கிலுகிலுப்பை ஆடிய குரங்கு; சங்கப் புலவர் கண்ட காட்சி (Post No.3811)

Written by London swaminathan

 

Date: 12 APRIL 2017

 

Time uploaded in London:- 8-19 am

 

Post No. 3811

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

குரங்கு பற்றி தமிழ் இலக்கியத்திலுள்ள அதிசயச் செய்திகளை முன்னொரு கட்டுரையில் தந்தேன். இதோ மேலும் சில செய்திகள்:–

 

ஒரு குரங்கு கிலுகிலுப்பை ஆடும் காட்சியே அரிய காட்சி; அதுவும் முத்துக்களைக் கொண்டு கிலுகிலுப்பை ஆடிய பணக்கார குரங்கைப் பார்த்த, சங்க காலப் புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், சும்மா இருப்பாரா?

 

மகா அரன்ன மந்தி மடவோர்

நகா அரன்ன நளிநீர் முத்தம்

வாள்வாய்ருந்தின் வயிற்றகத்தடக்கித்

தோள்புற மறைக்கு நல்கூர் நுசுப்பி

னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற

கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலியாடு நம்

தத்து நீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்

 

சிறுபாணாற்றுப்படை 56-63

 

உப்பு வணிகர் வண்டியுடன் வந்த, அவருடைய பிள்ளைகளைப் போன்ற குரங்கு, வாள் போன்ற வாயையுடைய கிளிஞ்சலில் பற்கள் போன்ற (வெண்ணிறமுடைய) முத்துக்களை இட்டு மூடி, உப்பு வணிகர் பிள்ளைகளுடன் சேர்ந்து கிலுகிலுப்பை விளையாடும் கடற்கரைப் பட்டினமான கொற்கை.

 

உப்பு விற்கும் பெண்கள் இடையையும் ,தோள்புறத்தையும் மறைக்கும் கூந்தலையும் உடையவர் என்று பாட்டு வரிகள் சொல்கின்றன.

 

கொற்கை நகரில் முத்துக்கள் அவ்வளவு மலிவு! மேலும் அந்தக் காலத்தில் கிலுகிலுப்பை விளையாட்டு மிகவும் பிரபலம்; அதோடு, குரங்குகள் மக்கள் செய்யும் எதையும் திருப்பிச் செய்யும் அறிவுடையன என்ற செய்திகளும் இப்பாட்டு வரிகள் மூலம் கிடைக்கின்றன. குரங்கையும் தன் பிள்ளைகளுக்குச் சமமாக வளர்த்த உப்பு விற்கும் பெண்ணின் மனித நேயத்தையும் இப்பாட்டு புலப்படுத்தும். இவை எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழகத்தை நம்முன் காட்டும் சித்திரங்களாகும்.

 

 

நாம் எல்லாம் உயரமான கட்டிடத்தின் மீதேறி கீழே பார்த்தால் தலை சுற்றும்; அதுவும் அங்கு கைப்பிடியோ சுவரோ இல்லாவிட்டால் போகவே பயப்படுவோம். ஆனால் , வானளாவி நிற்கும் ஒரு மரத்தின் உச்சியில், ஒரு குரங்கு அதன் குட்டியுடன் தைரியமாக உட்கார்ந்த காட்சியைக் கண்டவுடன் அதை  நமக்கு சொற்கள் மூலம் வரைந்து காட்டுகிறார் அவ்வையார்-

 

உயர்கோட்டு மகவுடை மந்தி போல

அகன் உறத் தழீ இக் கேட்குநர்ப் பெறினே

குறுந்தொகை 29

இப்படிப் பல இயற்கைக் காட்சிகள் நிறைந்தது சங்க காலத் தமிழகம். நாம் அந்த இயற்கை வளத்தை இனிமேலாவது அழியாமல் காப்பாற்ற வேண்டும்.

xxx

 

My Old Article Monkeys

தமிழ் இலக்கியத்தில் குரங்கு பற்றிய அதிசயச் செய்திகள்

Post no 878 dated 1st March 2014