுணர்கள் நட்சத்திர தொகுதிகளைப் பற்றி இன்று என்ன கூறுகிறார்களோ அதையே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விளக்கமாக அவர் குறிப்பிட்டிருப்பது வியக்க வைக்கும் விஷயம்!

உத்தரகாலாம்ருதம்

உத்தரகாலாம்ருதம் என்ற ஜோதிட நூல் காளிதாஸரால் இயற்றப்பட்டதாகக் காலம் காலமாகக் குறிப்பிடப்பட்டு வருகிறது. ஒரு இலக்கிய மேதையே இதை எழுதி இருக்கக் கூடும் என்பதால் மஹாகவி காளிதாஸரே நிச்சயமாக இதை இயற்றினார் என்று ஒரு சாரார் கூறுவர்.ஆனால் இதை எழுதியவர் இன்னொரு காளிதாஸர் என்றும் (பிற்காலத்தில் புழக்கத்தில் வந்த சரஸ சல்லாபம், உத்யோகம் போன்ற வார்த்தைகளையும் ஆந்திர மற்றும் பாரசீக பாஷைகளைப் பற்றிய அவரது குறிப்புகளினாலும்) அவர் 16 அல்லது 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த நூலின் சுவடிகள் சென்னையில் உள்ள கவர்ன்மெண்ட் ஓரியண்டல் மானஸ்க்ரிப்ட் லைப்ரரி உள்ளிட்ட பல நூலகங்களில் உள்ளன.வேத ஜோதிடத்தை உத்தர காலாம்ருதம் போல வேறு எந்த நூலும் விளக்கவில்லை என்ற புகழ் இந்த நூலுக்கு உண்டு.பல்வேறு அறிஞர்களின் விளக்க உரையுடன் எல்லா கடைகளிலும் இது கிடைக்கிறது.

 

12 பாவங்களின் முக்கியத்துவம். கிரஹங்களின் முக்கியத்துவம், குளிகை, மாந்தியை நிர்ணயிக்கும் விதம், ஒரு மனிதனின் ஆயுளை நிர்ணயிக்கும் முறை,கேந்திர திரிகோணங்களின் முக்கியத்துவம், ராஜயோகம், விபரீத ராஜ யோகம், புதாதித்ய யோகம் உள்ளிட்ட ஏராளமான யோகங்கள் பற்றிய அபூர்வமான விளக்கங்கள், தசா காலமும் அதன் பலன்களும் என்று இப்படி ஜோதிட களஞ்சியமாக அனைத்து விஷயங்களையும் இந்த நூல் விளக்குகிறது.இதை ஒரு ஜோதிட பொக்கிஷம் என்றும் ஜோதிட புதையல் என்றும் ஜோதிடர்களும் ஜோதிட ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர்.

 

காளிதாஸர் இந்தியாவின் சாரம் என்றால் உத்தரகாலாம்ருதம் ஜோதிடத்தின் சாரம் என்று ஒரே வரியில் கூறி விடலாம்!காதலின் மென்மையையும் மேன்மையையும் உணர வேண்டுமா? தேவ ரகசியங்களை அறிய வேண்டுமா? மனித மனத்தின் உன்னதமான அகல நீள ஆழங்களை தரிசிக்க வேண்டுமா?பாரதம் போற்றும் ஆன்மீக சிகரத்தில் ஏற வேண்டுமா? ஜோதிடக் கடலை ஒரே மடக்காகக் குடிக்க வேண்டுமா? இவை அனைத்துக்கும் ஒரே வரியில் பதில் உண்டு: காளிதாஸரைப் படியுங்கள்! காளிதாஸரை மட்டும் படியுங்கள், போதும்!!

 

************************