சுந்தரபாண்டியரின் நீதி த்விஷஷ்டிகா! (Post No7756)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7756

Date uploaded in London – – 29 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சுந்தரபாண்டியரின் நீதி த்விஷஷ்டிகா!

ச.நாகராஜன்

ஆசார்ய சுந்தரபாண்டியர் இயற்றியுள்ள நீதி த்விஷஷ்டிகா 120 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியுள்ள அருமையான நூல்!

த்வி, ஷஷ்டிகா என்ற நூலின் பெயரே இதில் 120 நீதிகள் அடங்கியுள்ளன என்பதைத் தெரிவிக்கிறது.

நீதிகளைப் புகட்டும் இந்த நூல் மனிதர்கள் வாழ்வாங்கு வாழ பல சமூக நீதிகளையும் தனி மனித ஒழுக்கத்தையும் அழகிய உதாரணங்களுடனும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை உள்ளடக்கியும் சொல்கிறது.

நீதி த்விஷஷ்டிகாவில் உள்ள பல்வேறு ஸ்லோகங்கள் பல கவிஞர்களாலும் பெரியோர்களாலும் எடுத்தாளப்பட்டு வந்திருக்கின்றன. ஆகவே இதன் மகிமை நமக்கு நன்கு புரிய வருகிறது.

ஆர்யா சந்தத்தில் அமைக்கப்பட்டுள்ளது இந்த நூல். அதனால் இதை ஆர்யாவளி என்றும் கூறுவதுண்டு. கடைசி ஸ்லோகம் மட்டும் அனுஷ்டுப் சந்தத்தில் உள்ளது.

சுந்தரபாண்டியரின் ஒரு ஸ்லோகம் (38) திபெத்தில் உள்ள ப்ரஸ்னோத்தர ரத்னமாலிகா சுவடியில் இடம் பெறுகிறது.

ஜனாஸ்ரயர் (கி.பி.580-615) தான் இயற்றியுள்ள ஜனாஸ்ரயி என்ற நூலில் ஒரு ஸ்லோகத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.

இன்னும் பல கவிஞர்கள் தாராளமாக நீதி த்விஷஷ்டிகாவின் ஸ்லோகங்களை மேற்கோளாகக் காட்டி வந்துள்ளனர்.

ஆசார்ய சுந்தரபாண்டியர் பற்றிய அதிகாரபூர்வமான தகவல்கள் இல்லை.

சுந்தரபாண்டியர் யார் என்பதிலும் அவர் எந்தக் காலத்தைச் சேர்ந்தவர் என்பதிலும் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஒரு சுந்தரபாண்டியன் என்பவன் சகல சாஸ்திரங்களிலும் வல்லவனான பாண்டிய  மன்னன். இந்த மன்னனே இதை இயற்றி இருக்கலாம் என மூத்த ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இன்னும் பல பண்டிதர்கள் சுந்தரபாண்டியர் என்ற பெயரைக் கொண்டிருந்தனர்.

பல்வேறு ஆராய்ச்சிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இவரது காலத்தை தோராயமாக ஆறாம் நூற்றாண்டிற்கு பிற்பட்டது, 13ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம்.

தமிழ் நூல்களான நாலடியார், மூதுரை, திருக்குறள், நீதிவெண்பா உள்ளிட்ட பல நூல்களில் உள்ள கருத்துக்களை சுந்தரபாண்டியர் பல இடங்களில் அப்படியே பிரதிபலிக்கக் காண்கிறோம். (காலத்தினால் பிற்பட்ட நூல்கள் எனில் பல, சுந்தரபாண்டியரின் கருத்துக்களை அப்படியே ஒத்திருக்கின்றன என்று கூறலாம்).

அதே போல பல சம்ஸ்கிருத சுபாஷிதங்களிலும் கூட சுந்தரபாண்டியரின் கருத்துக்கள் அப்படியே எதிரொலிக்கின்றன.

நீதி த்விஷஷ்டிகா – நூற்றிருபது நீதிகள் – என்ற தலைப்பில் காஞ்சி காமகோடி பீடத்தின் வெளியீடான காமகோடி ப்ரதீபம்  மாதப் பத்திரிகை இந்த 120 ஸ்லோகங்களை, ஸம்ஸ்கிருதம், தமிழில் ஸ்லோக மூலம், தமிழ் அர்த்தம் ஆகியவற்றுடன் 1977ஆம் ஆண்டு வெளியிட்டது.

1984ஆம் ஆண்டு Nitidvisastika என்ற ஆங்கில நூலை அடையாறு லைப்ரரி அண்ட் ரிஸர்ச் செண்டர் வெளியிட்டது. இதை ஆராய்ந்து தந்தவர் டாக்டர் S. ஜெயஸ்ரீ. ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஒரு சிறிய ஆய்வையும் இந்த நூல் கொண்டுள்ளது.(86 பக்கங்கள் கொண்டது இந்த நூல்).

நீதி த்விஷஷ்டிகாவை முழுமையாக இந்தக் கட்டுரையில் தர இடமில்லை என்றாலும் கூட சில ஸ்லோகங்களைக் கீழே காணலாம்;

ஹிமவதி திஷ்டத்யௌஷதம் உததௌ ரத்னம் விபாவஸௌ தேஜ: |

வைரமஸஜ்ஜநஹ்ருதயே ஸஜ்ஜந ஹ்ருதயே ஸதா க்ஷாந்தி: ||

மருந்து மூலிகைகள் (ஓஷதிகள்) இமயமலையில் உள்ளன. கடலில் ரத்னங்கள் உள்ளன.அக்னியில்  காந்தி இருக்கிறது. கெட்டவர் மனதில் பகை குடி கொண்டிருக்கிறது. நல்லோரின் மனதிலோ எப்போதும் அமைதி தான்!

Medicinal herbs are always found on the Himalayas; gems in the ocean and radiance in the Sun, enmity in the heart of the wicked and forbearance in the heart of the good. (Translation by Dr S. Jayasree)

*

பரபரிவாதநமூகா: பரதார நிரீக்ஷணேஷு ஜாத்யந்தா: |

யே பரரஹஸ்ய பதிரா: தே புருஷா தேவதா- ஸத்ருஷா: ||

பிறர்களை தூஷிப்பதில் ஊமை போலவும், பிறர் மனைவிகளைப் பார்ப்பதில் பிறவிக் குருடர்களாகவும், பிறர் ரஹஸ்யங்களைக் கேட்பதில் செவிடர்களாகவும் உள்ள மஹா புருஷர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்.

Those who are dumb in speaking ill of others, congenitally blind in looking at the wives of others, and who are deaf to other’s secrets, are equal to gods. (Translation by Dr S. Jayasree)

*

ஆலஸ்யம் த்யக்தவ்யம் லௌல்யம் லோப: பராபவாதஸ்ச |

அஸ்தாநேஷு ச கோப: ததாதிமாநஸ்ச புருஷேண ||

சோம்பல், சபலம், ஆசை, பிறரை தூஷிப்பது, அசாதாரணமாக கோபித்தல், அதிகமான அகங்காரம் ஆகிய இவற்றை மனிதன் விடுதல் வேண்டும்.

One should give up laziness, fickleness, covetousness, speaking ill of others, misplaced anger and excessive pride. (Translation by Dr S. Jayasree)

*

ந ச ஹஸதி நாப்யஸூயதி ந பராந் பரிபவதி நாந்ருதம் வததி |

நாக்ஷிப்ய கதாம் கதயதி லக்ஷணமேதத்குலீநஸ்ய ||

சிரிக்க மாட்டான், பொறாமைப்பட மாட்டான், மற்றவரை அவமதித்துப் பேச மாட்டான், போய் பேச மாட்டான். பிறர் பேசும்போது பிறரைத் தடுத்துப் பேச மாட்டான் – இதுவே நல்ல குலத்தில் பிறந்தவர்களின் லக்ஷணம்.

The characteristics of the noble-born are the following : He neither ridicules, nor feels jealous, neither insults nor utters a lie, nor does he indulge in abusive scandal (or talks interrupting others). (Translation by Dr S. Jayasree)

*

பஸ்யதி தீர்கம் க்ருத்யம் பீடாம் ஸஹதே பரம் ந பீடயதி |

அவமந்யதே ந கஸ்சித் லக்ஷணமேதத்குலீநஸ்ய ||

தான் செய்ய வேண்டியதை தீர்க்காலோசனையுடன் செய்வான்; துன்பத்தைத் தானே ஏற்றுக் கொள்வான் (பிறரைப் பீடிக்க மாட்டான்) ; ஒருவரையும் அவமதிக்க மாட்டான். –  இதுவே நல்ல குலத்தில் பிறந்தவர்களின் லக்ஷணம்.

These are the traits of one born in a noble family: He deliberates for long on a thing to be done; puts up with suffering; does not afflict others and does not humiliate any one. (Translation by Dr S. Jayasree)

*

120 நீதி ஸ்லோகங்களும் அருமையானவை என்பதால் அதைப் படிப்போரின் வாழ்க்கை முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை!

tags — சுந்தரபாண்டியர் ,நீதி த்விஷஷ்டிகா, சம்ஸ்கிருத ஸ்லோகங்கள், 120


Adi Shankara & Mysterious Sundara Pandya ! | Tamil and Vedastamilandvedas.com › 2014/08/02 › adi-shankara-mysterious-sundara-…

2 Aug 2014 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Adi Shankara & Mysterious Sundara Pandya !

****