
Written by London swaminathan
Date: 19 September 2016
Time uploaded in London:9-19 AM
Post No.3168
Pictures are taken from various sources; thanks.
அஸ்வமேத யக்ஞம் பற்றிய அதிசயச் செய்திகள் – பகுதி 2
அஸ்வமேத யக்ஞத்தில், — ஓராண்டுக் காலம் பல நாடுகளுக்குச் சென்றுவந்த குதிரையைக் கழுத்தை நெறித்துக் கொன்றார்கள் — அந்தக் குதிரையுடன் மஹாராணி இரவு முழுவதும் கணவன் – மனைவி போல நெருங்கிப் படுத்திருக்க வேண்டும் — அப்பொழுது ஆபாச வசனங்களை மற்ற பெண்கள் சொல்ல வேண்டும் — என்று மட்டும் எழுதி அந்த யக்ஞத்தைக் கொச்சைப்படுத்தும் வெளிநாட்டுப் படை எடுப்பா ள ர்களும் அவர்களின் உள்நாட்டுத் திராவிட அடிவருடிகளும் அந்த யாகம் பற்றிய முழு விஷயத்தையும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் இது அவர்களுக்கும் புரியவில்லை; கேட்டால் நமக்கும் புரியாது. அவர்கள் ஆபாச வசனங்களை மட்டும் பரிமாறிக் கொள்ளவில்லை. பல விடுகதைகள், புதிர்களையும் பகிர்ந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல; அதில் ஒரு குஷ்ட ரோகியும் பங்கு பெற்றார். இதற்கெல்லாம் என்ன பொருள் என்று பார்க்கும்போது வியப்பாக இருக்கும்.
அஸ்வமேதத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குதிரை என்ன நிறத்தில் இருக்க வேண்டும் என்று சிரௌத சூத்திரங்கள் சொல்லுகின்றன. நெற்றியில் கருப்புப் பொட்டுடன் இருக்கும் வெள்ளைக் குதிரை அல்லது பழுப்பு குதிரையாக இருக்கலாம். ஆது ஆயிரம் பசு மாடுகளின் விலைக்குச் சமமானதக இருக்க வேண்டும் என்றும் சொல்லும். எல்லா குதிரைகளையும், பந்தயத்தில் தோற்கடிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் அது சூரியனின் அடையாளம். அதன் மீது இதுவரை யாரும் ஏறி சவாரி செய்திருக்கக்கூடாது!
இந்தக் குதிரைக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை எல்லாம் பார்த்தால் அப்படி ஒரு குதிரை கிடைக்குமா என்று வியப்போம்!
அஸ்வமேத யக்ஞம் நான்கு புரோகிதர்களால் செய்யப்படும். அரசனின் நான்கு மனைவியர் கூடவே இருக்க வேண்டும். குதிரையைத் தொடர்ந்து 400 வீரர்கள் செல்ல வேண்டும். அரசனுடன் எட்டு ஆலோசகர்கள் செல்ல வேண்டும் . எல்லாம் நான்கு என்ற எண்ணின் மடங்குகள்! ஏன்?
நான்கு புரோகிதர்களும் ஒரு வாரத்துக்கு முன் சந்திப்பர். அப்பொழுது அரசன் கொடுத்த அரிசிக் கஞ்சியை சாப்பிடுவர். அரசன் ஒவ்வொரு புரோகிதருக்கும் 1000 பசுமாடுகளும் தங்கமும் தருவான். அவர்கள் நால்வரும் அரசனின் கழுத்தில் தங்கச் சங்கிலி ஒன்றைக்கட்டுவர். குதிரையைத் தர்பைப் புல்லைக் கொண்டு சுத்தம் செய்வர்.
(இன்றும்கூட பிராமணர்கள் தர்பைப் புல்லை வைத்துதான் சுத்தப்படுத்துவார்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்படி பின்பற்றப்படும் ஒரு வழக்கம் வேறு எந்த கலாசாரத்திலும் இல்லை!).
அஸ்வமேதக் குதிரை ஓராண்டுக்கு அது இஷ்டப்பட்ட இடங்களுக்கு எல்லாம் செல்லும்’ அந்த நாடுகள் எல்லாம் அரசனின் தலைமையை ஏற்கவேண்டும். அல்லது அவனுடன் சண்டை போட்டு வெல்ல வேண்டும்.
அச்வமேதக் குதிரையைச் சுற்றி 100 குதிரைகள் செல்ல வேண்டும்.
அந்தப் பிரதான குதிரைக்கு ஒவ்வொரு ராணியும் 1000 முத்துகள் உடைய மாலையைச் சூட்டவேண்டும் என்று ஆபஸ்தம்ப ச்ரௌத சூத்திரம் சொல்லும். 4X1000 = 4000 முத்துக்கள்.

எனது கருத்து:
இந்த முத்துகளும், யாகத்தில் கொடுக்கப்பட்ட தங்கமும் எங்கிருந்து வந்தன? தென் கடல் முத்தாக இருந்தால் வேத காலத்திலேயே அவர்களுக்கு தென்னாட்டு உறவு இருந்தது தெரிகிறது. மற்ற நாட்டு முத்தானால் அவர்களுக்கு கடல் சார் வணிக உறவுகள் இருந்தது நிரூபணமாகிறது. சில பரதேசிகள், வேத கால இந்துக்களுக்கு “கடல்” என்றால் என்ன என்று தெரியாது என்று எழுதின!
யக்ஞத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பல எண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். குறிப்பிட்ட எண்ணுடைய காட்டு மிருகங்கள், வீட்டு மிருகங்கள், 13 ஆசீர்வாதங்கள், 13 கம்பங்கள் என்று பல எண்கள் குறிப்பிடப்படுகின்றன; ஏன் என்பதற்கு பல விளக்கங்கள் கூறப்பாட்டாலும் இது மிகவும் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட யாகம் என்பதை அறிய முடிகிறது.
எனது கருத்துகள்:
ரிக் வேதத்திலேயே மூன்று மண்டலங்களில் குறிப்பிடப்படும் அஸ்வமேதம், வேத கால மக்கள் கணிதத்தில் எவ்வளவு முன்னேறியவர்கள் என்பதைக் காட்டும் அது மட்டுமல்ல. தங்கமும் ஆயிரக்கணக்கான பசுமாடுகளும் அவர்களுடைய செல்வ வளத்தை காட்டும். நூற்றுக் கணக்கான குதிரைகள் பயன்படுதப்பட்டன. அரிசிச் சோறு பயன்படுத்தப்பட்டதால் அவர்கள் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதும் தெளிவாகிறது.
வேத காலத்தில் அரசர்கள் இருந்ததும் அவர்கள் பெரிய யாகங்களை நடத்தி தனது தலைமையை நிலைநாட்டியதும் இந்த யக்ஞத்தால் புலனாகிறது. ஆரியர்களை நாகரீகம் தெரியாத நாடோடிகள் என்று எழுதிய பரதேசிகளுக்கு இது செமை அடி கொடுக்கிறது. ஒரு பக்கம் அஸ்வமேதத்தைக் குறை கூறி எழுத பல உண்மைகளை மறைத்து அரைகுறை விஷயங்களை எழுதியதும் அம்பலம் ஏறுகிறது.
(பரதேசி = வெளிநாட்டான்)
உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இது போன்ற யக்ஞங்கள் இல்லை. ஆனால் இமயம் முதல் குமரி வரை இந்த யாக யக்ஞங்கள் இருந்ததை புறநானூற்றுப் பாடல்கள் உரைக்கின்றன. இவ்வளவு பெரிய பரப்பில் இவ்வளவு பெரிய நாகரீகம்–கலாசாரம் உலகில் வேறு எங்கும் இருந்ததில்லை. இன்றைய பரப்பளவில் பாரதம், உலகில் ஏழாவது பெரிய நாடு. 2000 ஆண்டுகளுக்கு முன்னரோ உலகில் நாம்தான் “ஒரே கலாசாரம்” உள்ள பெரிய நாடு.
யக்ஞத்தில் பயன்படுத்தப்பட்ட மிருகங்களை எண்ணிப் பார்த்தால் 609 என்று வருகிறது ஆனால் அவை அனைத்தும் இறுதியில் உயிருடன் விடப்பட்டன என்றே தெரிகிற து அகநானூற்றில் கூட, வெளியே உலாவரும் வேள்விக்குண்ட ஆமை ஒன்றை உவமையாகக் கூறுகின்றார் ஒரு புலவர்.
மேலும் இந்த யக்ஞம் பற்றி விரிவாகப் பேசும் சதபதப் பிராமணம் என்னும் நூலே உயிர்ப்பலியை எதிர்த்துப் பேசுகிறது. யாகத்தில் மாவினால் செய்யப்பட்ட உருவங்களைப் போடுவதே சிறந்தது என்றும் செப்புகிறது. அடையாளபூர்வமாக ஓரிரு மிருகங்கள் பலியிடப்பட்டதாகவும் ஊகிக்க முடிகிறது.
இன்று, மதத்தின் பெயரால் பலியிடப்படும் மனிதர்கள், ஒட்டகங்கள், ஆடுகள், மற்றும் உணவுக்காக (சாப்பிடுவதற்காக) நாள் தோறும் கொல்லப்படும் கோடிக்கணக்கான உயிரினங்களை ஒப்பிடுகையில் இது ஆற்று மணல் துகள் அளவே என்று சொல்லலாம். ஏனெனில் அஸ்வமேதம் செய்த அரசர்களின் எண்ணிக்கை இந்திய வரலாற்றில் மிகக்குறைவு. சுமார் 30 பேர்தான் . வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அதற்கும் குறைவே. ஆகையால் உலகில் யாரும் இது பற்றிப் பேச தார்மீக உரிமை இல்லை.

குஷ்டரோகி!
யாகத்தின் முடிவில் எல்லோரும் ஊர்வலமாகச் சென்று ஒரு குளத்தில் குளிக்க வேண்டும். வருண பகவானுக்காக ஒரு குஷ்ட ரோகியின் தலையில் வெண்ணை அபிஷேகம் செய்யப்படும். அந்த மனிதனை 1000 பசுக்கள் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டும் என்று சாங்க்யாயன ச்ரௌத சூத்திரம் சொல்லுகிறது.அவன் அத்ரி குலத்தைச் சேர்ந்த பிராமண குஷ்ட ரோகியாக இருக்க வேண்டும்! ஏனெனில் வருண பகவான் குஷ்டரோகி வடிவம் எடுக்கிறாராம். அவனை ஆற்றில், வாய்க்குள் நீர் புகும் வரை, முழ்க வைத்து பின்னர் வீட்டுக்கு அனுப்பிவிடுவர். பின்னர் அதே இடத்தில் எல்லோரும் குளித்துவிட்டு புத்தாடை அணிவர்.
சிறைக்கதிகளை அந்த இடத்திற்கு அழைத்து வந்து அவர்களையும் குளிக்கச் செய்து விடுதலை செய்துவிடுவார்கள்.
மஹாபாரதம், ராமாயணம் முதலிய சம்ஸ்கிருத நூல்களில் அஸ்வமேதம் பற்றிப் பல செய்திகள் உள்ளன.
வள்ளுவனும் மனுவும்
அவி சொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து ண்ணாமை நன்று (குறள் 259)
தீயில் அவியைப் போட்டு ஆயிரம் வேள்விகளைச் செய்வதைப் பார்க்கிலும் ஒன்றன் உயிரைக் கொன்று அதன் மாமிசத்தைத் தின்னாமல் இருப்பது மேலானது.
அவி= அரிசிச் சோறு+நெய்
இது மனு ஸ்மிருதியின் எதிரொலி; அவர் கூறியதையே வள்ளுவரும் வேறு விதமாகக் கூறுகிறார் (மனு. 5-53)
“ஓராண்டுக்கு ஒரு அஸ்வமேத யக்ஞம் வீதம் நூறு ஆண்டுகளுக்கு நூறு அஸ்வமேதம் செய்பவருக்கு என்ன பலன் கிடைக்குமோ அது ஒருவன் புலால் உணவைச் சாப்பிடாததால் கிடைக்கும்.”
100 அஸ்வமேதம் செய்தால் அவர்களுக்கு இந்திரன் பதவி கிடைக்கும் என்றும் நமது சாத்திரங்கள் சொல்லும். அந்த அளவுக்குப் பெருமை பொருந்தியது மாமிசம் உண்ணாமை!
Books used:-
The Asvamedha – by Subhas Kak; 2002
The Vedic horse sacrifice – by Stephen Fuchs
Xxx
My Old Article on the same subject
அகநானூறு ஆமை ரகசியம் அம்பலம்! (Post No.3028)
Research Article written by london swaminathan
Date: 2nd August 2016
Horse headed Seer: Rig Veda Mystery No.1; Research Paper written by London
No.1255; Dated 27th August 2014.
–சுபம்–
You must be logged in to post a comment.