கைலாசபதி அவர்களின் ‘பாரதி ஆய்வுகள்’ (Post No.5090)

Written by S NAGARAJAN

 

Date: 9 JUNE 2018

 

Time uploaded in London –  7-32 am  (British Summer Time)

 

Post No. 5090

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 50

க.கைலாசபதி அவர்களின் ‘பாரதி ஆய்வுகள்

 

ச.நாகராஜன்

 

1

பாரதி ஆர்வலர் .கைலாசபதி அவர்கள் பாரதியியலில் பெரும் ஆர்வம் கொண்டவர். பாரதியியல் என்ற வார்த்தையையே அவர் தான் முதலில் பயன்படுத்தினார் என்று பாரதி ஆய்வுகள் என்ற அவரது இந்த நூலை வெளியிட்ட பதிப்பகத்தார் குறிப்பிடுகின்றனர்.

 

இந்த நூலில் 1955 முதல் 1982 முடிய 27 வருடங்களில் அவர் எழுதிய 22 கட்டுரைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொன்றும் ஆய்வுக் கட்டுரையே.

 

.கைலாசபதி மறைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் (நவம்பர் 1982) சிதம்பர ரகுநாதன் அவர்கள் எழுதியபாரதிசில பார்வைகள் என்ற நூலுக்கு அளித்த மதிப்புரையில் அவர் பாரதியின் வாழ்க்கையையும் உலக நோக்கையும் முழுமையான் ஆய்வுக்குரியனவாகக் கருதிச் செயல்பட்டு வந்திருப்பவர்கள் சிலரே என்று குறிப்பிடுகிறார்.

உண்மை.

 

 

பாரதி நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில் பாரதி  ஆய்வுகள் என்ற ஒரு நூலை எழுதத் திட்டமிட்டிருந்த கைலாசபதி அதைத் தொடங்காமலேயே மறைந்து விட்டார்அவரது கட்டுரைகளைத் தொகுத்து அவர் மனைவி சர்வமங்களம் கைலாசபதி இந்த நூலை வெளியிட்டுள்ளார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை முதல் பதிப்பை மார்ச் 1984-லிலும் இரண்டாம் பதிப்பை அக்டோபர் 1987-லும் வெளியிட்டுள்ளது.292 பக்கங்கள் கொண்டது இந்நூல்.

 

 

2

இருபத்தி இரண்டு கட்டுரைகளின் தலைப்பையும் பார்த்தாலேயே ஆய்வுக் களத்தின் அகலமும் நீளமும் ஆழமும் தெரிய வரும்.

 

கட்டுரைகளின் தலைப்புகள் வருமாறு:

  • பாரதியார்பழமையும் புதுமையும் 2) பாரதியும் யுகமாற்றமும் 3) சிந்துக்குத் தந்தை 4) பாரதியும் சுந்தரம்பிள்ளையும் 5) பாரதியும் மேனாட்டுக் கவிஞரும் 6) பாரதி வகுத்த தனிப்பாதை 7) பாரதிக்கு முன் … 8) பாரதியும் வேதமரபும் 9) பாரதியாரின் கண்ணன் பாட்டும் 10) பாரதி நூல்களும் பாட பேத ஆராய்ச்சியும்சில குறிப்புகள் 11) பாரதி நூற்றாண்டை நோக்கிசெய்ய வேண்டியவைசெய்யக் கூடியவை 12) பாரதி ஆய்வுகள்வளர்ச்சியும் வக்கிரங்களும் 13) பாரதி நூல் பதிப்புகள் 14) பாரதியார் கவிதையும் தமிழ்ப் புலமையும் 15) பாரதியின் சமகாலத்தவரும் பாரதி பரம்பரையினரும் 16) இலங்கை கண்ட பாரதி 17) ஈழத்துத் தமிழ்க் கவிதையில் பாரதியின் தாக்கம் (சில குறிப்புகள்) 18) சிறு சஞ்சிகைகளில் பாரதி ஆய்வுகள் 19) பாரதியின் புரட்சி 20)முற்போக்காளரின் பாரதி ஆய்வுகள் 21) பாரதியியலுக்கு ஒரு பங்களிப்பு 22) பாரதி கண்ட இயக்கவியல்

 

 

3

புத்தகம் முழுவதும் ஏராளமான ஆய்வுக் கருத்துக்களால் நிரம்பி இருப்பதால் புத்தகத்தை வாங்கிப் படிப்பதே சாலச் சிறந்தது.

 

என்றாலும் நூலாசிரியரின் சில முக்கியக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

 

 

  • முதல் கட்டுரை: பாரதியின் கவிதா வளர்ச்சியை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார் கைலாசபதி. 1) தனி மனித நாட்டத்தினால் பாடப்பட்ட பாடல்கள் 2) பாரதி நெஞ்சிலே இருந்த பழமைபுதுமை போராட்டம் காரணமாக உருவான கவிதைகள். பழமை கனிந்த மனோநிலை ஏற்பட்ட காலத்தில் இந்த இரண்டாம் காலப் பகுதி முடிவடைகிறது. 3) வேதாந்தம் நன்கு முகிழ்ந்த வேதாந்த காலப் பகுதி.

 

  • மூன்றாம் கட்டுரை: இது பாரதியின் கவிதை வளத்தை அலசுகிறது!

“நவநவமான தத்துவத்தை எல்லாம் சொல்லில் வடித்தவன் பாரதி. இசை வளத்தை அளவுடன் நிறுத்திக் கொண்டு பொருள் வளமும்  சேர்த்தான்; முன்னோரை மிஞ்சினான்.

உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் உள்ள நுண்ணிய பிணைப்பையறிந்து கொள்ளப் பாரதியை விட வேறு சிறந்த உதாரணக் கவிஞன் வேண்டுமோ?” என்கிறார் நூலாசிரியர்.

 

  • ஐந்தாம் கட்டுரை : இதில் ஆசிரியர் தரும் கருத்துக்கள் : “குடியாட்சி, ஆண் பெண் சமத்துவம், விடுதலை ஆகிய பண்புகளை விட்மனிடம் கண்டு போற்றியுள்ளார் பாரதியார். விட்மனுக்கும் பாரதிக்கும் “உள்ளக் கலப்பு” ஏற்படுவதற்குக் காரணங்கள் பல…”

பாரதியாரின் காதல் கவிதைகள் சிலவற்றிலும் ஆங்காங்கே ஷெல்லியின் சாயலைக் காணமுடிகிறது.

04) எட்டாம் கட்டுரை : இந்தியத் தத்துவ ஞானமரபின் பல்வேறு கூறுகளைப் பற்றிய அறிவும் ஈடுபாடும் பாரதியாருக்கு நிரம்ப இருந்தது என்கிறார் கைலாசபதி இந்தக் கட்டுரையில்.

 

 

05) பத்தாம் கட்டுரை: “பாரதியாரின் கவிதைகளிலே பாடபேதங்கள் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று அவர் வாழ்நாளிலும் அவர் மறைந்த பின்னும் அவரது நூல்கள் சில வெளியிடப்பட்ட விதமாகும். அவர் இறந்த பின்னரே அவரது கவிதைகள் பெரு நூல்களாகத் தொகுக்கப் பெற்றன. இதனால் கவிஞரே அவற்றைச் சீராக வெளியிடும் வாய்ப்பிருக்கவில்லை.” என்று கூறும் ஆசிரியர்  பாரதியாரின் பாடல்களின் சுத்தமான வடிவம் நமக்குத் தெரிய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

06) பன்னிரெண்டாம் கட்டுரை : இதில் சீனி விசுவநாதன் தொகுத்த மகாகவி பாரதி நூற்பெயர்க் கோவை (ஏப்ரல் 1981) நூலைக் குறிப்பிட்டு பாராட்டுகிறார் நூலாசிரியர். 370 நூல்கள், 145 எழுத்தாளர்கள்,162 பதிப்பாளர்கள் சம்பந்தமான தகவல்களைத் தருகிறது சீனி விசுவநாதனின் தொகுப்பு நூல்.

 

இப்படி நல்லா ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகள் வளர்கையில் வக்கிர புத்தி உடையவர்களும் பாரதியை விட்டு விடவில்லை.

 

எடுத்துக்காட்டாக ஒரு உதாரணத்தை நம் முன் வைக்கிறார் கைலாசபதி.

 

“நடுநிலையாய்வு, விஞ்ஞானப் பார்வை என்பன பாரதியாராய்ச்சிகளை வளப்படுத்தும் வேளையில் வக்கிர நோக்குடன் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது. ‘பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே’ (மே 1981) என்னும் நூல், இதன் ஆசிரியர் வெற்றிமணி…. இந்நூல் காலங்கடந்த – பாமரத்தனமான – பார்ப்பனீய எதிர்ப்புடன் எழுதப்பட்டிருக்கின்றது.”

 

4

நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளுமே பாரதி ஆர்வலர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது உறுதி. பல்வேறு நோக்கங்களுடன் பல்வேறு விதமாக பாரதியை ஆய்வு செய்தவர்கள் – செய்பவர்களை – சுட்டிக் காட்டுகின்ற கட்டுரைகளும், பாரதி பாடல்களில் உள்ள பாட பேதங்களை நுணுகி ஆராய்ந்து நல்ல ஒரு பதிப்பு வெளியிடப்பட வேண்டும் என்ற நூலாசிரியரின் நோக்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகளும் பாராட்டப்பட வேண்டியவை.

 

பாரதி ஆர்வலர்களின் பாரதி இயல் நூலகத் தொகுப்பில் இருக்க வேண்டிய நூல் இது.

***