
Post No.7985
Date uploaded in London – 16 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
“நிலம்புடை பெயர்வதாயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்” – (நன்றி மறக்காதே; ஆலத்தூர் கிழார், புறம் 34)
உலகிலேயே முதலில் நாய்க்கு சிலை எழுப்பிய பெருமை தமிழனுடையதே !
ரிக் வேதத்தில் வரும் ‘சரமா’ என்னும் பெண் நாய், கிரேக்க நாடு வரை சென்று ஹெர்மஸ் (HERMES) என்று பெயர் பெற்றது. ஆனால் அதற்கு சிலை இல்லை.
பஞ்ச பாண்டவர்கள் புனித வடக்கு திசை நோக்கி பயணம் செய்து, ஒவ்வொருவராக தரையில் விழுது இறந்த பொழுது, அவர்களுடன் சென்ற நாயும் மஹா பாரதம் மூலம் புகழ் பெற்றது . ஆனால் அதற்கும் சிலை இல்லை.
இதற்கெல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தாலும், சிலை பெற்ற முதல் நாய் தமிழ் நாய்தான். அதன் பெயர் ‘கோவிவன்’.

இதற்குப் பின்னர் உலகப் புகழ்பெற்றது டோக்கியோ ரயில்வே ஸ்டேஷனில் சிலை பெற்ற ஜப்பானிய நாய் ‘ஹசிகோ’ ஆகும். எஜமானன் இறந்து பல்லாண்டுகள் ஆனபின்னரும், தினமும் தனது எஜமானனை வரவேற்க பல ஆண்டுகளுக்கு ஸ்டேஷனுக்குச் சென்றது. அதற்கு ஜப்பானியர்கள் சிலை வைத்து நன்றிக் கடனைத் தீர்த்தனர்.
தமிழ் நாயோ மாமன்னன் மஹேந்திர பல்லவன் காலத்தில் வடஆற்காடு செங்கம் வட்டாரத்தில் எடுத்தனுரில் வாழ்ந்தது. அதாவது இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி.624-ல் வாழ்ந்தது.
திருடர்கள் பசுமாடுகளைத் திருடிச் செல்ல வந்த பொழுது தன்னை வளர்த்த கருந்தேவக் கத்தி என்பானைக் காக்க போராடியது. ஆயினும் கள்ளர்களின் தாக்குதலில் நாயும் அதை வளர்த்த எஜமானனும் இறந்துபட்டனர். இருவருக்கும் சமைத்த நடுகல் மூலம் நாம் ந்த வரலாற்றை அறிகிறோம்.

செங்கம் வட்டார நடுகற்கள் பற்றிய 1972-ம் நூலில் அப்போதைய தொல்பொருட் துறை இயக்குனரும், வரலாற்று நிபுணருமான டாக்டர் இரா .நாகசாமி நமக்கு இன்னொரு புதுமையான தகவலை அளிக்கிறார். என்சைக்ளோபீடியாக்களில் பார்த்தால் மாமன்னன் மஹேந்திர வர்மன் 30 ஆண்டுகள் மட்டுமே ஆண்டதாகக் கூறும். ஆயினும் அவனது 39-ஆவது ஆட்சி ஆண்டு கூட ஒரு நடு கல்லில் உளது; அவனது தந்தை சிம்ம விஷ்ணுவின் ஆட்சியின்போதே அவனுக்கும் பட்டாபிஷேகம் செய்விக்கப் பட்டதால் இப்படி ஆட்சி ஆண்டு உள்ளதாக அவர் கூறுகிறார்.
***

செய்நன்றி அறிதல்
செய்நன்றி அறிதல் என்னும் அதிகாரத்தில் பத்து குறட் பாக்களில் நன்றி கூறுவதன் முக்கியத்துவத்தை வள்ளுவன் வலியுறுத்தியதை நாம் அறிவோம்.
புறநானூறும் வால்மீகி ராமாயணமும் இக்கருத்தை வலியுறுத்துகிறது. விருந்தோம்பல், செய் நன்றி அறிதல் முதலிய பண்புகள் பாரத நாட்டில் மட்டுமே பெரிதாகப் போற்றப்படுகின்றன. மற்ற நாடுகளில் நன்றி தெரிவிக்கும் வழக்கம் மேம்போக்காகவே இருந்துள்ளது.
tags — மஹேந்திர பல்லவன், நன்றி, கோவிவன், நடுகல்
–SUBHAM–