
Written by S NAGARAJAN
Date: 3 JUNE 2018
Time uploaded in London – 9-54 am (British Summer Time)
Post No. 5071
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
ச.நாகராஜன்
இந்தியா சுதந்திரம் பெற்று விடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.
அதை விட அவரது மோசமான எண்ணம் அப்படி ஒருவேளை சுயாட்சி தர நேர்ந்தாலும் அல்லது சுதந்திரமே தர நேர்ந்தாலும் இந்தியாவைத் துண்டாடி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளை உருவாக்கித் தீராத தலைவலியை இந்தியாவிற்குத் தந்து விட வேண்டும் என்பது தான்.
முதல் எண்ணம் வெற்றி பெறவில்லை.
இரண்டாவது எண்ணம் வெற்றி பெற்று விட்டது.
இந்தியர்களை அயோக்கிய ராஸ்கல்கள் என்று அவர் கூறிய அவரது பிரபலாமான மேற்கோள் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். (இந்தியர்கள் தங்கள் நாட்டை ஆளத் தகுதியற்ற நாள் சீக்கிரம் வரும் என்று அவர் குறிப்பிட்டார்; அது நிறைவேறி விடும் படி நமது அரசியல் கோமாளிகள் நடந்து கொள்வதை வருத்தத்துடன் குறிப்பிட்டு, அது நிறைவேறாமல் இருக்க இளைய தலைமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எழுதியுள்ளேன்)
ஆனால் நன்றி கெட்ட சர்ச்சில் தனது உயிரைக் காப்பாற்றிய ஹிந்து-சீக்கிய ஜவான்களின் நாடான இந்தியாவையே பிரிக்கத் திட்டம் போட்டது தான் மன்னிக்க முடியாத செயல்.
சர்ச்சில் தனது சுயசரிதத்தில் அவர் இளம் ராணுவ வீரராக கைபர் கணவாய் அருகே பணியாற்றிய போது நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவரை முஸ்லீம் பத்தான்கள் சுற்றி வளைத்தனர்.
அவர் உயிர் போகவிருந்த தருணத்தில் அவரது ப்ளாட்டூனில் இருந்த ஹிந்து-சீக்கிய ஜவான்கள் குறுக்கிட்டு அவர் உயிரைக் காப்பாற்றினர். தனது உயிர் காப்பாற்றப்பட்டது ஹிந்து-சீக்கிய ஜவான்களாலேயே என்று அவரே எழுதியுள்ளார்.
ஆனால் அவர் பிரதம மந்திரியான போது நடந்த சம்பவங்கள் விசித்திரமானவை. இந்தியாவைப் பிரிப்பதே அவர் நோக்கமாக இருந்தது. 1940 மே 10ஆம் தேதி அவர் பிரிட்டனின் பிரதம மந்திரியாக ஆனார்.
முகம்மதலி ஜின்னாவை அவர் ஆதரித்துத் தயார் படுத்தினார்.
ஆனால் இரண்டாவது உலக மகா யுத்தம் எதிர்பாராத விதமாக வந்து பிரிட்டனை அச்சுறுத்தியது.
தனது மின்னல் வேகப் படையால் ஹிட்லர் ஒவ்வொரு நாடாக கபளீகரம் செய்து கொண்டு முன்னேறினான்.
அவனை மகாத்மா காந்திஜி உள்ளிட்ட அனைவரும் ஆதரிக்கவில்லை. பிரிட்டன் தனக்கு உதவி செய்யுமாறு கெஞ்சி வேண்டிய போது அதற்கு காந்திஜியின் தலைமையில் இந்திய மக்கள் சம்மதித்தனர். ஹிட்லரால் பாதிக்கப்பட்டு இந்தியாவிற்கு ஐரோப்பாவிலிருந்து வரும் யூத அகதிகளுக்குப் புகலிடம் தரவும் இந்திய தேசிய காங்கிரஸ் முன் வந்தது. ஆனால் பிரிட்டன் இதை ஏற்கவில்லை. என்றாலும் ஹிந்து-சீக்கிய மக்கள் சில யூதர்களை இங்கு குடியேறச் செய்தது.
ஆனால் முகம்மதலி ஜின்னாவோ ஹிட்லரின் வருகை பிரமாதமான ஒன்று என்றும் ஹிட்லரை தான் ஆதரிப்பதாகவும் பகிரங்கமாகக் கூறினார்.

1938 செப்டம்பரில் மூனிச் உடன்படிக்கை ஜனநாயக செக்கோஸ்லேவேகியாவை அழித்த போது ஜின்னா ஹிட்லர் தங்களுக்கு (இந்திய முஸ்லீம்களுக்கு) உத்வேகம் ஊட்டும் ஒருவர் என்று கூறினார்.
பிரிட்டனுக்கு ஆதரவு தந்த காந்திஜிக்கும் இந்திய மக்களுக்கும் துரோகம் இழைத்த சர்ச்சில், பிரிட்டனின் எதிரியான ஹிட்லரை ஆதரித்த ஜின்னாவுக்கு ஆதரவு தந்தார்.
பாகிஸ்தானை உருவாக்குவதில் முனைப்பாக உதவி செய்தார்.
இந்த நீண்ட நெடிய சுதந்திரப் போரில் ஒன்று தான் கிரிப்ஸ் மிஷன். (Cripps Mission) கிரிப்ஸ் லேபர் கட்சி.சர்ச்சிலோ கன்ஸர்வேடிவ் கட்சி.
கிரிப்ஸ் இந்திய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் சில திட்டங்களை முன் வைத்தார். சுயாட்சி தரப்படும் என்ற அவரது தேனான திட்டம் பேப்பர் அளவிலேயே இருந்தது. ஆக்கபூர்வமான ஒன்றாக அது இல்லாததால் காந்திஜி உள்ளிட்ட அனைவரும் அந்தத் திட்டத்தை நிராகரித்தனர்.
கிரிப்ஸின் மிஷன் தோல்வி அடைந்தது.
இதைத் தான் சர்ச்சில் மிகவும் விரும்பினார்.
கிரிப்ஸின் இந்திய விஜயம் மகத்தான தோல்வியை அடைந்தது என்ற செய்தியைக் கேட்டவுடன் அளவிலா ஆனந்தம் அடைந்த சர்ச்சில் தனது அதிகாரபூர்வமான இல்லமான 10, டவுனிங் தெருவில் தனது இல்லத்தில் இருந்த காபினட் அறையில் டான்ஸ் ஆடினார். அவ்வளவு மகிழ்ச்சி!
இதை பிரிட்டிஷ் எழுத்தாளர் மைக்கேல் எட்வர்டஸ் (Michael Edwardes) எழுதியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்ட் இந்தியாவிற்கு உதவப் பெரிதும் விரும்பினார். யுத்தத்திற்கோ அமெரிக்க உதவி சர்ச்சிலுக்குத் தேவையாக இருந்தது. ஆகவே கண் துடைப்பிற்காக யுத்த கால மந்திரி சபை உறுப்பினரான கிரிப்ஸை இந்தியாவிற்கு அனுப்ப சர்ச்சில் சம்மதித்தார்.
இது அமெரிக்க ஜனாதிபதிக்காக – வெறும் கண் துடைப்பிற்காக. ஆனால் அவர் தோற்றவுடன் இந்தியாவை உருப்படாமல் செய்ய வேண்டும் என்ற தன் எண்ணம் பலித்ததற்கு ஆனந்த நடனம் ஆடினார் சர்ச்சில்.
சர்ச்சிலின் குள்ளநரித் தந்திரம் இந்தியாவைப் பிரிக்க வழிவகை செய்தது.
ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே பாகிஸ்தான் இரண்டு பட்டது – பாகிஸ்தான், பங்களாதேஷாக.
இதுவும் போய் அகண்ட பாரதம் உருவாகும் என அரவிந்தர் கூறியுள்ளார். அதைக் காலம் தான் மெய்ப்பிக்கும்!
***



