
Post No. 9554
Date uploaded in London – –1 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
உலகத் தமிழர் பேரமைப்பு வெளியிட்ட நாலாம் ஆண்டு நிறைவு மாநாட்டு மலரரில் என் கட்டுரை 2006ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதன் போட்டோ காப்பியை நான் இந்த பிளாக்கில் வெளியிட்டேன். இப்பொழுது அதை சாதாரண வோர்ட் WORD வடிவில் வெளியிடுகிறேன்.எழுதியவர் பெயரையும், பிளாக்கின் பெயரையும் நீக்காமல் பலரும் வெளியிட்டால் தமிழ் வளரும்; தமிழர்கள் செழிப்படைவர்.
சுனாமி (TSUNAMI) என்னும் கடல்கோள் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட பின்னர் மக்கள் இதைப் பற்றி அறிய பெரிய ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் கடந்தகால கடல்கோள் (சுனாமி) தாக்குதல்கள் குறித்து நிறைய குறிப்புகள் உள்ளன.

கடலுக்குத் தமிழில் “முந்நீர்” என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் நாற்பது இடங்களில் “முந்நீர்” என்ற சொல் வருகிறது. (புறநானூற்றுப் பாடல்களில் 9, 13, 20, 30, 35, 60, 66,137, 154 முதலியன) “நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழில்கள் உடைமையின் முந்நீர்” என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகிறது. ஆகவே கடலின் அழிவு சக்தி குறித்தும் “சுனாமி” எனப்படும் இராக்கதப் பேரலைகள் குறித்தும், தமிழர்களுக்கு முன்பே தெரியும். நிலத்தைப் படைப்பதும் அழிப்பதும் கடல்தான்.
தமிழை வளர்க்க அமைக்கப்பட்ட முதலிரண்டு தமிழ்ச் சங்கங்களையும் கடல் விழுங்கியதால் தற்போதுள்ள மதுரையில் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இந்த சுனாமியை கடல்கோள் என்று பழைய உரைக்காரர்கள் குறிப்பர். தென் மதுரையையும் கபாடபுரத்தையும் கடல் விழுங்கியதால் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இறையனார் களவியலுரையும் அடியார்க்கு நல்லாரின் உரையும் இதைப்பற்றி விளக்கமாகப் பேசுகின்றன.
சங்கத் தமிழ் நூலான கலித்தொகையும் சங்கக் காலத்துக்குப்பின் எழுந்த சிலப்பதிகாரமும் பாண்டிய நாட்டின் தென் பகுதியை கடல் விழுங்கியதைப் பின்வருமாறு கூறுகின்றன:
“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர்கெண்டை,
வலியினால் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்” – கலித்தொகை 104
(முற்காலத்தில் கடல் பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. அருகில் உள்ள சேர சோழ நாடுகளை வென்று புலிக்கொடி வில்கொடியை நீக்கி அவைகளைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான்)
பஃறுளி யாற்றுடன் பன் மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு,
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி
– சிலப்பதிகாரம், காடுகாண் காதை:19-22
(கடல் சினந்து எழுந்து பஃறுளி என்னும் ஆற்றையும் பல மலைகளையும் குமரிக் கோட்டையும் மூழ்கடித்தது. அதற்குப் பின்னர் பாண்டிய மன்னன் வட்திசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றி கொண்டான்)
சிலப்பதிகாரத்தில் மற்றொரு பாடலுக்கு உரை எழுதிய அடி யார்க்கு நல்லார் 700 காதம் பரப்புடைய 49 நாடுகளைக் கடல் விழுங்கியதாகக் கூருகிறார். அந்த 49 நாடுகளின் (வட்டாரங்களின்) பெயர்களையும் நமக்கு அளிக்கிறார். தலைச்சங்க காலத்தில் தோன்றிய தமிழ் நூல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. இடைச்சங்கக் காலத்தில் எழுந்த தொல்காப்பியமும், வேறு சில பாடல்களும் மட்டும் நமக்குக் கிடைத்தன.
கொற்கையிலிருந்த தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டதைப் பிளினியும் (Pliny) குறிப்பிடுவதால் இந்த கடல்கோள்கள் கி. மு. முதலிரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டிருக்கலாம்.
பல சங்கப் பாடல்கள் சுனாமிக்குக் காரணமான நில அதிர்ச்சி குறித்தும் (Earth quake) கடல் எல்லை மீறுவது பற்றியும் பொதுவாக பாடுகின்றன.
“நிலம்புடை பெயரினும் நீர் திரிந்து பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும்”
– குறுந்தொகை 373
“நிலம், நீர், தீ ஆகியன அவைகளின் இயல்பான நிலையிலிருந்து மாறினாலும் கடல் எல்லை மாறுபட்டாலும்” என்று கூறுவதிலிருந்து இத்தைய இயற்கை மாற்றங்களை மக்கள் அறிந்தது தெரிகிறது.
“பெருநிலங்கிளறினும்” (நற்றிணை 201) “நிலம்புடை பெயர்வதாயினும்” (நற்றிணை 9) “நிலத்திறம் பெயருங்காலை யாயினும்” (பதிற்றுப்பத்து 63-6) “நிலம்புடை பெயர்வதாயினும்” (புறநானூறு 34-5) ஆகிய அடிகள் நில அதிர்வு பற்றியும் நிலம் அழிந்துபட்டு எல்லை மாறுவது பற்றியும் பேசுகின்றன.

வடவைத்தீயும் மடங்கலும்
கடலுக்கடியில் “வடவை” என்னும் தீ எரிந்து கொண்டிருப்பதாகவும் அது ஊழிக்காலத்தில் கடல் நீருடன் எழுந்து வந்து உலகை அழிக்கும் என்றும் சங்கநூல்களுக்கு உரை எழுதியோர் கூறுகின்றனர். வடவைத்தீயை “வடமுகாக்கினி” என்றும் அது குதிரை வடிவமுள்ள பெருந்தீ என்றும் வடமொழி நூல்கள் குறிப்பிடுகின்றன. “வடவை” என்பது கடலுக்கடியில் உள்ள எரிமலைகளா (Submarine Volcanos) என்று தெரியவில்லை. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் ராட்சதப் பேரலைகள் வந்து ஆயிரக் கணக்கானோரை உயிர்ப்பலி கொண்டபோது மர்மத்தீ ஒன்று கடலில் தோன்றியது. இது புயலின் போது பேரலைகளின் உராய்வினால் ஏற்பட்ட மின்சார சக்தி என்று அப்போது விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தனர். இதுதான் வடவை தீயா என்றும் தெரியவில்லை. ஆனால் வடவைத் தீ தோன்றும் போது கடல் பொங்கி எழுந்து நாட்டை அழிக்கும் என்று புலவர்கள் நம்பியது உறுதியாகத் தெரிகிறது.
BIG BANG AND BIG CRUNCH
சங்க இலக்கியத்தில் வரும் மற்றொரு சொல் “மடங்கல்”. இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் ஊழிக்காலத்தில் உலகம் மடங்கிப் போவதை (அழிவதை) இப்படிக் கூறிவதாக எழுதியுள்ளனர். இப்படிப் பிரபஞ்சம் உருவானதற்கு மாபெரும் வெடிப்பு (Big Bang) காரணம் என்று கூறும் வானநூல் அறிஞர்கள் இது ஒரு சுருங்கி (மடங்கி) அழியும் (Big Crunch) என்றும் கூறுகின்றனர். இந்த விளக்கம் சங்கக் காலத்திலேயே இருப்பது வியப்புக்குறியது. (மடங்கல்: பரிபாடல் 1-47, 3-8, கலித்தொகை 2-3, 105-20, 120-8, 122-1, பதிற்றுப்பத்து 62-8 முதலியன)
பாண்டியனும் பரசுராமனும்
தமிழ்ச் சங்கத்தை அழித்த கடற்கோளுக்குப் பாண்டியனின் செயல்தான் காரணம் என்று பாடல் கூறுகிறது. (சிலப்பதிகாரம் XI 11-17) வடிம்பலம்ப நின்ற பாண்டியன் தனது பாதச்சுவடுகள் போல செய்து அதை கடல் கழுவும்படி கடற்கரையில் வைத்ததாகவும் கடல் பொங்கியபோது வேலை எரிந்து அதை அடக்கியதாலும் கடலுக்குக் கோபம் ஏற்பட்டதாகச் சிலப்பதிகாராமும் திருவிளையாடல் புராணமும் கூறும். இவை பழங்காலச் சடங்குகளையும் நம்பிக்கையையும் காட்டுகின்றன. ஆனால் கடல் பொங்கி நாட்டை அழித்தது உண்மை. இக்கதைகளை புராணக் கதைகள் என்று சொல்லி ஒதுக்கி விடாமல் அதன் பின்னுள்ள உண்மைகளை உய்த்தறிவது நம் கடமை. தென்கிழக்கு ஆசியாவில் கூட கடற்கரையில் மன்னர்கள் பாதங்களைச் (அடிச்சுவடு) செய்து வழிபடும் வழக்கம் இருந்தது. காளிதாசன் என்ற மாபெரும் வடமொழிக் கவிஞனும் சிவனின் பாதச்சுவடுகளைக் குறிப்பிடுவான். இன்றும் இலங்கையில் சிவனின் – புத்தரின் பாதச்சுவடுகள் உள்ளன.
பரசுராமன் (விட்டுணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று) கேரளத்துக்கு வந்தபோது கடலும் மலையும் ஒட்டியிருந்ததாம். பரசுராமனின் வேண்டுகோளுக்கிணங்கி கடல் பின்னோக்கிச் சென்று கேரள மாநிலத்தை அவருக்கு வழங்கியதாகவும் புராணங்களும் கேரள மகாத்மியங்களும் கூறுகின்றன. இதிலுள்ள அறிவியல் உண்மை என்னவென்றால் கடல் சுவற வேல்விட்ட பாண்டியன் ஆட்சி செய்த காலாத்தில் தமிழ்நாட்டிலும் பரசுராமன் வந்தபோது கேரளத்திலும் கடல் பின்வாங்கிச் சென்றது என்பதுதான். கடல் எல்லை மாறி நிலம் வெளிப்பட்ட புவியியல் மாற்றம்தான் இப்படி புராணக்கதைகளாக மாறிவிட்டன .
(அகத்திய முனிவர் விந்திய மலையை பங்கம் செய்தார், கடலைக் குடித்தார் என்பதெல்லாம் அவர் நிலம் வழியாக தென்னிந்தியாவுக்கு வந்து தென்கிழக்கு ஆசியாவரை சென்று நாகரிகத்தை நிலைநாட்டினார் என்பதையே கூறுகிறது)
இராவணன் மலையை தூக்கியதாகவும் சிவபெருமான் கோபம் கொண்டு அவன் கைகளையும் தலையையும் நசுக்கிப் பின்னர் அவன் மன்னிப்புக் கேட்டு ஓடியதாகவும் ஒரு கதை (தேவாரப் பாடல்களிலும் புராணத்திலும்) உள்ளது. ராமனின் தண்டனை பொறுக்காமல் சீதையை பூமாதேவி நிலத்தைப் பிளந்து அழைத்துச் சென்றதாகவும் இராமாயணம் கூறுகிறது. இவை எல்லாம் அந்தந்த காலத்தில் நடந்த பூகம்பங்கள்தான். (Earth quakes) காலப்போக்கில் ஏதாவது இரண்டு நிகழ்ச்சிகளை தொடர்புபடுத்தி மக்கள் கதை கட்டிவிடுகின்றனர். தற்காலத்தில் கூட ஒருவர் தேர்தலில் படுதோல்வி அடைந்தால், ‘மண்ணைக் கவ்வினார்’, ‘மூக்குடைப்பட்டார்’, ‘முகத்தில் கரிபூசிக் கொண்டார்’, ‘பலத்த அடி வாங்கினார்’ என்றெல்லாம் பத்திரிக்கைகள் எழுதும். ஆனால் இவைகளின் உண்மைப் பொருள் என்ன என்று எல்லாருக்கும் விளங்கும்.
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனின் பாடல் புறநானூற்றில் உள்ளது. இந்த பாண்டிய மன்னன் சுனாமியில் இறந்தானா அல்லது கடற்படையெடுப்பில் இறந்தானா என்பது ஆராய்ச்சிக்குரிய செய்தி.
ஊழிக்காலத்தில் கடல் பொங்கி எழுவதைத் தாயங்கண்ணனார் (புறம் 397) இப்படிப் பாடுகிறார்.
பசும்பொன் னுலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல – பரிபாடல் 2-1/4
ஊழியின் இறுதியில் உலகம் முழுதும் இருள் பரவிக் கடல் பொங்கி எழுந்து நிலப்பகுதிகளை எல்லாம் மூழ்கடிக்கும். என்றும் பின்னர் பன்னிரு சூரியர்களும் வடவைத் தீயும் தோன்றி நீரை வற்றச் செய்யும் என்றும் அரிசில் கிழார் எழுதிய பாடலுக்கான (பதிற்றுப் பத்து 72-8/16) உரை கூறுகிறது. மற்றொரு பாடல் (62-5) மடங்கல் பற்றி விரிவாகக் கூறுகிறது. இறைவனிட்ட சாபத்தால் கடற்கோள் தோன்றும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

வானவன் விழாக்கோண் மாநகரொழிந்தது
மணிமேகலா தெய்வ மற்றது பொறாஅள்
அணிநகர்தன்னை யலைகடல் கொள்கென
விட்டனள் சாபம் பட்டதிதுவால்
இந்திர விழாவை மன்னன் கொண்டாடா விட்டால் மன்னனது நாட்டை கடல் அழிக்கும் என்பது இதன் பொருள்.
வராகவதாரத்தில் விட்டுணு பன்றி (Wild Boar) வடிவம் கொண்டு பூமியை கடலிலிருந்து மீட்டதாக கூறுவதும் புவியியல் மாற்றத்தையே (Geological Change after the Ice Age) . கடல் நீரால் மூடியிருந்த உலகில் நீர் வடிந்து நிலப்பகுதி வெளியானது என்ற உண்மையைத்தான் புராணக்கதை வழியாகத் தருகிறார்கள். இது போன்ற பல உண்மைகள் சங்க இலக்கியத்தில் மறை பொருளாகக் கூறப்பட்டுள்ளன. அவைகளை பகுத்தறிவது நம் கடமை.
Xxxxx subham xxxxx

tags- சுனாமி, சங்க இலக்கியம், கடல்கோள், பஃறுளி , குமரிக்கோடு,
வடவைத் தீ , மடங்கல், முந்நீர்


































You must be logged in to post a comment.