
Written by London swaminathan
Date: 5 March 2017
Time uploaded in London:- 6-50 am
Post No. 3693
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com

எகிப்தில் பயன்படுத்தப்பட்ட சித்திர எழுத்துக்கு ஹைரோக்ளிப்ஸ் (Hieroglyphs) என்று பெயர். இது கிரேக்கர் உருவாக்கிய சொல். இதன் பொருள் புனித எழுத்து (Sacred writing). இது முதல் முதலில் கி.மு.3200 ல் காணப்பட்டாலும் கி.மு.2800 முதலே பெரிய வாக்கியங்கள் உள்ள கல்வெட்டுகள் கிடைத்தன.
சிந்து சமவெளி எழுத்து பற்றி ஐம்பதுக்கும் மேலான விசித்திரமான விளக்கங்கள் இருப்பது போல ஆளாளுக்கு மனதில் தோன்றியதை எல்லாம் எழுதிக்கொண்டிருந்தனர். ஒரு பிரெஞ்சுக்காரர் ரோசட்டா கல்வெட்டு (Rosetta Stone) எனும் கல்வெட்டைக் கண்டுபிடித்தவுடன் குழப்பம் நீங்கியது; புதிரும் விடுபட்டுப் போனது! காரணம் அதில் மூன்று மொழிகளில் ஒரே விஷயம் எழுதப்பட்டிருந்ததால் எகிப்திய எழுத்துக்களின் பொருள் விளங்கியது.
அதுவரை அது பொரிவிலாங்காய் உருண்டையாக (பொருள் விளங்கா) இருந்தது!
இதுபற்றிய சில விநோத விஷயங்களைக் காண்போம். இதில் எகிப்தியரின் புத்தி எவ்வளவு கூர்மையானது என்பது தெரியும். ஆயிரம் பட எழுத்துக்களை (symbols) உபயோகித்து பல விஷயங்களை எழுதினர்.
இதில் மெய்யெழுத்துக்களை (consonants) மட்டுமே எழுதினர்; உயிர் எழுத்துக்களை (Vowels) உபயோகிக்கவில்லை. இதனால் எகிப்தியரின் பெயர்கள் எல்லாம் குத்துமதிப்பானவையே. நூற்றுக்கு நூறு சதம் உச்சரிப்பு யாருக்கும் தெரியாது.
முதலில் ஒரு படத்தை வரைந்தனர்.அதில் என்ன காண்கிறோமோ அதுதான் அதன் பொருள். பின்னர் அந்த சப்தத்தைக் கொண்டு புதிய சொற்களை (Symbol=Syllable=Sound) உருவாக்கினர்.

துவக்க கால மன்னர் பெயர்கள் கொஞ்சம் கரடுமுரடானவை; பின்னர் வந்தோரின் பெயர்கள் அர்த்தபுஷ்டியுள்ளவை; மிருதுவான ஒலி படைத்தவை என்பது எகிப்தியல் அறிஞர்களின் கருத்து.
எல்லா பழைய கலாசாரங்களிலும் மன்னரை காளை, சிங்கம் அல்லது புலி என்று வருணிப்பர். ஆனால் எகிப்தியர் மட்டும் ஹோரஸ் (HORUS) என்னும் தெய்வத்தைக் குறிக்கும் கழுகை ( Falcon பருந்து, Eagle கருடன்) மன்னரின் சின்னமாகப் பயன்படுத்தினர். சித்திரங்களைப் பயன்படுத்துவதில் எகிப்தியருக்கு நிகர் எகிப்தியரே! தங்க நிறமான பருந்து வானத்திற்கு உச்சியில் பறப்பது சூரியனை நோக்கிச் செல்லும் பறவையாக அவர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.
எகிப்தியர்கள் அன்றாடம் காணும் பறவைகள், மிருகங்கள், பொருள்களையே சித்திரமாக வரைந்தனர்.

எகிப்தில் வேதப் பசு
ரிக்வேதத்தில் தாய்பசுவுக்கும் கன்றுக்கும் இடையேயுள்ள அன்பை பெரிதும் புகழ்வர். ‘வத்ச’ என்றால் கன்று. இதனிடத்தில் தாப்பசு காட்டும் அன்பை ‘வாத்சல்யம்’ என்பர். இந்தச் சொல்லை மக்களின் பாசத்துக்கும் அன்புக்கும் பயன் படுத்தினர் இந்துக்கள். இந்த சின்னம்தான் எகிப்தியர், “மகிழ்ச்சியான, சந்தோஷமான” என்பதற்குப் பயன்படுத்தினர். வேத கால ரிஷிகளும் எகிப்தியரும் எந்த அளவுக்கு இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தினர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
தொடுவானம், மலை, சூரிய உதயம் — ஆகியவற்றை அவர்கள் எப்படிப் பயன்படுத்தினர் என்பதைக் கண்டால் அவர்களின் புத்தி தீட்சண்யம் விளங்கும்; அறிவுக்கூர்மை பொலிவுறும்.

மலை என்பதை இரண்டு முகட்டுடன் வரைந்தனர். இது மலை. அதன் இடையில் மூன்றாவது முகட்டை (சிகரத்தை) வரைந்தால் அது வெளிநாடு என்று பொருள்! அந்த முகட்டுக்குப் பதிலாக இரண்டு சிகரங்களுக்கிடையே சூரியன் போன்ற வட்டத்தை வரைந்தால் அது தொடுவானம், சூரியன் உதயம். அதற்கு மேல் சூரியன் கிரணங்கள் இருப்பது போல வரைந்தால் சூரியன் உதிக்கும் மலை. பிறகு இதையே ஐடியோக்ராமாக IDEOGRAM — அதாவது இந்த எண்ணத்தை, வேறு பொருளை உணர்த்தும் சின்னமாக — பயன்படுத்தினர். புகழுடன் தோன்றல், மன்னன் தோன்றுதல், உயர்நிலை என்றெல்லாம் பொருள் கொண்டனர்.

மன்னன் என்பவன் சூரியனைப் போன்றவன் (Solar Dynasty-Surya Kula) என்று சங்கத் தமிழ் பாடல்களும், சம்ஸ்கிருதப் பாடலகளும் போற்றுகின்றன.
தோன்றிற் புகழோடு தோன்றுபவர் மன்னன் அல்லாவா!
எல்லா மொழிகளும் வளர்ந்தது போலவே எகிப்திய மொழியும் 5000 ஆண்டுகளில் வளர்ந்தது. ஆகவே ஒரு சித்திர எழுத்து துவக்க கால எழுத்தா, பிறகால எழுத்தா அது எந்த இடத்தில் வருகிறது என்பதை எல்லாம் அறிதல் வேண்டும்.
லண்டனில் மாலை நேரக் கல்லூரிகளில் கூட ஹைரோகிளிபிக்ஸ் கற்பிக்கிறார்கள். எகிப்திய கல்வெட்டுகளைப் படித்தறிய நீண்டகாலப் பயிற்சியும், அதன் பின்னுள்ள எகிப்திய வரலாறும் அவர்களுடைய கலாசாரமும் தெரிந்திருக்க வேண்டும். இப்படி இல்லாவிட்டால் இப்பொழுது சிந்து சம்வெளி எழுத்துக்களைப் பற்றி எல்லோரும் பிதற்றுவது போல நாமும் பிதற்றுவோம்.!!

……………….to be continued