சர்க்கஸுக்குப் போன பரமஹம்ஸர்!

GandonFrance1239CircusSeurat11869YT1588A

Compiled by S NAGARAJAN

Post No.2210

Date: 3rd   October 2015

Time uploaded in London: 8-27 am

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

.நாகராஜன்

 

 

மஹேந்திரநாத் குப்தா

இன்று உலகமெல்லாம் போற்றும் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் உபதேச மொழிகளை நமக்குக் கிடைக்கச் செய்தவர் ஒரு அருமையான பரமஹம்ஸ பக்தர். எம் (M) என்று குறிப்பிடப்படும் அவரது பெயர் மஹேந்திரநாத் குப்தா. (தோற்றம் 14-7-1854 மறைவு 4-6-1932)

இடைவிடாது குருதேவரைப் பற்றிய சிந்தனையில் இறுதி மூச்சு வரை மூழ்கி இருந்தவர் அவர். அவரது அற்புதமான கதாம்ருதம் உண்மையிலேயே பாற்கடலில் இருக்கும் அமிர்தத்திற்கு நிகர் தான்!

ஸ்வாமி விவேகானந்தர் ஒரு முறை அவரிடம் அவரது கதாம்ருதம் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்:-“ நீங்கள் பரமஹம்ஸரை சரியான இடத்தில் தான் பிடித்திருக்கிறீர்கள். உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது! இந்தச் செயல் ஒரிஜினலாக அமைந்துள்ளது. இந்தப் பணி உங்களுக்காகவே ரிஸர்வ் செய்யப்பட்டுள்ளது.”(You have hit Ramakrishna to the right point.. It is indeed wonderful.. The move is quite original. It has been reserved for you, this great work!”)

சின்னச் சின்ன சம்பவங்கள்! அதில் கேட்கப்படும் சிறு சிறு வார்த்தைகள். ஆனால் அவை உணர்த்துபவையோ பெரும் இறை அனுபவத்தை!

SlaniaSweden1656Womanonhorse101087Facit1469

சர்க்கஸ் பார்க்கப் போனார் பரமஹம்ஸர்

ஒரு முறை கல்கத்தாவிற்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்திருந்தது. பரமஹம்ஸர் அந்த சர்க்கஸைப் பார்க்கச் சென்றார். கூடவே ‘எம்’ உள்ளிட்ட அனைவரும் சென்றனர். எட்டணா டிக்கட்! காலமோ குளிர் காலம். காலரியில் உட்கார்ந்த பரமஹம்ஸர், ‘ஆஹா! இங்கிருந்து பார்க்க எவ்வளவு பிரமாதமாக இருக்கிறது!’ என்று ஆச்சரியப்பட்டுச் சொன்னார்.

அவரால் சந்தோஷத்தை எப்பொழுதுமே மறைக்க முடியாது. அவர் ஒரு முழுமையான குழந்தை!

ரிங்கில் ஒரு குதிரை மிக மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. ஒரு ஆங்கிலேயப் பெண்மணி அவ்வப்பொழுது ரிங்கிற்குள் நுழைந்து ஓடி வரும் குதிரையின் மீது அது ஒரு கணம் ஒரு காலில் நிற்கும் போது மின்னல் போலத் தாவி ஏறுவாள். இதையெல்லாம் பார்த்தார் பரமஹம்ஸர்.

சர்க்கஸ் முடிந்து வெளியே வந்து வண்டியில் ஏறும் போது, “பாரேன்! அந்தக் குதிரையின் மீது ஏறுவதற்கும் அதில் அமர்வதற்கும் அவள் எவ்வளவு பெரிய பயிற்சியைச் செய்திருக்க வேண்டும்! இதே போலத் தான் இந்த உலகமும் சுழல்கிறது. எவர் ஒருவர் சவாரி செய்வதில் நிபுணராக இருக்கிறாரோ அவரால் தான் நன்கு சவாரி செய்ய முடியும். இல்லையேல் கீழே விழ வேண்டியது தான். அதுவே முடிவாகி விடும். இந்த உலகம் அப்படிப்பட்ட பயங்கரமான ஒன்று!

சிறிய சர்க்கஸ் நிகழ்ச்சியை வைத்து உலகைப் பற்றிய மாபெரும் உண்மையைச் சொன்னார் பரமஹம்ஸர்.

பக்தர்களுக்கு அபயமளித்துப் பயிற்சி தந்தவர்

தனது பக்தர்களை உலக வாழ்க்கை நடத்துவதில் நிபுணத்வம் அடையப் பயிற்சியும் பல இரகசியங்களையும் கற்றுக் கொடுத்தார்.

அவர்களுக்கு சங்கடங்கள் நேரும் போது அவர் அவர்களைக் காப்பாற்றினார். கெடுதி பயக்கும் விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து எச்சரித்து வந்தார்.

ஸ்வாமி விவேகானந்தரை உலகப் போக்கிலிருந்து எதிர் நீச்சல் போட வைத்து பிரம்மாண்டமான செயலுக்குத் தகுதி ஆக்கினார்.

பரமஹம்ஸர் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவை அனைத்தையும் துல்லியமாக – சர்க்கஸ் பார்க்கப் போய் அங்கு சொன்னது உட்பட அனைத்தையும் – அறிய வழி வகை செய்தவர் ‘எம்.’

அவரது புகழ்பெற்ற டயரிக் குறிப்பு ஒரு தங்கச் சுரங்கமாக இன்றளவும் திகழ்கிறது; நாளைக்கும் திகழும்!

அதிலிருந்து படிப்பினைகள் பலவற்றைக் கற்றால் நமது உலக சவாரியும் நிபுணத்வத்துடன் சரியானபடி நடக்கும். அஞ்சாமல் செல்லலாம்!

************