
Article No. 2097
Written by London swaminathan
Date : 25 August 2015
Time uploaded in London :– 15-29
நேமி என்பவர் சமுத்ரவிஜயன் என்ற மன்னரின் மகன். அவர் ஷௌரிபூர் என்ற சிறிய பிரதேசத்துக்கு மன்னர். நேமிக்கும் ராஜ்மதி என்ற இளவரசிக்கும் திருமணம் நிச்சயமாகியது. அவள் பவநகர் மன்னன் உக்ரசேனனின் மகள். ராஜா வீட்டுக் கல்யாணம் என்றால் கேட்கவா வேண்டும். ஊரே அலங்காரம் செய்யப்பட்டது. மேளதாள, தாரை, தம்பட்டையுடன் பெரிய மாப்பிள்ளை அழைப்பு ஏற்பாடாகியது!
யானை, ஒட்டகம், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் , ஆடல், பாடல் கலைஞர்களுடன் மாபிள்ளை நேமி ஊர்வலத்தில் வந்தார். அவர் வந்த ரதம் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இளவரசி ராஜ்மதி எனப்படும் ரஜூலை தோழிகள் கிண்டல் செய்த வண்ணம் இருந்தனர். அவள் அரண்மனை சாளரத்திலிருந்து, வழி மேல் விழி வைத்து, ஊர்வலத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கல்யாண மப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், அரண்மனையிலுள்ள கல்யாண மண்டபத்தை நெருங்கிவந்துவிட்டது.
அப்பொழுது ஒரே ஆடுமாடுகளின் கோழி, கௌதாரிப் பறவைகளின் ஓலம் கேட்டது. மாப்பிள்ளைக்கு சிறிய சந்தேகம். தனது தோழர்களிடம் இது என்ன இரைச்சல்? என்று கேட்டார். உடனே அவர்கள் அரசாங்க அதிகாரிகளிடம் கேட்க, அவர்கள் பெருமையுடன், எல்லாம் உங்கள் கல்யாண விருதுக்குத்தான்! இன்று கனஜோரான விருந்து கிடைக்கப்போகிறது– என்றனர்.

அதைக்கேட்ட மாப்பிள்ளை வண்டியிலிருந்து குதிக்கப் ப்போனார். அவர்கள் எல்லோரும் என்ன ? என்ன ஆயிற்று? என்று வினவ, மாப்பிள்ளை எனக்குக் கல்யாணமும் வேண்டாம், கார்த்திகையும் வேண்டாம்; ரதத்தை கிர்னார் மலையை நோக்கிச் செலுத்துங்கள் என்று கட்டளையிட்டார். ரதம் எதிர் திசையில் செல்ல ஆரம்பித்தவுடன் மேளதாளங்கள் நின்றன. ஒரே பரபரப்பு. பெண் வீட்டாருக்கும் செய்தி பரவியது. ஊரே அமைதியில் ஆழ்ந்தது.
பாதி ஊர்வலத்தில் மனம் மாறிய நேமி, சமணமதத் துறவியாகப்போவதாக அறிவித்துவிட்டு கிர்னார் மலையில் சமணத் துறவிகளிடம் தஞ்சம் அடைந்தார்.
குஜராத்திலுள்ள கிர்நார் மலை பலவகைகளிலும் புனிதம் பெற்ற இடம். கண்ண பிரான் முதல் சமணத்துறவிகள் வரை எல்லோரும் பழகிய இடம். இப்பொழுது அசோகன், ருத்ரதாமன், குப்தமன்னரின் கல்வெட்டுகள் அந்த மலையை அலங்கரிக்கின்றன.
இளவரசி ரஜூலுக்கு முதலில் மன வருத்தம்; பெரிய ஏமாற்றம். 51 நாட்கள் வரை, ஒரு வேளை மணமகன், மனம் மாறிவிடக்கூடும் என்று காத்திருந்தார். ஆனால் வரவில்லை. சிறிது சிறிதாக அவர் மனதிலும் மாற்றம் உண்டானது. என்னை அடைவதைவிட ஒரு இன்பமான நிலையை என் கணவராவதற்கு இருந்த நேமி, அடையமுடியுமானால் அதே இன்பத்தை நானும் நுகர்வேன் என்று அவரும் கிர்நார் மலைக்குச் சென்று துறவி ஆனார்.
ரஜூல் என்ற ராஜ்மதி உடனே துறவியானதாகச் சில நூல்களும் சில காலத்துக்குப் பின்னர் துறவியானதாகச் சில நூல்களும் செப்பும். மேலும் இடைக்கால கவிஞர்கள் இதையே ஒரு காதல் காவியமாக மாற்றி விரகதாப பாடல்களும் எட்டுக்கட்டிவிட்டனர். நேமி- ராஜூல் மணமுறிவு, ஒரு புது வகை இலக்கியத்தையே படைத்துவிட்டது.
அதையெல்லாம் விட மிகப்பெரிய விஷயம் அந்த நேமி என்பவர்தான் சமணர்கள் போற்றும் 22ஆவது தீர்த்தங்கரரான நேமிநாதர். அவருக்குப் பின்னர்தான் வர்த்தமான மஹாவீரர் அவதரித்தார். அவர் புத்தருக்குக் கொஞ்சம் சீனியர்.
நேமிநாதரின் மற்றொரு பெயர் அரிஷ்ட நேமி. இவர் கிருஷ்ணருக்கு உறவினர் என்றும் அதே யாதவ குலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர், ரிக் வேதம் முதலிய நூல்களில் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர் பகர்வர். அவர் எந்தக் காலத்தைச் சேர்ந்தவரானாலும் போற்றுதலுக்குரிய புண்ணிய புருஷர் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னது இவர் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. கொல்லாமை விரதம் பூண்டோருக்கு பிற தர்மம் தேவை இல்லை என்றும் வள்ளுவர் கருதுவார்.
இந்துமத யோகிகளும் சந்யாசம் ஏற்கையில் மனம் , மொழி, மெய் ஆகிய மூன்றினாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்ய மாட்டேன் என்று விரதம் ஏற்பர். வள்ளுவனும் இக்கருத்தைத் துறவறவியலில் கூறுவதைக் காண்க.
–சுபம்–
You must be logged in to post a comment.