
COMPILED BY LONDON SWAMINATHAN
Date: 13 January 2016
Post No. 2486
Time uploaded in London :– 9-31 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
(லண்டன் ஸ்ரீ முருகன் கோவில் மஹா கும்பாபிஷேக மலர், 1984)
நேற்று வெளியிட்ட சஜ்ஜன சாருகர் கதையையும் படியுங்கள்

அவ்வினைக்கு இவ்வினை: மற்றொரு சான்று
ஒரு காளிகோவில் பூசாரி ஒருவன் பூஜை செய்து கொண்டிருந்தான். மார்கழி மாதம் அதிகாலையில் குளிர்ந்த நீரில் முழுகி காளி தேவிக்கு தயிர் அன்னம் நிவேதனம் செய்தான். ஒவ்வொரு நாள் ஒவ்வொருவருடைய உபயம். தட்டில் பணம் போடும் பெரியவர்கட்குத் தயிரன்னத்தை விளாம்பழம் அளவு உருட்டித் தருவான். பிள்ளைகள் கையில் தயிரன்னத்தைத் தடவி விடுவான். அப்பிள்ளைகள் வெளியே வந்து பூதக்கண்ணாடி போட்டுப்பார்த்தால்தான் கையில் பிரசாதம் சிறிது இருப்பது தெரியும்!
பூசாரிக்கு ஆகார மாறுபாட்டால் காய்ச்சல் வந்தது. அதற்குத் தகுந்த மருந்து உண்பதுதான் முறை. அவன் அறிவில்லாதவன். “காளியாயீ! இந்தக் காய்ச்சலிலிருந்து என்னைக் காப்பாற்று. உனக்கு இரு ஆடுகள் பலி தருவேன்” என்று பிரார்த்தனை செய்துகொண்டான். அவன் மனைவி மிளகு- திப்பிலி கஷாயம் செய்து தந்தாள். காய்ச்சல் நின்றுவிட்டது.
ஆடிமாதம அம்மனுக்கு, பூசாரி, அபிஷேகம் செய்து இரு ஆடுகளைக் கொண்டுவந்து அவைகளுக்கு மஞ்சள் நீர் ஊற்றி நீராட்டினான். மஞ்சள் நீர் பட்டதும் இரு ஆடுகளும் தலையை உதறின.- உடனே பூசாரி, “அம்மன் உத்தரவாகிவிட்டது. அதற்கு அடையாளம் ஆடுகள் தலையை ஆட்டிவிட்டன” என்று சொல்லி இரு ஆடுகளையும் வெட்டிவிட்டான். தண்ணீர்பட்டால் உதறுவது இயற்கைதானே, அதற்காக ஆட்டை வெட்டலாமா?
அந்த நகரை ஆட்சிபுரிகின்ற மன்னவனுக்கு ஒரு மன்னனும், மந்திரிக்கு ஒரு மகனும் பிறந்தார்கள். மந்திரி மகனும், மன்னன் மகனும் கலைகளில் வல்லவர்கள் ஆனார்கள். மன்னன் மகனுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது.
மன்னன் மகனுக்கு மகுடாபிஷேகம் செய்தபின்னர், 12 ஆண்டுகளுக்கு மழை பெய்யவில்லை. மக்கள் உண்ணீரும் தண்ணீரும் இன்றித் தவித்தார்கள். ஒருநாள் மன்னவன் மகனும் மந்திரி மகனும் இரவு பத்து மணிக்கு அந்தக் காளிதேவியிடம் இக்குறையைச் சொல்லி வழிபாடு செய்யச் சென்றார்கள். நம்மைத் தண்டிக்க வருகிறார்களோ என்று அஞ்சிய பூசாரி காளிதேவிக்குப் பின்புறம் ஒளிந்து கொண்டான்.
மன்னவன் மகன், அம்பிகையை அஞ்சலி செய்து, “தேவி! கருணாம்பிகை! அகிலாண்டநாயகி! எனக்கு முடிசூட்டிய பின்னர் 12 ஆண்டுகளாக மழையில்லை. அம்மையே! மழை பொழியச் செய்வாய்” என்று உள்ளம் உருக வேண்டினான்.
காளிதேவி, “மன்னன் மகனே! என் சந்நிதியில் நரபலி தந்தால் மழை பொழியும்” என்று அசரீரியாகக் கூறினாள்.
இதையறிந்த மன்னன் மந்திரியுடன் ஓடோடி வந்தான், மந்திரியைப் பார்த்து, “ தோழனே மக்களுக்கு நான் தந்தை. மக்கள் பொருட்டு என் உயிரைத் தியாகம் செய்ய வேண்டும். என்னைப் பலியிடு. நீ அரசாட்சியை ஏற்று நாட்டை ஆள் என்றான். மந்திரியோவெனில், “அரசே!
உடுக்கை இழந்தவன் கை போல
ஆங்கன் இடுக்கண் களைவதாம் நட்பு

தங்களின் நண்பனாகிய நான் தங்களை பலியிடுவதா? வேண்டாம். என்னைப் பலியிடுங்கள். மந்திரி பதவிக்குப் பலர் ஆலாப் பறக்கிறார்கள். யாரையாவது அமைசராக வைத்து அரசு புரியுங்கள்” என்றான்.
“என்னைப் பலியிடு”, “என்னைப் பலியிடு” – என்று இருவரும் வாதிட்டனர்.
அரசன், அன்பனே எனக்கும் உனக்கும் வாக்குவாதம் வேண்டாம்; அம்பிகையைக் கேட்போம். அம்பிகை யாரைக் கேட்கின்றாளோ, அவ்வாறே செய்வோம்” என்று கூறினான்.
தேவி! உன் சந்நிதியில் அடியேன் பலியாக வேண்டுமா? அல்லது அமைச்சர் பலியாக வேண்டுமா? என்று வினாவினான்.
தேவி சொன்னாள்: “மன்னவனே! நீயும் பலியாக வேண்டாம், மந்திரியும் பலியாக வேண்டாம். என் பின்னே ஒளிந்திருக்கும் பூசாரிதான் பலியாக வேண்டும். அதுவும் நீயும் மந்திரியும் பூசாரியை என் சந்நிதி முன்னே நிறுத்தி, அவனுக்கு முன்னும் பின்னுமாக நின்று, ஏக காலத்தில், உங்கள் மகன்கள் இருவரும் பூசாரியின் தலையை வெட்டித்தள்ள வேண்டும்”.
பூசாரி இதைக் கேட்டு நடுநடுங்கினான். வெளியே வந்தான். அவனுடைய கண்கள் சிவந்தன. மீசை படபடத்தது. புருவம் நெளிந்தது. “காளியாயீ! நீ ஒரு தெய்வமா! உனக்கு 55 ஆண்டுகளாகப் பூசை செய்தேனே! என்னையா பலியிடச் சொல்கின்றாய்? உனக்கு கருணையில்லையா? 84 நூறாயிர யோனி பேதங்கட்கும் நீ தாயல்லவா? நான் உனக்கு சேயல்லவா? கொடியவளே! உனக்கு இரக்கம் இல்லையா? பலகாலம் தொண்டு செய்த என்னையே பலிவாங்க முற்பட்டனையா? உன் மனம் இரும்பா? கல்லா? இரக்கமில்லாத அரக்கியே! நீ ஒரு தெய்வமா?” என்று கூறி வசைமாறி பொழிந்தான்.
காளிதேவி சொன்னாள்: “பூசாரி! பதட்டம் அடையாதே. தானத்தில் நிதானம் பெரியது. தயிரன்னம் உண்டு உனக்குக் காய்ச்சல் வந்தால் கோனாரின் வீட்டில் வாழும் ஆடுகள் என்ன பாவம் செய்தன? எண்பத்துநான்கு நூறாயிரம் யோனி பேதங்கட்கும் நான் தாய் என்று இன்றுதான் உணர்ந்தனையா? நீ பல ஆண்டுகளுக்கு முன் வெட்டிய ஆடுகட்கும் நான் தாயல்லவா? வாயில்லாத குற்றமற்ற ஆடுகளைக் கதறக் கதற அன்று நீ பலியிட்டனையே! நீ பலியிட்ட இரண்டு ஆடுகளும் மன்னவன் மகனாகவும், மந்திரி மகனாகவும் பிறந்து வந்திருக்கின்றனர்.

Allahabad: Devotees immerse goddess Durga idol on the last day of puja festival in a pond near the confluence the Ganga, Yamuna, and Saraswati on Friday in Allahabad. PTI Photo (PTI10_23_2015_000199A)
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் – தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும் – என்பது பெரியோர் வாக்கு. அவ்வினைக்கு இவ்வினை” – என்றாள்.
பூசாரி குனிந்து நின்றான். மன்னவன் மகன் வாளும் மந்திரி மகன் வாளும் பூசாரியின் தலையை ஏக காலத்தில் சோதித்தன. அம்பிகை காட்சிதந்தாள். மன்னனே! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் என்றாள்.
மன்னன், “தாயே! இந்த பூசாரி குற்ரத்தை உணர்ந்துகொண்டான். மன்னிப்பது உன் இயல்பு. தேவி! இவனை மன்னித்து உயிர்ப்பிச்சை கொடு என்றான்.பின்னர் மழை பெய்து, மக்கள் சுகமடைய அருள்புரிவயாக” என்றான்.
அம்பிகை அருள் புரிந்தாள். பூசாரி எழுந்தான். அதுமுதல் ஆலயத்தில் பலியிடும் கொடுமையை அகற்றினான். நன்கு மழை பொழிந்தது. நாடு செழித்தது. ஆதலால் செய்தவினை செய்தவனை வந்தடையும்.
“அவ்வினைக்கு இவ்வினை” என உணர்க. யாருக்கும் எப்போதும் இடர் புரியாது, நலமே புரிந்து இறையறும் பெறுக.

(கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1984 ஆம் ஆண்டில் எழுதியது)
-சுபம்-
You must be logged in to post a comment.