கடனால் நடுக்குற்ற புலவர்! (Post No.4266)

Written by S.NAGARAJAN

 

 

Date: 3 October 2017

 

Time uploaded in London- 6-41 am

 

Post No. 4266

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழ் இன்பம்

 

கடனால் நடுக்குற்ற புலவர் போட்ட புதிருடன் கூடிய பாடல்!

 

ச.நாகராஜன்

 

இராமச்சந்திர கவிராயர் பெரும் புலவர். ஒரு முறை கடன் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டார்.

 

அதை எப்படித் தீர்ப்பது?வேறு வழி? வள்ளல் ஒருவரைக் கண்டு தமிழ்ப் பாட்டால் வேண்டுகோள் விடுக்க வேண்டியது தான்!

அப்போது சீதாராமன் என்ற வள்ளல் தமிழின் பால் தீராக் காதல் கொண்டிருந்தார் ஆகவே தமிழ்ப் புலவர்கள் வேதனைப் படுவதைக் கண்டு அவர் சகிக்க மாட்டார்.

அவரிடம் வந்தார் நம் புலவர்.

 

கடன் என்று நேரடியாகச் சொல்லத் தயக்கம். ஆகவே, பாடினார் இப்படி ஒரு பாடல்.

 

அத்திரம்வே லாவலமி ராசி யொன்றிற்

கமைந்தபெயர் மூன்றினிடை யக்க ரத்தால்

மெத்தநடுக் குற்றுனைவந் தடைந்தே னிந்த

விதனமகற் றிடுமற்றை யெழுத்தோ ராறில்

பத்துடையா னைத்தடிந்து பெண்ணார் செய்து

பரிவினுகர் வோனிருதாள் பணிந்து போற்றும்

சித்தசனே தெளியசிங்கன் றவத்திற் றோன்றுஞ்

சீதாரா மப்ரபல தியாக வானே.

 

அத்திரம் – அஸ்திரம் அத்திரம் ஆனது. அதைத் தமிழில் பகழி என்பர்.

வேலாவலம் – கடல்

இராசி ஒன்றிற்கு அமைந்த  பெயர்  – கன்னி இராசி

மூன்றின் – இந்த மூன்று வார்த்தைகளின்

இடை அக்கரத்தால் – நடுவில் உள்ள எழுத்துக்களால்

மெத்த நடுக்குற்று – மிகவும் நடுக்கம் அடைந்து

உன்னை வந்து அடைந்தேன் – உன்னிடம் வந்து சேர்ந்தேன்.

பகழி, கடல், கன்னி ஆகிய மூன்று வார்த்தைகளில் உள்ள நடு எழுத்து க ட ன் – கடன் என்பதாகும்.

 

கடனால் மெத்த நடுக்கம் அடைந்தாராம் கவிஞர்.

ஆகவே உன்னை வந்து அடைந்தேன் என்கிறார்.

 

 

இந்த விதனம் அகற்றிடு – இந்த விசனத்தை – என் கவலையை நீக்கிடு.

 

மற்றை எழுத்து ஓர் ஆறில் – மற்றைய ஆறு எழுத்துக்களினால்

பத்து உடையானைத் தடிந்து – பத்துத் தலைகளை உடைய இராவணனைக் கொன்று

 

பெண் ஆக செய்து – பெண்ணுருவாக்கி

பரிவின் நுகர்வோன் – அன்போடு கொடுத்ததை வாங்கி உண்டவனாகிய திருமாலின்

இரு தாள் – இரண்டு பாதங்களை

 

பரந்து போற்றும் – வணங்கித் துதிக்கின்ற

சித்தசனே – அழகினால் மன்மதனை நிகர்த்தவனே

தெளிய சிங்கன் – தெள்ளிய சிங்கனது

தவத்தின் தோன்றும் – தவப் பேறினால் அவதரித்த

சீதாராம – சீதாராமன் என்னும் பெயருடைய

ப்ரபல தியாகவானே – பிரசித்தமான கொடையாளியே!

 

பகழி, கடல், கன்னி ஆகிய மூன்று வார்த்தைகளில் நடு எழுத்துக்களான க, ட, ன் ஆகிய மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டால் மீது வரும் ஆறு எழுத்துக்கள் பழி, கல், கனி ஆகும்.

 

 

இவற்றில் முதலில் இருக்கும் பழியினால் பத்துத் தலை உடைய இராவணனைக் கொன்று, இரண்டாவதாகிய் கல்லை அகலிகை என்னும் பெண்ணாக உருவாக்கி, மூன்றாவதாகிய கனியை சவரி சமர்ப்பிக்க அதை ஏற்று உண்டவனாகிய இராமனின் பாதங்களை வணங்கித் துதிக்கும் சீதாராமன் என்ற பெயரைக் கொண்ட கொடையாளியே, என் துன்பத்தைப் போக்கு!

என்ன சாமர்த்தியம்?

 

 

கவிஞர் போட்ட புதிர்க் கவிதையை அவிழ்த்து அதன் பொருளைக் கண்டு அவர் கடனைத் தீர்த்தார் சீதாராம வள்ளல்.

கவிஞருக்குக் கடன் தீர்ந்தது.

நமக்கோ நல்ல பாடல் ஒன்று கிடைத்தது.

வாழ்க தமிழ். வளர்க புலவர் கூட்டம்!

***