

Written by S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 17 December 2019
Time in London – 8-59 AM
Post No. 7352
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
பாக்யா 1-12-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு இருபத்தி ஒன்றாம் கட்டுரை அத்தியாயம் 437
செஸ் விளையாட்டு உடலின் ஆற்றலை உறிஞ்சுகிறதா? பரபரப்பு ஆய்வு!
ச.நாகராஜன்
அனடாலி கார்பாவ் (Anatoly Karpov – தோற்றம் 23-5-1951 இப்போது வயது 68) உலகின் மாபெரும் செஸ் சாம்பியன். 1999ஆம் ஆண்டு விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் வரை அவரே உலகின் செஸ் சாம்பியன்.
ஆனால் 1984ஆம் ஆண்டு நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டி திடீரென்று பாதியில் நிறுத்தப்பட்டது. கார்பாவ் அவரை எதிர்த்து விளையாடிய காஸ்பரோவை (Garry Kasparov தோற்றம் : 13-4-1963 இப்போது வயது 56) விட முன்னணியில் தான் இருந்தார். இருந்தும் ஏன் செஸ் போட்டி நிறுத்தப்பட்டது?
இந்தப் போட்டி நடைபெற்ற போது ஐந்து மாதங்களில் கார்பாவ் 10 கிலோ எடையை இழந்திருந்தார். இதனால் போட்டியை நடத்தியவர்கள் கவலையுற்று போட்டியை நிறுத்தி விட்டனர். உலக செஸ் சாம்பியனின் உடல் நிலை கவலைக்கிடமாக ஆகி விடக்கூடாது என்பதே அவர்களின் கவலை.
கார்பாவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இப்படி விளையாட்டில் தீவிரமாக சிந்திப்பதில் ஒரு நாளைக்கு 6000 கலோரியை அவர் செலவிட வேண்டி இருந்தது என்பது தெரிய வந்தது.
விஞ்ஞானிகள் அவர் ஏன் தன் சக்தியை இழந்தார்? செஸ் போட்டியில் எந்தக் காயை எப்படி நகர்த்தலாம் என்று இடைவிடாது சிந்தித்ததாலா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா – மூளை அவ்வளவு சக்தியை உறிஞ்சுகிறதா? – என்று ஆராயத் தொடங்கினர்.
சாதாரணமாக உடல் சும்மா இருக்கும் போது – அதாவது சுவாசம், ஜீரணம், உடலைத் தகுந்த வெப்பநிலையில் வைத்திருப்பது போன்ற இயல்பான காரியங்களைத் தவிர வேறெதுவும் செய்யாதிருக்கும் போது – உடலின் மொத்த ஆற்றலில் மூளை 20 முதல் 25 சதவிகிதம் உபயோகிக்கிறது. இதற்கான குளுகோஸை அது எடுத்துக் கொள்கிறது.
ஒரு நாளைக்கு ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி 350 முதல் 450 கலோரிகள் வரை இதற்காக தேவைப்படுகிறது. ஆனால் குழந்தைப் பிராயத்திலோ – 5 முதல் 6 வயதாக இருக்கும் போது மூளை உடலின் ஆற்றலில் 60 சதவிகிதத்தை எடுத்துக் கொள்கிறது. இதை டியூக் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டக் பாயர் தெளிவு படுத்துகிறார். இப்படி மூளை உடல் சக்தியை எடுத்துக் கொண்டாலும் அது உடல் எடையில் 2 சதவிகிதமே ஆகும்.
புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் மூளைக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. ஆனால் தனது வேலையில் ஒருவர் நல்ல திறமை பெற்று விட்டார் எனில் மூளைக்கு அதிக சக்தி தேவைப்படுவதில்லை.
அறிவியல் ரீதியாக இது கண்டுபிடிக்கப்பட்ட போது செஸ் விளையாட்டில் மிகத் திறமைசாலியான கார்பாவ் ஏன் 10 கிலோ எடையை இழந்தார் என்ற கேள்வி எழுந்தது.
இதற்கான காரணம் அதிகம் சிந்தித்தனால் அவர் உடல் எடையை இழக்கவில்லை, மாறாக தீவிரமான விளையாட்டின் போது அவர் மனஉளைச்சலுக்கு ஆளானதோடு, வேளாவேளைக்கு உணவை எடுத்துக்கொள்ளவில்லை, அதனால் தான் அவருக்கு எடை இழப்பு ஏற்பட்டது என்று அறிவியல் நிபுணர்கள் முடிவுக்கு வந்தனர். சாதாரணமாக, நிபுணர்களாக உள்ள செஸ் விளையாட்டு வீரர்கள் தீவிரமாக விளையாடுகையில் அவர்களுக்கு மன இறுக்கம் ஏற்படுகிறது. இதனால் இதயத் துடிப்பு அதிகமாகிறது. வேகமாக சுவாசிக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. உடல் வியர்க்கிறது. இவ்வளவும் சேரும்போது அவர்களது உடல் அதிக கலோரியை இழக்க ஆரம்பிக்கிறது. அத்துடன் இந்த விளையாட்டு நிபுணர்கள் எட்டு மணி நேரம் வரை தொடர்ந்து விளையாட்டில் அமர வேண்டி நேர்கிறது. அப்போது தினசரி நடைமுறையில் இருக்கும் உணவுப் பழக்கத்தை அவர்களால் மேற்கொள்ள முடிவதில்லை. ஆகவே ஆற்றல் இழப்பு அதிகமாக ஏற்படுகிறது. இது சாதாரணமாக அரங்கத்தில் நிகழ்ச்சிகளை நடத்தும் இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் ஒன்று.
உங்கள் உடலை ஒரு வேலையில் தீவிரமாக ஈடுபட வைத்தால் அப்போது அதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. அதனால் உடலில் எடை இழப்பு ஏற்படும் என்பது அறிவியல் கண்டுபிடிப்பு.
ஆகவே கார்பாவ் ஏன் உடலில் 6000 கலோரியை இழந்தார் என்ற கேள்விக்கு, அவர் செஸ் விளையாட்டின் போது அதிகம் சிந்தித்ததால் எடையை இழக்கவில்லை; மாறாக அவர் மன இறுக்கத்திற்கு ஆளானதும், வேளா வேளைக்குச் சரிவர உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்பதுமே காரணங்கள் என்பது முடிவாகத் தீர்மானிக்கப்பட்டது.
ஆகவே எவ்வளவு வேண்டுமானாலும் தீர்க்கமாக சிந்திக்கலாம் என அறிவியலே முத்தாய்ப்பாகக் கூறி விட்டதால் இனி கவலைப்படாமல் நிறைய சிந்திக்கலாமே!
மூளை பற்றிய காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் இன்னொரு ‘உண்மை’ நாம் அனைவருமே நமது மூளையில் பத்து சதவிகிதம் தான் பயன்படுத்துகிறோம் என்பது. இது உண்மையில்லை, கட்டுக்கதை என்கிறது நவீன அறிவியல். எல்லோருடைய மூளையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படுத்தப்பட்டே வருகிறது என்பது அறிவியலின் சமீப கால முடிவு. மூளையை ஸ்கேன் செய்து பார்த்த நிபுணர்கள் மூளையின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு சமயங்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன என்று கூறுகின்றனர். இப்படி பத்து சதவிகிதம் தான் மூளை பயன்படுத்தப்படுகிறது என்ற கட்டுக்கதையான ஒரு தகவல் எப்படி யாரால் முதலில் சொல்லப்பட்டது என்பது சரியாக விளங்கவில்லை. எல்லோரும் எப்போதும் மூளையின் எல்லா பகுதிகளையும் பயன்படுத்துதல் என்பது முடியாத காரியம். தேவைப்படும் போது தேவையுள்ள தசைப் பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன, அவ்வளவு தான்!!
நாம் என்ன, இதயம், கண், காது போன்ற இதர உடல் அங்கங்களை பத்து சதவிகிதம் தான் உபயோகப்படுத்துகிறோமா என்று கேட்கின்றனர் விஞ்ஞானிகள்.
இப்படி மூளையைப் பத்து சதவிகிதம் தான் நாம் பயன்படுத்துகிறோம் என்று சொல்கிறார்களே, அவர்கள் தாம் தங்கள் மூளை ஆற்றலில் பத்து சதவிகிதம் பயன்படுத்துபவர்கள் என்று கலாய்க்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஆகவே மூளை ஆற்றலை நன்கு பயன்படுத்தி அதிகம் சிந்தித்து அதிகம் பயன் எய்தலாம் என்பதே அறிவியலின் முடிவு!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
சீனிவாச ராமானுஜன் உலகப் புகழ் பெற்ற அதிசய கணித மேதை. (தோற்றம் 22-12-1887 மறைவு : 26-4-1920) 32 ஆண்டுகளே வாழ்ந்த இந்த மகா மேதையின் கணிதக் கண்டுபிடிப்புகள் பற்றி இன்றும் உலக அறிஞர்கள் வியந்து பாராட்டுகின்றனர்.
சீனிவாச ராமானுஜன் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு தொடர் சொற்பொழிவை ஆற்றினார். அவரை ஆதரித்துப் பாராட்டிய பெரும் கணித மேதையான ஜி.ஹெச். ஹார்டி அந்தச் சொற்பொழிவுகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட விரும்பினார். அந்த நூலில் வெளியிட ராமானுஜனின் ஒரு போட்டோ வேண்டுமென அவர் விரும்பினார். இதற்காகப் பலரை அணுகிய போதும் ஒரு போட்டோ கூட கிடைக்கவில்லை. கடைசியாக அவர் சுப்ரமணியம் சந்திரசேகரை அணுகி ஒரு போட்டோவை எப்படியாவது கொண்டு வரும் படி கேட்டுக் கொண்டார்.
சந்திரசேகர் இந்தியாவிற்கு வருகையில் ராமானுஜனது (விதவை) மனைவியை அணுகினார். ராமானுஜத்தின் மனைவியிடம் ஒரே ஒரு போட்டோ இருந்தது. அதை அவர் கொடுத்தார். அதிலிருந்து மூன்று போட்டோக்களை என்லார்ஜ் செய்த சந்திரசேகர் ஒன்றை ராமானுஜனின் மனைவிக்குக் கொடுத்தார். இன்னொன்றை ஹார்டிக்கு அனுப்பினார். மூன்றாவது போட்டோவைத் தான் வைத்துக் கொண்டார்.
நூல் ராமானுஜனின் போட்டோவுடன் வெளியானது.
மிகப் பெரிய கணித மேதையான ராமானுஜனின் ஒரே போட்டோ இது தான். ஒரு வேளை, பிரிட்டனுக்குச் செல்லும் போது பாஸ்போர்ட்டுக்காக அவர் எடுத்த போட்டோவாக இது இருக்கலாம் என எண்ணப்படுகிறது.
இன்னொரு கணித மேதையான பால் எர்டோஸ் (1913-1996) இந்தியாவிற்கு இரு முறை சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டு இந்தியா வந்தார். தனக்குச் சொற்பொழிவுக்காக அளிக்கப்பட்ட பணத்தை அவர் ராமானுஜனின் விதவை மனைவிக்கு அனுப்பி உதவினார்.
***


You must be logged in to post a comment.