ஏலேல சிங்கன் கதை!

maritime trade

எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1238; தேதி 17 ஆகஸ்ட் 2014.

“ஏலேலசிங்கனின் பொருள் ஏழுகடல் போனாலும் திரும்பும்” – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழிக்குப் பின்னால் சுவையான ஒரு கதை உண்டு.

தமிழ் வேதமாகிய திருக்குறளை நமக்குத் தந்த திருவள்ளுவரின் புரவலர் ஏலேல சிங்கன். அவர் பெரும் கடல் வணிகர். ஏராளமான செல்வத்தைக் குவித்தவர். ஆயினும் அந்தச் செல்வத்தை அறவழிகளில் செலவிட்டார். திருவள்ளுவரையும் ஆதரித்தார். இவரைப் பற்றி செவிவழியாக வந்த பல செய்திகளைச் சுருக்கமாக தமிழ் என்சைக்ளோபீடியா ‘அபிதான சிந்தாமணி’ தருகிறது.

திருவள்ளுவர் நெசவுத் தொழில் செய்து வந்தார். இவரிடம் நூல் வாங்கப்போவது வழக்கம். ஒருநாள் ஏலேலசிங்கன் வீட்டுக்குப் போனார். அவர் சிவபூஜையில் இருப்பதாச் சொல்லி வள்ளுவரை வீட்டு வாசலிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர். வள்ளுவர் உடனே புன்சிரிப்புடன், அவர் குப்பத்தில் பூஜை செய்கிறாரா அல்லது வீட்டு அறையில் பூஜை செய்கிறாரா? என்று கேட்டார். இதைக் கேட்ட ஏலேலசிங்கன் அவரிடம் ஓடி வந்து வெட்கத்துடன் நின்றார். அதாவது த்ரிகால முனிவரான வள்ளுவருக்கு ஏலேலசிங்கன் மனம் அலைபாய்வதும், அலைகடலில் வரும் கப்பல் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதும் தெரிந்துவிட்டது. உடல் பூஜை அறையில் இருந்தாலும் உள்ளம் கப்பல் வணிகத்தில் உலா வந்தது. அன்று முதல் வள்ளுவரை அவர் ஆன்மீக குருவாக ஏற்றார்.

indian ship

ஒரு முறை ஏலேலசிங்கனின் பொருட்களை ஏற்றி வந்த கப்பல் தரை தட்டியது. வள்ளுவரிடம் ஓடோடி வந்து வழி ஏதும் உண்டா என்று கேட்டு விழி பிதுங்க நின்றார். அறவழியில் சேர்த்த பொருள் ‘போ’ என்றாலும் போகாது என்பது வள்ளுவருக்குத் தெரியும். ஆகவே ஏலேலசிங்கன் பெயரைச் சொல்லி கப்பலை கயிறு கட்டி இழுக்கச் சொன்னார். கப்பல் கரை சேர்ந்தது. அதிலிருந்துதான் கடலில் செல்லுவோர் பாதுகாப்பாகச் சென்று திரும்ப ‘’ஏலேல ஐலசார்’’ என்று கோஷம் இடும் வழக்கம் வந்ததோ என்று எண்ண வேண்டி இருக்கிறது!!

திரும்பி வந்த தங்கம்

ஏலேல சிங்கனிடம் ஏராளமான பொருட் செல்வம் குவியவே அதைத் தங்க கட்டிகளாக மாற்றி வைத்திருந்தார். அற வழிகளில் செலவிட்டது போக எஞ்சியதைக் கடலில் கொண்டு போட்டு விட்டார். சில காலம் கழித்து மீனவர்கள் பலர் அவர் வீட்டை நோக்கி ஓடி வந்தனர். அவர்கள் பிடித்த சுறாமீனின் வயிற்றில் தங்கக் கட்டிகள் இருந்ததாகவும் அதில் ஏலேல சிங்கனின் பெயர் பொறிக்கப் பட்டிருப்பதால் திருப்பிக் கொடுக்க ஓடிவந்த தாகவும் சொன்னார்கள். வள்ளுவர் வாய்மொழிப்படி வாழ்க்கை நடத்தினால் செல்வத்தை ‘’போ, போ’’ என்று விரட்டினாலும் போகாது!!
இதை ஒட்டித்தான் வள்ளுவனும் பாடினான்:

Vashishtiputra_Shri_Pulumavi
Satavahana coin with Indian ship

அழக்கொண்ட எல்லாம் அழப் போம், இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை (குறள் 659)

பிறர் கண்ணீர் சிந்துமாறு அழ, அழ பொருட்களைச் சேர்த்தால் அவர்களுடைய பொருட்கள் எல்லாம் அவர்களை அழ, அழ வைத்துவிட்டு ஓடிப் போகும். ஆனால் தூய்மையான வழியில் வந்த பொருட்களை, ஒருவர் இழந்தாலும், பின்னர் நல்லபடியாகவே முடியும் (குறள் 659)

இலங்கையில் ஏலேரா என்றொரு தமிழ் மன்னன் நீதியும் நேர்மையுமிக்க சீர் மிகு ஆட்சி நடாத்தினான். அவனை மனுநீதிச் சோழன் என்பாரும், ஏலேலா (காண்க: கல்கியின் பொன்னியின் செல்வன்) என்பாரும் உளர். ஆயினும் ஒரே பெயரில் பலர் இருந்ததால் இந்திய சரித்திரத்தில் இன்று வரை குழப்பம் நீடித்து வருவதை நாம் அறிவோம்.

sailing ship pics 1600X1200

வள்ளுவர் இறந்த பின்னர் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்தது ஏலேலன் என்றும் அவருக்கு மயிலையில் கோயில் எழுப்பித்தவன் ஏலேலன் என்றும் செவிவழிச் செய்திகள் கூறும்.

–சுபம்–