மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 20 (Post No.3562)

Written by S NAGARAJAN

 

Date: 21 January 2017

 

Time uploaded in London:-  7-17 am

 

 

Post No.3562

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 20

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 5

 

by ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்

  • கல்கி என்ற புனைபெயரில் நாம் அறிந்த ரா.கிருஷ்ணமூர்த்தி காந்தி ஆசிரமத்திலிருந்து எழுதிய ஒரு கட்டுரை குமரி மலரில் வெளியிடப்பட்டிருக்கிறது. எனது குருநாதர் பாரதியார்

பாரதியாரை நான் கண்ணால் பார்த்ததில்லை. ஆனால் அவரையே எனது பரம குருநாதராய்க் கொண்டிருக்கிறேன். எனக்கு தேசபக்தி ஊட்டியவ்ர் பாரதியார்.தாய்மொழிப் பற்றை அருளியவர் பாரதியார்.கவிதையின்பம் துய்க்கும் ஆற்றலை அளித்தவர் பாரதியார். ரஸிகர்களின் நட்பாகிய பெரும் பாக்கியத்தைத் தந்தவர் பாரதியார். என்னைப் போன்ற பரமானந்த சிஷ்யர்கள் தற்போது பாரதியாருக்குத் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்காக இருக்கின்றனர்.

 

     வங்காளியும் மகாராஷ்டிரமும், மலையாளமும், குஜராத்தியும் இந்நாளில் அடைந்திருக்கும் முன்னேற்றத்தையும், தமிழ் மொழியின் தற்கால ஈனஸ்திதியையும் எண்ணும்போது பெரும் மனச்சோர்வு அடைகிறேன். ஆனால் பாரதியாரின் ஒரு பாட்டின் ஓர் அடியைப் பாடியதும் இந்த மனச்சோர்வெல்லாம் பறந்து போகின்றது. நமது ஜாதி இன்னும் பெரிய காரியங்களைச் செய்யப் போகிறது என்னும் நம்பிக்கை உடனே பிறக்கிறது.

 

     தமிழ் சமூகத்தில் இன்னும் பாரதியார் தமக்குரிய ஸ்தானத்தை அடையவில்லை. யென்றே தோன்றுகிறது. பாடகர்களும், நாடகக்காரர்களும், பாரதியாரின் பாட்டைப் பாடாமல் வேறு ஏதோ ஹிந்துஸ்தானி மெட்டிலுள்ள அர்த்தமில்லாத அசட்டுப் பாடல்களையே தேசீய கீதமென்று பாடி வருகிறார்கள்.அவைகளைக் கேட்டு ரஸிகர்களும் ஆரவாரிக்கின்றார்கள். இந்தப் பாடல்கள் கேவலம் பிணங்களைப் போல உயிரற்று, கவிதையற்று வெறும் சொல்லடுக்குகளாயிருப்பதைக் காண்கிறேன். என்று இந்த போலி தேசீயக் கீதங்கள் மறைந்து பாரதியாரின் பாடல்கள் பாடப்படுமோ அந்த நாளுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.

 

  • ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி)

    காந்தி ஆசிரமம்

‘சுதந்திரச் சங்கு’ 9-9-1931 

39)  அடுத்து இலக்கியத் தலைவன் பாரதியார் என்ற தலைப்பில் சுதந்திரச் சங்கு இதழில் சங்கு சுப்பிரமணியன் எழுதிய க்ட்டுரை வெளியாகியுள்ளது.

  இலக்கியத் தலைவன் பாரதியார்

 

     எனது குருநாதர் பாரதியாரின் திரு உடலைத் தரிசித்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் அவரது பாடல்களை நான் எண்ணாத நாட்களில்லை. யான் எழுதும் வரிகளிலெல்லாம், சொல்லும் மொழிகளிலெல்லாம் அவரது சொற்கள் என்னையறியாமலே கலந்து வருகின்றவாதலால் அவர் என்னோடு இன்றும் இருப்பதாகவே நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

 

   இன்ப நாட்களில் பெருமிதத்தை ஊட்டுவதாயும், துன்ப நினைவுகளேற்படும்போது அவைகளை மாற்றும் மருந்தாகவும் இருப்பது பாரதியாரின் கவிதைகள். அவரது  காதற் பாட்டுகளையும், ‘காணி நிலம் வேண்டும்’ என்ப்ன போன்ற பாக்களையும் பாடும் போது இன்பம் பெருகுகின்றது.

     ‘தாய்த் திருநாடெனில்’ ‘இனிக் கையை விரியோம்’ என்பன போன்ற அவரது வரிகளை வாய்விட்டுக் கதறிக் கூறும்போது நம் தேசபக்தி அதிகமாகின்றது.

 

      இன்னொரு அனுபவத்தைச் சொல்லுகிறேன். அன்று கண்ணன் பிறந்த தினம் – நான் அலிபுறம் சிறையில் இருந்தேன் – என் மனத்தை அரிவாளால் பிளப்பது போன்ற ஓர் செய்தியை அன்று காலை எனக்கு வந்த கடிதத்தில் பார்த்தேன். என் மனமே மனத்தைத் தின்னத் தொடங்கிற்று. – அந்தச் சிறையின் மூலை, முடுக்குகளின் தனிமையும், அறையிலுள்ள நண்பர்களின் கூட்டமும் எனக்கு ஆறுதலளிக்கவில்லை.

   அச்சமயத்தில் ஓர் அன்பர் என்னை அணுகினார். ‘சங்கு ஸார்! இன்று ஜன்மாஷ்டமியாச்சே! கண்ணன் பாட்டு பாடலாகாதா?’ என்றார் அவர். அவருக்காக அன்பர்கள்  மத்தியில் உட்கார்ந்து கொண்டு பாடினேன். பாடப்பாட என்னைக் கவர்ந்திருந்த துயர்ப்படலம் மறைந்தது. பாரதியாரின் பாடல்கள் துயருற்ற தமிழருக்கு ஆறுதலளிக்கும் வண்மையுடையன என்பதை அன்று நான் உணர்ந்தேன்.

 

   தமிழ் மொழிக்குப் புதிய நடையையும், புதிய இலக்கியங்களையும் சிருஷ்டித்துத் தருவதற்கு அநேக இளைஞர்கள் முயன்று வருகிறார்கள். இவ்வளவு பேருக்கும் வழிகாட்டிய குருநாதன் பாரதியார் தான். இவ்வாறாக பாரதியார் எங்களுக்கு இலக்கியத் தலைவனாக இருந்து வருகிறார்.

 

   அவரது வாழ்க்கையினின்று என்னைப் போன்றவர்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. ‘எத்தகைய துன்பங்களுற்றாலும், பட்டினி கிடந்தாலும் தேசப் பணியையும் தாய்மொழித் தொண்டையும் மறக்கலாகாது’ என்பதே அந்தப் படிப்பினை.

 

                    கம்பனைப் பெற்ற நாட்டில்

                      கவிமணம் ஓயு நாளில்

                    வம்பரின் மந்தை தன்னில்

                       வளர்த்திட தேசபக்தி

                    உம்பர் மா உலகதாக

                       உயர்ந்திடத் தமிழகத்தை

                    அம்புவி வந்த வீரர்

                        அருங்கவி பாரதியே!

                         வாழ்க பாரதியார்!

                      -சங்கு சுப்பிரமணியன்

                     ‘சுதந்திரச் சங்கு’

                       9-9-1931

குமரி மலர் பத்திரிகையின் பழைய இதழ்கள் பாரதியார் பற்றிய ஒரு கலைக்களஞ்சியம். இன்னும் சில கட்டுரைகளைப் பார்ப்போம்

                 – தொடரும்

     *****