புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லை எனில் புலிக்கு இரையாவதே சிறந்தது! (Post No.4912)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 14 April 2018

 

Time uploaded in London –  6-10 AM  (British Summer Time)

 

Post No. 4912

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கொங்கு மண்டலப் பெருமை

 

புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லை எனில் புலிக்கு இரையாவதே சிறந்தது!

 

ச.நாகராஜன்

 

தமிழக மன்னர்களும் பிரபுக்களும் புலவர்களுக்குத் தகுந்த பரிசுகளைக் கொடுப்பதைப் பெருமையாகவும் கடமையாகவும் கருதியவர்கள்.

கொங்கு மண்டல சதகத்தில் வரும் பல பாடல்களை ஏற்கனவே பார்த்துள்ளோம். இன்னும் ஒரு பாடலைப் பார்ப்போம்:

 

இப்போதுள்ள கோபிச்செட்டி பாளையம் தாலுகா பழைய காலத்தில் காஞ்சிக்கோயில் நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. இதில் அடங்கியிருந்த ஊரான பாரியூரில் செட்டி பிள்ளையப்பன் என்ற பெரிய கொடையாளி ஒருவர் இருந்தார். அவர் மீது கவிபாடிக் கொண்டு புலவர் ஒருவர் வந்தார். கொடுத்துக் கொடுத்துக் கையில் ஒன்றுமில்லாமல் இளைத்திருந்த செட்டி பிள்ளையப்பன் சற்று வருத்தத்துடன் சிந்திக்கலானார்.

உலகத்தில் ஒருவனிடம் சென்று எனக்கு இல்லை என்று கேட்பது சிறுமை. கேட்போனுக்கு இல்லை என்று சொல்வதோ சிறுமையிலும் சிறுமை. அதிலும் நம் குலத்தைப் புகழ்ந்து கவி பாட வந்த புலவருக்கு இல்லை என்று சொல்வது நமக்கு தீரா வசையைத் தேடித் தரும். ஆகவே அருகில் உள்ள புலித்தூறிற் புகுந்து அங்கிருக்கும் புலிக்கு உணவாவதே சாலச் சிறந்தது.

 

இப்படி எண்ணிய செட்டி பிள்ளையப்பன் புலி உறையும் இடத்திற்குச் செல்லலானார்.

அப்போது அங்கு கொள்ளையடித்த பொற்குவியல்களை பங்கு போட்டுக் கொண்டிருந்த திருடர்கள் அவரைப் பார்த்து பயந்து அவற்றை அப்படியே விட்டு விட்டு ஓடினர்.

இதனால் மகிழ்ந்த செட்டி பிள்ளையப்பன் அவற்றை எடுத்து வந்து புலவருக்கு உரிய முறையில் பரிசுகளை வழங்கினார்.

 

 

கொங்கு மண்டல சதகம் 99வது பாடல் செட்டி பிள்ளையப்பனைப் போற்றுகிறது.

 

பாடல் வருமாறு:

கவியின் மெலிந்த புகல்கவிக் கீயக் கயிலின்மையால்

புலியி னுழைபுக்குக் கள்வர்கள் பங்குப் பொருட்டிரளை

மலிய வெடுத்தப் புலவனுக் கீந்த வடகரையான்

வலியன் கனவாளன் செட்டிபிள் ளான்கொங்கு மண்டலமே

 

இதன் பொருள் : வறுமையால் தளர்வுற்ற காலத்தில், கூறிய பாட்டைக் கேட்டு அவருக்குப் பொருள் கொடுக்க கையில் ஒன்றும் இல்லாததால், புலி வாழுமிடத்தில் புகவே, அங்கு திருடர்கள் பங்கிட்டுக் கொண்டிருந்த பொற்குவியலை அடைந்து கவி பாடிய புலவனுக்குக் கொடுத்த வடகரை நாட்டினனான செட்டி பிள்ளான் என்பவனும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே!

 

 

ஒரு சுவையான செய்தி, பாரியூர் ஸ்ரீ அமரவிடங்கப் பெருமானார் சிவாலயத்தில் ஒரு கற்சாசனம் உள்ளது. அதில் செட்டி பிள்ளையப்பன் நில தானம் செய்த செய்தி உள்ளது.

 

“ஸ்வஸ்தி ஸ்ரீ…..வீர வல்லாள தேவர் .. ராஜ்ஜியம் பண்ணியருளா நின்ற   … வத்ஸரத்து ஆவணி மாத முதல் காஞ்சிக் கூவல்நாட்டில் பாரியூர் வெள்ளாளன்களில் செட்டி பிள்ளையப்பனேன் உடையார் அமரவிடங்கப் பெருமாள் திருப்பள்ளிஎழுச்சிக்கு….”

 

இந்த அரிய சம்ப்வத்தை அமரவிடங்கர் குறவஞ்சி என்னும் நூ பாடலாக இப்படித் தருகிறது:

 

 

இட்டமான கவிசொல்லும் பாவலர்க்

கில்லையென்று சொலற்கஞ்சிக் காட்டில்வாழ்

துட்ட வன்புலித்தூறிற் புகுந்தநற்

றூயவன் கனவாள குலத்தினன்

செட்டி பிள்ளையப் பன்றினந் தொண்டுசெல்

தேவிமாமலை மாதொரு பங்குள

கட்டு செஞ்சடையமர விடங்கனார்

கதித்துவாழ் பாரியூ ரெங்களூரே

 

தமிழ்ப் புலவர்களை மதித்து வாழ்ந்த நாடு தமிழ் நாடு; அதில் கொங்கு மண்டலத்தின் சிறப்பை இந்தப் பாடல் மூலம் அறிந்து மகிழ்கிறோம்.

 

***

 

பயறு மிளகானது : சிவபிரான் திருவிளையாடல்! (Post No.4333)

Written by S.NAGARAJAN

 

 

Date: 25 October 2017

 

Time uploaded in London- 6-59 am

 

 

Post No. 4333

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

தமிழின்பம்

 

பயறு மிளகானது : சிவபிரான் திருவிளையாடல்!

 

ச.நாகராஜன்

 

 

கொங்கு மண்டல சதகத்தில் உள்ள சில பாடல்களைப் பற்றி முந்தைய கட்டுரைகளில் கண்டோம்.

இன்னும் ஒரு பாடல் இதோ:

இது பயறு மிளகான கதை பற்றியது!

 

அணித்திகழ் சேர்தென் கரைநாட்டி லப்பிர மேயருக்கு

பணித்தொழி லான தளர்ச்சியி னால்வெறுப் பாயொர்செட்டி

எணித்தொலை யாத மிளகைப் பயறென வெம்பெருமான்

மணிப்பய றாக்கின தும்புகழ் சேர்கொங்கு மண்டலமே

 

பொருள்: தென்கரை நாட்டில் எழுந்தருளிய அப்பிரமேயருக்கு, மிளகைப் பயறு என ஒரு வணிகன் பொய் சொல்ல, அந்த

மிளகு அப்படியே பயறு ஆனதும் கொங்கு மண்டலம் என்பதாம்.

 

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகத்தில்     84வது பாடலாக அமைந்துள்ளது இது.

 

மலையாளத்துக் கொச்சியில் மிளகு விற்று வரும் ஒரு வணிகன் வறுமையால் நலிவுற்றான். சரி, இனி வெளியூர் சென்று வர்த்தகம் செய்ய வேண்டியது தான் என்று தீர்மானித்தான். காளைகளின் மீது மிளகுப் பொதிகளை ஏற்றிக் கொண்டு ஆம்பிராவதி தீரமான தென் கரை நாட்டில் இடைஞானியாரால் பூஜிக்கப்பட்ட சிவபிரான் எழுந்தருளியுள்ள வனத்தின் வந்து இறங்கினான்.

ஒரு கிழப்பிராம்மணனாக அந்தக் கோவிலில் குடி கொண்டிருந்த கடவுள் எதிரில் வந்தார்.

 

“கொஞ்சம் மிளகு வேண்டும் என்று கேட்டார் அவர்.

வணிகன், “இந்தப் பொதிகள் பயறு என்று பதிலிறுத்தான்.

“அப்படியே ஆகுக! என்று கூறி விட்டு அவர் போய் விட்டார்.

வணிகன் மூட்டைகளைக் காளைகளின் மீது ஏற்றி திருவாரூர் சென்றான். மிளகை விலை பேசினான்.

தொகையைப் பெற்றுக் கொண்டு மிளகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டினான்.

 

 

எல்லாம் பயறாகவே இருந்தது.

அதை வாங்கியோர், இவன் புரட்டன், ஏமாற்றி விட்டான் என்று  மிகுந்த கோபம் கொண்டனர்.

அப்போது முன் வந்த கிழ பிராம்மணர் அங்கு தோன்றினார்.

“வணிகரே! தென்கரை நாட்டில் நான் கொஞ்சம் மிளகு கேட்ட பொது இவை பயறு என்றீரே என்றார்.

வணிகன் திகைத்தான்.

 

 அவர் சிவபிரானே என்று தெளிந்தான்.

அவரை வணங்கினான். “அடிகளே! மிளகைப் பயறாகச் செய்த நீரே மீண்டும் பயறை மிளகாகச் செய்து அருளும் என்று வேண்டினான்.

 

“தென்கரை நாட்டில் இடைச் சிறுவனிட்ட பந்தல் எமது கோயில்.அதனைக் கற்பணி செய்க என்று கூறி விட்டு  அவர் மறைந்தார்.

 

அங்கு கீழே கிடந்த பயறு எல்லாம் மீண்டும் மிளகாயின.

அப்பிரமேயர் தல புராணம் இந்த வரலாறைக் கூறுகின்ற பாடல் இது:

அவ்வி டத்திலுறை யும்பதத்துமுன தருகுவந்து மிள காசையாற்

செவ்வி பெற்றமெய் வருந்தி நின்றது பொறாது போனகுறி தேறுவாய்

பவ்வ மற்றநெறி வணிகனே நமது பணிசெ யென்றுகுவி பயறெலாம்

வெவ்வி யற்கைபெறு  மிளகு செய்தருளி  யேகினார் பரம வெளியிலே    (அப்பிரமேயர் தல புராணம்)

 

 

அற்புதமான திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. கொங்கு மண்டலத்தில் ஏராளமான அற்புதமான கோவில்கள் உள்ளன.

அதில் பிரமிக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன.

அந்தத் திருப்பணிகள் பற்றியும் கூட கொங்கு மண்டல சதகம் விரித்துரைக்கிறது!

***

தமிழுக்காகத் தாலியைத் ஈந்த தமிழன்! (Post No.3446)

Written by S NAGARAJAN

 

Date: 14 December 2016

 

Time uploaded in London:- 5-44 am

 

Post No.3446

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

கொங்கு மண்டலச் சிறப்பு

தமிழுக்காகத் தாலியைத் ஈந்த கொங்கு நாட்டுத் தமிழன்!

 

by ச.நாகராஜன்

 

கொங்கு நாட்டுத் தமிழர், தமிழ் வளர்ச்சிக்காக எத்தனையோ அரிய செயல்களைச் செய்துள்ளனர். அவற்றில் ஒரு உண்மையான சம்பவம் இது!

 

மதுரையை திருமலை நாயக்க மன்னன் (கி.பி 1623 முதல் 1699 முடிய) அரசாண்ட காலம் அது.

 

அவரது அரசில் தளவாயாக இருந்தவர் ராமசுப்பய்யர் என்பவர். கண்டிப்புக்குப் பெயர் பெற்றவர். மிகுந்த பலசாலி. புத்தி கூரமையுள்ளவர்.

 

அரசாங்கத்துக்கு வரியைச் செலுத்தத் தவறிய பாளையகாரர்களின் காணியாளர்களை அவர் சிறைப் பிடித்து சங்ககிரி துர்க்கக் கோட்டையில் அடைத்தார்.

 

ஆணூருக்குச் சென்ற தமிழ்ப் புலவர் ஒருவர் சம்பந்தச் சர்க்கரை மன்றாடியைப் பார்க்க விழைந்தார். ஆனால் அவர் சங்ககிரி துர்க்கத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பதைக் கேட்டு அங்கு சென்றார்.

 

 

வாயில் காவலரிடம் நயமாகப் பேசித் தான் புலவர் என்பதைத் தெரிவித்து சிறைக்குள் சென்றார். அங்கோ உயர்ந்த பதவியில் இருந்த பலரும் இருந்தனர்.

கவிபாடி வந்த புலவரைப் பார்த்த சம்பந்த சர்க்கரை மன்றாடியார் புன்முறுவலுடன் அவரை வரவேற்றார்.

“ஐயா, புலவரே! பாடல் பாடிப் பரிசு பெறுகின்ற இடமா, இது:” என்று கூறிச் சிரித்தார்.

உடனே புலவர்,

 

எவரை என்று நாம் அறிவோம்; இரப்பவனோ இடம் அறியான்   

        இரவில் வானம்

 

கவரு மதி ஒருபுறத்தே நிலவெரிக்கும் பான்மைதனைக் 

        கண்டிலீரோ

 

அவரை பதமாகு முனம் கடுகு பொடியாகி விடும் அதனை ஓர்ந்து

 

 துவரை  முதற் கரதலனாஞ் சம்பந்தச் சர்க்கரையார் சொல்லுவீரே!”

 

 

என்று பாடினார்.

இதைக் கேட்டு  மகிழ்ந்த சர்க்கரை மன்றாடியார் புலவரை இறுகத் தழுவினார்.

 

“இந்தச் சிறைக்கூடத்தில் என்னைச் சந்திக்க மிகவும் சிரமப்பட்டிருப்பீர்களே” என்று கூறிக் கண்ணீர் விடுத்தார்.

சிறைச்சாலையில் கவிஞருக்குப் பரிசாகக் கொடுக்கக் கையில் பணமில்லையே என்று வருந்தினார்.

 

பின்னர் கோட்டைக்கு வெளியே வந்து காவலாளி ஒருவனைத் தன மனைவியிடம் அனுப்பி புலவர் வந்திருக்கும் விவரத்தைச் சொல்லச் சொன்னார்.

விவரமறிந்த சிறந்த மதியூகியான அவரது மனைவி தம்மிடம் வேறு பொருளில்லாததை நினைத்துத் தன் திருமங்கலியத்தைக் கழட்டிக் கொடுத்தனுப்பினார்.

 

 

மனைவியார் அனுப்பிய தாலியைக் கண்ணீருட்ன கண்ணில் ஒற்றிக் கொண்ட சர்க்கரை மன்றாடியார் அதை மகிழ்ச்சியுடன் புலவரிட்ம் கொடுத்து, “என்னால் இப்போது கொடுக்க முடிவது இவ்வளவு தான். இதைப் பெரிய பரிசாக நினைத்துக் கொள்க” என்று உருக்கமாகக் கூறினார்.

 

 

அதை  மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட கவிஞர் அதை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு நேராக ராமசுப்பய்யரிடம் சென்று அதைக் காண்பித்தவாறே நடந்ததைக் கூறினார்.

அதைக் கேட்டு வியந்த ராமசுப்பையர் உடனே சர்க்கரை மன்றாடியாரைத் தம்மிடம் அழைத்து வருமாறு ஆணையிட்டார்.

அவரும் வந்தார்.

 

 

அவரைத் தழுவிக் கொண்ட ராமசுப்பய்யர், தமிழ் மீதுள்ள உமது தணியாக் காதலையும் உமது கொடைத் திறமையையும் கண்டு வியக்கிறேன். நல்ல சுபிட்ச காலம் வந்தவுடன் கொடுக்க வேண்டிய வரியைக் கொடுத்தால் போதும்; இப்போது நீங்கள் செல்லலாம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

 

 

உடனே சர்க்கரையார், “என்னைப் போலவே சிறையிலிருக்கும் மற்றவரை விட்டு விட்டு நான் மட்டும் எப்படி வெளியே போக முடியும்” என்று கூறினார்.

 

உடனே தள்வாய், “அனைவரையும் விடுவிக்கிறேன்” என்று கூறி அப்படியே அதற்கான ஆணையை இட்டார்.

அனைவரும் விடுதலையாகி மகிழ்ச்சியுடன் தம் இருப்பிடம் மீண்டனர்.

 

உடனே இன்னொரு பாடல் பிறந்தது.

 

 

“வாணன் உரைத்திட மால் ராமப்பையன் மனம்  மகிழ்ந்து

வேணது கேள் எனச் சம்பந்தச் சர்க்கரை வேளினுமிவ்

வீணரைக் காவல் விடீரென்று கூறிட விட்டிடலுந்

தாணுவென்று இம்முடிக் காணிக்கை சாசனம் தந்தனரே”

 

 

தமிழுக்காக தாலியைப் பரிசாக அளித்த சம்பந்த சர்க்கரை மன்றாடியாரின் புகழும் அந்தச் செயலை உவந்து போற்றிய ராமப்பையரின் புகழும் கொங்கு நாடு முழுவதும் பரவலாயிற்று,

இந்த அரிய சம்பவத்தை கொங்கு மண்டல சதகத்தில் 46ஆம் பாடலாக அமைத்தார் சதகத்தைப் பாடிய பாவலர் ஜினேந்திரன் என்ற கவிஞர். தொட்ர்ந்து பாமழை பொழிந்ததனால் இவரை கார்மேகக் கவிஞர் என்றே உலகம் அறியும். இவர் ஜைன பிராமணரான பத்மநாப ஐயரின் புதல்வர். இவர் படிக்காசுத் தம்பிரான், தள்வாய் ராமப்பய்யர் காலமான 1699ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என்று  கொள்ளலாம்.

 

 

கொங்கு மண்டலத்தின் சிறப்புக்குரிய சுவையான நூறு நிகழ்ச்சிகளை இவரது சதகம் அற்புதமாக விவரிக்கிறது.

அதில் தமிழுக்காகத் தாலி ஈந்த தமிழன் சர்க்கரை மன்றாடியாரின் கொடையும் ஒன்றாக அமைகிறது!

 

*****